top of page
Search

புகழ்பட வாழாதார் ... 237

02/12/2023 (1001)

அன்பிற்கினியவர்களுக்கு:

தோன்றின் புகழொடு தோன்றுக என்றார் குறள் 236 இல். காண்க 28/06/2021, 29/06/2021, 01/11/2022.

 

புகழொடு தோன்றாமல், வாழாமல், அதற்குரியச் செயல்களை ஒழுகாமல் இருப்பதால்தாம் தமக்குப் புகழ் கிடைக்கவில்லை என்பதை சிலர் மறந்துவிடுவர். புகழ் வராமல் இருப்பதற்குத் தாம்தாம் காரணம் என்பதை அறிந்திருந்தாலும் வருத்தமடையமாலும் இருப்பார். ஆனால், இவர் திருந்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டு, இவர்க்கு எந்தப் புகழும் தோன்றவில்லையே என்று வருந்தி, இவரைக் கடிபவர்களை இவர் திருப்பித் தாக்குவது எவ்வாறு சரியாக இருக்க இயலும்? என்கிறார்.

 

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை

இகழ்வாரை நோவ தெவன். – 237; - புகழ்

 

புகழ்பட வாழாதார் தம் நோவார் = புகழொடு தோன்றாமல், வாழாமல், அதற்குரியச் செயல்களை ஒழுகாமல் இருப்பதால்தாம் தமக்குப் புகழ் கிடைக்கவில்லை என்பதை மறுப்பார். புகழ் வராமல் இருப்பதற்குத் தாம்தாம் காரணம் என்பதை அறிந்திருந்தாலும் வருத்தமடையமாலும் இருப்பார்; தம்மை இகழ்வாரை நோவது எவன் = ஆனால், இவர் திருந்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டு, இவர்க்கு எந்தப் புகழும் தோன்றவில்லையே என்று வருந்தி, இவரைக் கடிபவர்களை இவர் திருப்பித் தாக்குவது எவ்வாறு சரியாக இருக்க இயலும்?

 

நாம் சொல்லும் நல்லவைகளைச் சிலர் இழிவு படுத்தும் செயல் என்று எடுத்துக் கொண்டு நம்மை மிக மூர்க்கமாகத் தாக்குவார்கள். அழிக்க முயல்வார்கள். விட்டால், அழித்தும் விடுவார்கள். அவர்களுக்கு என்ன போனால் என்ன? ஒரு கவலையும் இல்லை. அவர்களுக்கு நாம் அறிவுரைச் சொல்வதைவிட சும்மா இருக்கலாம். இந்தக் குறளில் அந்தக் குறிப்பும் இருப்பதாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அவரே தம் புகழ் நிலைக்க வேண்டும் என்று நினைக்காதபோது நமக்கேன் வெட்டி வேலை? அவரின் வெட்டுகளை வாங்குவதற்கா? காண்க 22/11/2021. மீள்பார்வைக்காக:

 

வானரம் மழைதனில் நனையத் தூக்கணம்

தானொரு நெறிசொலத் தாண்டிப் பிய்த்திடும்

ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும்

ஈனருக் குரைத்திடில் இடர(து) ஆகுமே --- விவேக சிந்தாமணி  

 

இது நிற்க. இந்த உலகத்தின் பொது புத்தி பெரும்பாலும் ஒன்று இல்லை என்றால் சுழியம் (முட்டை, பூஜ்ஜியம், ஜீரோ, zero) என்றுதான் இயங்கும். அஃதாவது Binary system i.e. 1 or 0.

 

நம்மாளு: அதாங்க வைச்சா குடுமி; அடிச்சா மொட்டை! இதுதானே ஐயா? இப்போது இது எதற்கு ஐயா?

 

ஆசிரியர்: புகழோடு இல்லை என்றால் இந்த உலகம் நம்மை வசை பாடத் தொடங்கிவிடும். அது பாடுவதை நிறுத்தாது. நாம்தாம் அது எந்தப் பாட்டைப் பாடுகிறது என்பதை முடிவு செய்ய வேண்டும்.

 

நம்மாளு: ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது! அதற்கு நாம் நல்லவைகளைக் கொடுப்போம்!

 

வசைஎன்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்

எச்சம் பெறாஅ விடின். - 238; புகழ்

 

இசை என்னும் எச்சம் பெறாஅ விடின் = விட்டுச் செல்வது புகழைத் தரும் செயல்களாக இல்லையென்றால்; வையத்தார்க்கு எல்லாம் வசைஎன்ப = இந்த உலகில் வாழ்ந்தவர்கள் இகழ்ச்சிக்கு உள்ளாவார்கள் என்று அறிஞர் பெருமக்கள் உரைப்பர்.  

 

விட்டுச் செல்வது புகழைத் தரும் செயல்களாக இல்லையென்றால், இந்த உலகில் வாழ்ந்தவர்கள் இகழ்ச்சிக்கு உள்ளாவார்கள் என்று அறிஞர் பெருமக்கள் உரைப்பர்.

 

நம்மாளு: ஒழுக்கமா இல்லைன்னா அவ்வளவுதான். நாம் போயிட்டப் பிறகும் போட்டுக் காய்ச்சுவாங்க!

 

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




 


Post: Blog2_Post
bottom of page