top of page
Search

தன்னுயிர் தானற ... 268, 269

24/12/2023 (1023)

அன்பிற்கினியவர்களுக்கு:

நம் அனுபவங்கள் ஏனைய உயிர்களுக்கு வழிகாட்டினால் அம்மன்னுயிர்கள் எல்லாம் தொழும் என்றார். அனுபவப் பகிர்வு அடுத்தவர்களை அடுத்தக் கட்டத்திற்கு எளிதில் கடத்தும்.

 

எல்லாரும் கையைச் சுட்டுக் கொள்ளத் தேவையில்லையே! அனுபவங்கள் கல்வியினாலும், கேட்பதாலும், உற்று நோக்குவதாலும், நாமே செய்து பார்ப்பதாலும் இப்படி பல வழிகளில் நிகழலாம். இதில் நாமே எல்லாவற்றையும் செய்து பார்த்துக் கற்றுக் கொள்வது என்பது பெரும் சிறப்பானதல்ல. அறிஞர் பெருமக்களின் அனுபவங்களைக் கொள்முதல் செய்வது என்பது ஒரு பாய்ச்சலாக (Quantum leap) அமையும். அவற்றிலிருந்து நாம் முயல்வது அடுத்த நிலைக்குச் சுலபமாகச் செல்லும் வழி.

 

சரி, நாம் குறளுக்கு வருவோம்.

 

தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய

மன்னுயி ரெல்லாந் தொழும். – 268; - தவம்

 

தன்னுயிர் தான் அறப்பெற்றானை = நான் எனது என்று சுருங்கி வாழ்ந்திருந்தை விலக்கி எல்லா உயிரும் தன்னுயிர்ப்போல பாவித்தால், அருளைச் செலுத்தினால்; ஏனைய மன்னுயிர் எல்லாம் தொழும் = ஏனைய உயிர்கள் எல்லாம் வாழ்த்தும்.

 

நான் எனது என்று சுருங்கி வாழ்ந்திருந்தை விலக்கி எல்லா உயிரும் தன்னுயிர் போல பாவித்தால், அருளைச் செலுத்தினால் ஏனைய உயிர்கள் எல்லாம் வாழ்த்தும்.

 

இதுபோன்ற அருளாளர்களை நோக்கினால் அவர்களின் அனுபவம் நம் அனுபவமாக மாறும். இதுதான் குரு சன்னிதானம் என்கிறார்கள். இதைக் குறித்து முன்பொருமுறை சிந்தித்துள்ளோம். காண்க 01/11/2021.

 

அனுபவங்களை வசப்படுத்தல் வேண்டும். அவ்வாறு நிகழும்போது நாம் அவர்களை வாழ்த்தாமல் இருக்கமுடியுமா என்ன? வாழ்த்துவோம்.

 

காலம் கடந்தும் வாழ முடியுமா? முடியும் என்கிறார் நம் பேராசான். புகழுடல் என்றும் வாழும். உருவம் மாறி இருக்கும் அவ்வளவே.

நாம் மகாகவி பாரதியின் கவிதை ஒன்றை சுவைத்துள்ளோம். மறுபார்வைக்காக:

 

மண்ணிலும் வானந்தானே நிரம்பி யிருக்கின்றது?

மண்ணைக் கட்டினால் அதிலுள்ள வானத்தைக் கட்டியதாகாதா?

 

உடலைக் கட்டு, உயிரைக் கட்டலாம்,

உ.யிரைக் கட்டு, உள்ளத்தைக் கட்டலாம்.

உள்ளத்தைக் கட்டு, சக்தியைக் கட்டலாம்.

அந்தந்த சக்திக்கு கட்டுப்படுவதிலே வருத்தமில்லை.

 

என்முன்னே பஞ்சுத் தலையணை கிடக்கிறது.

அதற்கு ஒரு வடிவம், ஓரளவு நியமம் ஏற்பட்டிருக்கின்றது.

இந்த நியமத்தை, அழியாதபடி, சக்தி பின்னே நின்று

காத்துக் கொண்டிருக்கிறாள்.

 

மனித ஜாதி இருக்குமளவும் இதே தலையணை

அழிவெய்தாதபடி காக்கலாம். அதனை அடிக்கடி புதுப்பித்துக் கொண்டிருந்தால்,

அந்த வடிவத்திலே சக்தி நீடித்து நிற்கும்.

 

புதுப்பிக்காவிட்டால் அவ் வடிவம் மாறும்.

அழுக்குத் தலையணை, ஓட்டைத் தலையணை,

பழைய தலையணை - அதிலுள்ள பஞ்சையெடுத்துப்

புதிய மெத்தையிலே போடு.

மேலுறையைக் கந்தையென்று வெளியே எறி,

அந்த வடிவம் அழிந்து விட்டது.

 

வடிவத்தைக் காத்தால், சக்தியைக் காக்கலாம்.

அதாவது சக்தியை, அவ்வடிவத்திலே காக்கலாம்.

 

வடிவம் மாறினும் சக்தி மாறுவதில்லை எங்கும், எதனிலும், எப்போதும்,

எல்லாவிதத் தொழில்களும் காட்டுவது சக்தி.

 

வடிவத்தைக் காப்பது நன்று, சக்தியின் பொருட்டாக,

சக்தியைப் போற்றுதல் நன்று. வடிவத்தைக் காக்குமாறு

 

ஆனால் வடிவத்தை மாத்திரம் போற்றுவோர் சக்தியை இழந்துவிடுவர்.” - மகாகவி பாரதியார்

 

சக்தி என்ற சொல்லைக் கவனத்தில் வைப்போம்.

 

தவம் நோற்றலினால் ஆற்றலைப் பெருக்குபவர்களுக்குக் கூற்றம் குதித்தலும் கைகூடும் என்கிறார் நம் பேராசான். அஃதாவது, காலம் கடந்தும் வாழலாம். தலையணையின் (pillow) வடிவம்தான் மாறி இருக்கும். அவ்வளவே. ஆற்றல் இயங்கிக் கொண்டே இருக்கும்.

 

கூற்றம் குதித்தலுங் கைகூடும் நோற்றலின்

ஆற்றல் தலைப்பட் டவர்க்கு. - 269; - தவம்

 

கூற்று = சொல், இறுதி, முடிவு, எமன்; கூற்றம் = இறுதிக் காலம், அழியும் காலம், மறையும் காலம்; நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு = தவ வழியில் தன்னைச் செலுத்தி ஆற்றலைப் பெருக்கி, அந்த அனுபவத்தைக் கடத்துபவர்களுக்கு; கூற்றம் குதித்தலும் கைகூடும் = காலம் கடந்து வாழ்வதும் கைகூடும்.

தவ வழியில் தன்னைச் செலுத்தி ஆற்றலைப் பெருக்கி, அந்த அனுபவத்தைக் கடத்துபவர்களுக்குக் காலம் கடந்து வாழ்வதும் கைகூடும்.


வடிவம் மாறினும் ஆற்றல் என்னும் சக்தி மாறுவதில்லை எங்கும், எதனிலும், எப்போதும், எல்லாவிதத் தொழில்களும் காட்டுவது சக்தி. - மகாகவி

அந்த ஆற்றலைப் பெருக்குவோம். காலம் கடந்தும் வாழலாம்.


மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Post: Blog2_Post
bottom of page