top of page
Search

துறந்தார்க்குத் துப்புரவு ... 263, 264

21/12/2023 (1020)

அன்பிற்கினியவர்களுக்கு:

குறள் 262 இல் தவத்திற்கு மன உறுதி வேண்டும் என்றார்.  ஓய்வெடுக்கும் பருவம் வந்தபின்னும், சிலர் இந்த தவ முயற்சிகளைச் செய்யாமல் இருக்க காரணம் என்னவாக இருக்கும் என்று ஒரு கேள்வி கேட்டு அவரே பதில் சொல்கிறார். அதையும் கேள்வியாகவே சொல்கிறார். அதிலே கொஞ்சம் கிண்டல் இல்லாமல் இல்லை. அந்தக் குறளைப் பார்ப்போம்.

 

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்

மற்றை யவர்கள் தவம். – 263; - தவம்

 

துப்புரவு = அனுபவிக்கப்படுவன =  இருக்க இடம், உண்ண உணவு, உடுக்க உடை உள்ளிட்டவை;

மற்றையவர்கள் = ஓய்வெடுக்க வேண்டிய பருவத்திலும் இல்லறத்திலேயே நிற்பவர்கள்; துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி தவம் மறந்தார்கொல் = ஓய்வெடுக்கச் செல்பவர்களின் தேவைகளைத் தாம் தாம் நிறைவு செய்ய வேண்டும் என்று நினைத்துத் தமது தவத்தை மறந்துவிட்டார்களா என்ன?

 

ஓய்வெடுக்க வேண்டிய பருவத்திலும் இல்லறத்திலேயே நிற்பவர்கள், ஓய்வெடுக்கச் செல்பவர்களின் தேவைகளைத் தாம் தாம் நிறைவு செய்ய வேண்டும் என்று நினைத்துத் தமது தவத்தை மறந்துவிட்டார்களா என்ன?

 

தானத்தைப் பெரிதென நினைத்து தவத்தை மறந்தார்களா? என்று வினவுகிறார். இதிலே ஒரு கிண்டல் தொனி இருப்பதாகவே தோன்றுகிறது.

 

அடுத்து வரும் குறள் சற்று சிக்கலான குறளாக உள்ளது. அஃதாவது, இல்லறத்தில் இருந்து விலகி நின்று தவம் செய்வார் நினைத்தால் பகைவரை அழிக்கலாம் நண்பரை உயர்த்தலாம் என்று பொருள் படும்படி அமைந்துள்ளது.

 

இது எங்ஙனம்? பற்றுகளைவிடத்தானே இந்த தவ முயற்சி? அதில் என்ன பகை நட்பு என்னும் பிரிவினை?

 

குறளைப் பார்ப்போம்.

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை யாக்கலும்

எண்ணின் தவத்தான் வரும். – 264; - தவம்


ஒன்னார் = பகைவர்; தெறல் = கெடுத்தல்; ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் = பகைவரை அழித்தலும் நண்பரை உயர்த்தலும்;  எண்ணின் தவத்தான் வரும் = நினைத்த மாத்திரத்தில் தவத்தால் கூடும்.

 

பகைவரை அழித்தலும் நண்பரை உயர்த்தலும் நினைத்த மாத்திரத்தில் தவத்தால் கூடும்.

 

மேற்கண்டவாறுதான் அறிஞர் பெருமக்கள் பலர் உரை காண்கிறார்கள். எனக்குச் சற்று நெருடலாகவே உள்ளது.

 

இங்கு சொல்லப்படும் தவ முயற்சி அருளை நோக்கிய முயற்சி. இதிலே ஆக்கலும் அழித்தலும் பயன் என்றால்? சரியாகத் தோணவில்லை.

 

எனக்கு எப்படிப்படுகிறது என்றால் இந்தப் பகைவரை அழித்தல் வேண்டியவர்களைத் தாங்குதல் எல்லாம் இல்லறத்தில் வாழும் பருவத்தில் இயல்பாகச் செய்வன. நாம் நடுவு நிலைமையில் நில்லாமல் ஏதோ ஒரு பக்கமாகவே சாய்ந்து இவ்வளவு காலம் கடத்தி விட்டோமே என்று எண்ணும்போது ஒய்வெடுக்கும் இந்தப் பருவத்திலாவது பற்று அற்று இருக்கும் இந்த தவம் தானே வரவேண்டும் என்பது போல் தோன்றுகிறது.  

 

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் எண்ணின் = இல்லறத்தின் வாழும் பருவத்தில் இருந்தபோது பகைவரை அழித்தலும் நண்பரை உயர்த்தலுமான செயல்களைச் செய்ததை நினைத்துப் பார்ப்பின்; தவம்தான் வரும் = இனிமேல் அவ்வாறு இருக்கக் கூடாது என்ற மன உறுதி தானே வரும்.

 

இல்லறத்தின் வாழும் பருவத்தில் இருந்தபோது பகைவரை அழித்தலும் நண்பரை உயர்த்தலுமான செயல்களைச் செய்ததை நினைத்துப் பார்ப்பின் இனிமேல் அவ்வாறு இருக்கக் கூடாது என்ற மன உறுதி தானே வரும்.

 

உங்கள் கருத்து என்ன?

 

பி.கு: தெறல் என்றால் கெடுத்தல். தெறட்டிப் பால் என்கிறார்களே அது பாலைக் கெடுத்து உண்டாக்குவதால் அவ்வாறு அழைக்கிறார்களோ?

 

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




 

Post: Blog2_Post
bottom of page