top of page
Search

நன்றென் றவற்றுள்ளும் ... 715, 123

25/05/2023 (812)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

அவைக்கு ஏற்றார்போல் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார் குறள் 714 இல்.


நன்று என்றவற்றுள்ளும் நன்று எது என்றால், அறிவில் மிக்கார் நிறைந்திருக்கும் அவையில் நாம் முந்திக் கொண்டு பேசாமல் இருப்பது என்கிறார்.


செறிவு என்றால் நிறைவு, அடர்த்தி என்று பொருள்.


செறிவு என்பது அடக்கத்தையும் குறிக்கும். நாம் முன்பு அடக்கமுடைமை அதிகாரத்தில் இருந்து ஒரு குறளைப் பார்த்துள்ளோம். காண்க 08/10/2021 (227). மீள்பார்வைக்காக:


செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து

ஆற்றின் அடங்கப் பெறின்.”---குறள் 123; அதிகாரம் – அடக்கமுடைமை


அடக்கமாக இருப்பதே அறிவு என்பதைத் தெரிந்து, அந்த வழியிலே அடங்கி இருந்தால், அந்த அடக்கம், நல்லோரால் கவனிக்கப்படும். அது அவனுக்கு நன்மை பயக்கும்.


கிளவி என்றால் சொல்; கிளவா என்றால் சொல்லா என்று பொருள்.

சரி, நாம் குறளுக்கு வருவோம்.


நன்றென் றவற்றுள்ளும் நன்றே முதுவருள்

முந்து கிளவாச் செறிவு.” --- குறள் 715; அதிகாரம் – அவையறிதல்


நன்று என்றவற்றுள்ளும் நன்றே = ஒருவருக்கு நன்மை பயக்கும் குணங்களுள் எல்லாம் அதிக நன்மை பயப்பது (எது என்றால்); முதுவருள் = தம்மின் அறிவில் மிக்கார் நிறைந்த அவையில்; முந்து கிளவாச் செறிவு = தாம் முந்திக் கொண்டு ஒன்றினைச் சொல்லாதிருக்கும் அடக்கம்.


ஒருவருக்கு நன்மை பயக்கும் குணங்களுள் எல்லாம் அதிக நன்மை பயப்பது எது என்றால், தம்மின் அறிவில் மிக்கார் நிறைந்த அவையில், தாம் முந்திக் கொண்டு ஒன்றினைச் சொல்லாதிருக்கும் அடக்கம்.


அறிவில் மிக்காரின் கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு பேசுதல் வேண்டும் என்கிறார்.


அப்படியில்லாமல், முந்திரிக்கொட்டைப் போல பேசினால்? அதற்குத்தான் அடுத்தக் குறள். நாளைப் பார்க்கலாம்.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Post: Blog2_Post
bottom of page