top of page
Search

செவிக்குண வில்லாத போழ்து ... 412, 416, 411, 27/04/2024

27/04/2024 (1148)

அன்பிற்கினியவர்களுக்கு:

கல்லாமை அதிகாரத்தைத் தொடர்ந்து கேள்வி. பழமொழி நானூறில் கற்றலின் கேட்டலே நன்று என்கிறார் முன்றுரையரையனார்.

 

நன்கு கற்க வேண்டும் என்று நினைப்பவர், தாமே தம் முயற்சியால் கற்கும் நூல்கள் மட்டுமே போதும் என்று கிணற்றுத் தவளையாக இருக்க மாட்டார். அறிஞர் பெருமக்களிடம் உண்மைப் பொருளைக் கேட்டும் தெளிவு பெறுவார்.

 

கற்றலின் கேட்டலே நன்று!

 

பருகுவதற்கு உரிய இனிய நீர், இதோ நான் இருக்கும் இந்தக் கிணற்றில் தவிர வேறெங்கும் இல்லை என்னும் தவளையைப் போல இருக்க மாட்டார்; நூல்களை அல்லும் பகலும் வருந்திப் படித்துத் தாமே கற்க முயல்வதைக் காட்டிலும் கற்றிந்த பெருமக்களிடம் கேட்டுத் தெளிவு பெருதலே நன்று என்ற பழமொழி நானூறு பாடலை நாம் முன்பே பார்த்துள்ளோம். காண்க 05/06/2023.

 

ஐயம், திரிபற கற்க வேண்டும் என்றால் கேள்வி ஞானம் மிக மிக முக்கியம். எனவே, கல்லாமையை அடுத்து கேள்வி என்னும் அதிகாரத்தை வைக்கிறார்.

 

முதல் பாடலில் செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் என்றார். காண்க 11/07/2023. மீள்பார்வைக்காக:

 

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ் செல்வத்து ளெல்லாந் தலை.  – குறள் 411; -  கேள்வி

 

நல்ல கருத்துகள் காதுகளில் விழுந்து கொண்டே இருக்க வேண்டும்.

எனைத்தானும் நல்லவை கேட்க என்றார் குறள் 416 இல். காண்க 06/03/2021. மீள்பார்வைக்காக:

 

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்

ஆன்ற பெருமை தரும். – 416; - கேள்வி

 

செவிக்கு உணவில்லாத போழ்து வேறு வேலை ஏதாவது இருப்பின் பார்க்கலாம் என்கிறார்.

 

செவிக்குண வில்லாத போழ்து சிறிது

வயிற்றுக்கும் ஈயப் படும். – 412; - கேள்வி

 

செவிக்கு உணவு இல்லாத போழ்து =செவிக்கு நல்ல கருத்துகள் வந்து விழுந்து கொண்டே இருக்கும் போழ்து நம் கவனம் சிதறுதல் கூடாது. அக் கருத்துகள் வந்து விழுவதில் சற்று இடைவெளி கிடைக்குமாயின்; வயிற்றுக்கும் சிறிது ஈயப்படும் = அப்பொழுது வேண்டுமானால், நம் வயிற்றுப் பசி உள்ளிட்ட ஏனைய பசிகளுக்குக் கொஞ்சம் உணவிடலாம்..

 

செவிக்கு நல்ல கருத்துகள் வந்து விழுந்து கொண்டே இருக்கும் போழ்து நம் கவனம் சிதறுதல் கூடாது. அக் கருத்துகள் வந்து விழுவதில் சற்று இடைவெளி கிடைக்குமாயின், அப்பொழுது வேண்டுமானால், நம் வயிற்றுப் பசி உள்ளிட்ட ஏனைய பசிகளுக்குக் கொஞ்சம் உணவிடலாம்.

 

காதைத் திறந்து வைப்போம்!

 

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.




 

Post: Blog2_Post
bottom of page