top of page
Search

துறந்தாரின் தூய்மை 159, 261, 160

31/10/2023 (969)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

சிலர் இல்லறத்தைவிட துறவறம்தான் உயர்ந்தது என்று சொல்லலாம். ஆனால், இரண்டுமே தத்தம் நிலைகளில் உயர்ந்ததுதான் என்கிறார். இன்னும் சொல்லப் போனால் இல்லறத்தான் சிலவற்றை ஒழுகினால் துறந்தாரைவிட உயர்ந்தவர் என்று போற்றப்படவும் கூடும் என்கிறார்.


இதற்கு முதல் தகுதி பொறுமை. அதிலும் வரம்பு கடந்து வசை பாடுபவர்களையும் பொறுத்துக் கொள்ளுதல் என்கிறார். சொல் உடனே பிறக்கும். அதற்குச் செலவும் இல்லை. ஆனால், அது நம் வாயைவிட்டு வெளியே சென்றுவிட்டால் அதன்பின் நாம் அதற்கு அடிமை. ஆகவே, சொல்லில் பொறுமையோடு இருப்பவர்கள் துறந்தவர்களைவிடத் தூய்மையானவர்கள் என்கிறார்.

துறந்தாரின் தூய்மை யுடையார் இறந்தார்வாய்

இன்னாச்சொல் நோற்கிற் பவர்.” --- குறள் 159; அதிகாரம் – பொறையுடைமை


இறப்பு= கொடுந்துன்பம்; இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற்பவர் = கொடுந்துன்பம் இழைக்கும் தீச்சொல்களைச் சொல்பவர்களைப் பொறுப்பவர்கள்; துறந்தாரின் தூய்மை உடையார் = எல்லாம் நீத்து தூய்மையாக இருப்பவர்களைவிடத் தூய்மையானவர்கள்.


கொடுந்துன்பம் இழைக்கும் தீச்சொல்களைச் சொல்பவர்களைப் பொறுப்பவர்கள், எல்லாம் நீத்து தூய்மையாக இருப்பவர்களைவிடத் தூய்மையானவர்கள்.


துறந்தவர்களுக்குப் பொறுமை ஏற்கெனவே வசப்பட்டிருக்கும். ஆனால், இல்லறத்தில் இருப்பவர்களுக்கு அழுத்தங்கள் அதிகம். அவர்கள் பொறுமையாக இருப்பது சிறப்பினும் சிறப்பு என்கிறார்.


நோற்றல் என்றால் பொறுத்தல், தவம் செய்தல் என்று பொருள். ஞானியருக்கு நோற்றல் இயல்பு.


துறவறவியலில் தவத்திற்கு இலக்கணம் சொல்கிறபோது, உண்டி சுருக்குதல் முதலானவற்றைச் செய்யும்போது தமக்கு ஏற்படும் துன்பங்களைப் பொறுப்பதும் மற்ற உயிர்களுக்கு எந்தவித தீங்கும் செய்யாமல் இருப்பதே தவத்திற்கு இலக்கணம் என்கிறார்.

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை

அற்றே தவத்திற் குரு.” --- குறள் 261; அதிகாரம் – தவம்


உற்ற நோய் = துறவிற்கு விதிக்கப்பட்ட உண்டி சுருக்குதல் முதலான துன்பங்களை; நோன்றல் = பொறுத்தல்; உயிர்க்கு உறுகண் செய்யாமை = பிற உயிர்களுக்குத் துன்பங்களைச் செய்யாமை; அற்றே தவத்திற்கு உரு = ஆகியவையே தவத்திற்கு இலக்கணமாம்.


துறவிற்கு விதிக்கப்பட்ட உண்டி சுருக்குதல் முதலான துன்பங்களைப் பொறுத்தல், பிற உயிர்களுக்குத் துன்பங்களைச் செய்யாமை, ஆகியவையே தவத்திற்கு இலக்கணமாம்.


கடுமையானத் துன்பங்களைப் பொறுத்தல் என்பது துறவிற்கு இலக்கணம்.


துறவிகள் பல காலம் உண்ணாமல் புலன்களைத் தன் வழிக்குக் கொண்டுவரப் பழகுவார்கள். அது அவர்களுக்கு விதிக்கப்பட்டது. அதில் ஒன்றும் பெருமையில்லை.


இன்பக்கடலில் இருந்து கொண்டே பொறுமையாக இருப்பது, புலன்களைக் கட்டுக்குள் வைப்பது பெரும் சிறப்பு இல்லையா? எனவே, இவர்களின் பெருமை துறந்தவர்களின் பெருமைக்குப் பின் என்கிறார்.


உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்

இன்னாச்சொ னோற்பாரிற் பின்.” --- குறள் 160; அதிகாரம் – பொறையுடைமை


உண்ணாது நோற்பார் பெரியர் = உண்ணாமல் புலன்களை அடக்கி அதனால் வரும் துன்பங்களைப் பொறுப்பவர்களான துறவிகள் உயர்ந்தவர்கள்தாம்; பிறர் = அறிவில்லாதார்; சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின் = (அதே சமயம்) இல்லறத்தில் இருந்துகொண்டு அறிவில்லாதார் சொல்லும் கொடுஞ்சொற்களைப் பொறுத்து கடந்து செல்பவர்களுக்குப் பின்தாம் துறந்தார்களை வரிசைப்படுத்த வேண்டும்.


உண்ணாமல் புலன்களை அடக்கி அதனால் வரும் துன்பங்களைப் பொறுப்பவர்களான துறவிகள் உயர்ந்தவர்கள்தாம். அதே சமயம், இல்லறத்தில் இருந்துகொண்டு அறிவில்லாதார் சொல்லும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கடந்து செல்பவர்களுக்குப் பின்தாம் துறந்தார்களை வரிசைப்படுத்த வேண்டும்.


பொறுமையைக் கடைபிடிப்பது என்பது சொல்லில் ஆரம்பிக்கட்டும்!


மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.





Post: Blog2_Post
bottom of page