top of page
Search

தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்... 266, 262, 267

23/12/2023 (1022)

அன்பிற்கினியவர்களுக்கு:

குறள் 262 இல் தவ நெறியில் நிற்க மன உறுதி வேண்டும் என்றார். உறுதி இல்லையென்றால் செய்யும் முயற்சிகள் வீணாகும் என்றார். காண்க 20/12/2023. மீள்பார்வைக்காக:

தவமும் தவமுடையார்க் காகும் அவமதனை

அஃதிலார் மேற்கொள் வது. – 262; - தவம்

 

நம்மாளு: ஐயா, தவ நெறியைக் குலைக்கும் கருவி எது?

ஆசிரியர்: வேறு எது? ஆசைதான்! அதுதான் வீண் முயற்சிகளைச் செய்யத் தூண்டும். நாம் உண்டு நாம் காரியம் உண்டு என்று இருக்க வேண்டும்.

 

எந்த எந்த நிலையில் என்ன என்ன வகுக்கப்பட்டு இருக்கிறதோ அவற்றை மன உறுதியோடு செய்ய வேண்டும். அதைவிடுத்து  அல்லன செய்தால் அல்லல்தான். இருப்பதைவிட்டுப் பறப்பதைப் பிடிப்பதுபோல! அவம் செய்வார். அவம் = வீண்.

 

தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்

அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு. – 266; - தவம்

 

தம் கருமம் செய்வார் தவம் செய்வார் = விதித்தன செய்வார் தவம் செய்வாராவார்; மற்று அல்லார் ஆசையுள் பட்டு அவம் செய்வார் = பலர் அவ்வாறு அல்லாமல் ஆசைகளுக்குள் அகப்பட்டு வீண் முயற்சிகள் செய்து காலம் இழப்பார்.

 

தவ நெறிக்கு உரித்தான செயல்களைச் செய்பவர்கள்தாம் தவம் செய்வாராவார். பலர் அவ்வாறு அல்லாமல், ஆசைகளுக்குள் அகப்பட்டு வீண் முயற்சிகள் செய்து காலம் இழப்பார்.

 

ஏன் தவ நெறியில் பயணிக்க வேண்டும்? அப்போதுதான் இதற்கு அடுத்த நிலையாகிய விலகும் பருவத்தில் எப்படி வெள்ளரிக்காய் முற்றியபின் அது அந்தச் செடியுடன் கூடிய தொடர்பைச் சுருக்கி விடுபடுகிறதோ அவ்வாறு எந்தத் துன்பமும் இல்லாமல் விடுபட முடியும்.

 

இந்தக் கருத்துக் கொண்ட மந்திரம்தான் மஹாமிருத்யுஞ்ஜெய் மந்திரம். முன்பு ஒரு முறை இதனைச் சிந்தித்துள்ளோம். காண்க 30/04/2022. மீண்டும் ஒரு முறை பார்ப்போம்.

மஹா = பெரிய; மிருத்யு = துன்பத்தை விளைவிக்கும் பகை; மஹா மிருத்யு = பெரிய துன்பத்தை விளைவிக்கும் பகையாகிய மரணம்; ஜெய் மந்திரம் = வெல்வதற்குரிய மந்திரம். அஃதாவது, மரணமாகிய பெரிய துன்பத்திலிருந்து விடுதலை அளிக்கக் கூடிய உயரிய சிந்தனைதான் மஹா மிருத்யுஞ்ஜெய் மந்திரம்.

 

ஓம் த்ரயம்பகம் யஜா மஹே ஸூகந்திம் புஷ்டி வர்தனம்

உர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்

 

த்ரயம்பகம் = முக்கண்ணன் – ஒரு குறியீடு.

மூவகைத் துன்பங்கள் வரலாம்: தன்னால்; பிறரால்; யாரால் என்று தெரியாமலே.

அந்த மூன்றிலிருமிருந்து வெளிவரச் செய். எப்படி வெள்ளரி பழுத்த உடன் எந்தவித துன்பமும் இன்றி காம்பில் இருந்து சுருங்கி விடுபடுகிறதோ அவ்வாறு இந்த உலகில் இருந்து விடுபட வேண்டும்.

 

மந்திரம் என்பது மனத்தில் நினைப்பதை நிகழ்த்திக் கொடுப்பது.

சரி, இந்த மந்திரங்கள்தாம் வழியா? எனக்குத் தெரியாதே, என்றால் கவலை வேண்டாம். அது ஒரு வழிதான் என்றில்லை. மந்திரங்கள் நிறைமொழி மாந்தர்களின் வாக்குகளாக இருப்பதால் அவை பயனளிக்கும். இருப்பினும், சரியானவற்றைத் தமக்கு அறிந்தவாறு தொடர்ந்து நினைப்பது நிச்சயம் வெற்றியைக் கொடுக்கும்.

 

சுடச் சுட ஒளிர் விடும் பொன் போல நமக்கு ஆசைகளினால் துன்பங்கள் வரலாம். அதைக் கடந்துவிட்டால் தகதகவென மின்னும் அழகிய அணிகலன்கள் வெளிவருவதுபோல நாம் வெளிவர வேண்டும். அந்த மந்திரம்தான் நம் பேராசான் சொல்லும் அடுத்த குறள்.

 

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடுந் துன்பஞ்

சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. – 267; - தவம்

 

சுடச்சுடரும் பொன்போல் = தீயில் இட்டுப் பொன்னைச் சுடச் சுட அதிலிருந்து மின்னும் அழகான அணிகலன்கள் வெளிவருவதுபோல; துன்பம்

சுடச்சுட நோற்கிற்பவர்க்கு ஒளிவிடும் = துன்பங்களைத் தவ நெறியால் கடக்க கடக்க அவர்களும் சிறப்பாக வெளிப்படுவார்கள்.

 

தீயில் இட்டுப் பொன்னைச் சுடச் சுட அதிலிருந்து மின்னும் அழகான அணிகலன்கள் வெளிவருவதுபோலத் துன்பங்களைத் தவ நெறியால் கடக்க கடக்க அவர்களும் சிறப்பாக வெளிப்படுவார்கள்.

 

ஆயிரம் நூல்கள் சொல்லிக் கொடுக்காததை ஒரு அனுபவம் சொல்லிக் கொடுக்கும். அனுபவத்தினால் வெளிவர வேண்டும் என்பதுதான் திருக்குறளின் நெறி.

 

நம் அனுபவங்கள் ஏனைய உயிர்களுக்கு வழிகாட்டினால் அம்மன்னுயிர்கள் எல்லாம் தொழும் என்கிறார் நம் பேராசான். நாளைத் தொடரலாம்.

 

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




 

Post: Blog2_Post
bottom of page