top of page
Beautiful Nature

புன்கண்ணை வாழி ... 1222. 1223, 1224, 22/03/2024

22/03/2024 (1112)

அன்பிற்கினியவர்களுக்கு:

மாலைப் பொழுதே நீ நன்றாக இரு என்று கடிந்து சொன்னாள். சொன்னாளாயினும், பாவம், மாலை என்ன செய்யும். அதுவும், இந்த நேரத்தில் மங்கி இறுதியில் ஒளியிழந்தல்லவா போகிறது. ஒரு வேளை இதற்கும் அதன் துணை பிரிந்து சென்று இருக்கிறாரா?

 

தமக்கு நிகழும் துன்பத்தைப் பிறிதொன்றின் மேல் ஏற்றிச் செல்வது. இதனை தன்னுட்கையாறெய்திடு கிளவி என்கிறார்கள்.

 

புன்கண்ணை வாழி மருள்மாலை எங்கேள்போல்

வன்கண்ண தோநின் துணை. – 1222; - பொழுது கண்டு இரங்கல்

 

புன்கண் = துன்பம், துயரம்; வன்கண் = கொடுமை, இரக்கமின்மை; கேள் = உறவு, துணை;  

 

புன்கண்ணை மருள் மாலை = துயருற்றுப் பொலிவிழக்கும் மாலைப் பொழுதே; எம் கேள் போல் நின் துணை வன்கண்ணதோ = என் துணையைப் போல நின் துணையும் இரக்கமற்றதோ; வாழி = நீயும் விரைவில் உன் துணையைப் பெற்று வாழ்வாயாக!

 

துயருற்றுப் பொலிவிழக்கும் மாலைப் பொழுதே, என் துணையைப் போல நின் துணையும் இரக்கமற்றதோ! நீயும் விரைவில் உன் துணையைப் பெற்று வாழ்வாயாக!

 

ஓர் இரவைக் கழித்துவிட்டாள். இதோ, இன்றும் அந்த மாலைப் பொழுது வருகிறதே! என்ன செய்வேன்?

 

பனியரும்பிப் பைதல்கொள் மாலை துனியரும்பித்

துன்பம் வளர வரும். – 1223; - பொழுது கண்டு இரங்கல்

 

துனி = வெறுப்பு, நடுக்கம்; பைதல்= துன்பம்;

பனி அரும்பிப் பைதல் கொள் மாலை = அவர் என்னுடன் இருந்த நாள்களில் பனி அரும்ப நடுங்கிக் கொண்டே கடந்து சென்ற மாலைப் பொழுது; துனி அரும்பித் துன்பம் வளர வரும் = இப்போது எனக்கு நடுக்கத்தை விதைத்து துன்பம் மேலோங்க வளர்க்கிறது.

 

அவர் என்னுடன் இருந்த நாள்களில் பனி அரும்ப நடுங்கிக் கொண்டே கடந்து சென்ற மாலைப் பொழுது, இப்போது எனக்கு நடுக்கத்தை விதைத்து துன்பம் மேலோங்க வளர்க்கிறது.

 

அப்போது, உன்னை நான் விரட்டும் அளவிற்குத் துணிவுடன் இருந்தேன், என்னவர் அருகில் இருந்த காரணத்தால்! பாட்டெல்லாம் பாடினேன் …

 

மயக்கும் மாலைப் பொழுதே நீ போ, போ

இனிக்கும் இன்ப இரவே நீ வாராய், இன்னலைத் தீர்க்க வா … கவிஞர் விந்தன், குலேபகாவலி, 1955

 

ஐயகோ, அவர் இல்லாத இந்த நாள்களில் நீ என்னைப் பழிவாங்குகிறாய்!

 

கொலைக் களத்தில் கைகள் கட்டுண்டு தன் உயிரைத் தான் காப்பாற்றிக் கொள்ள வழி ஏதுமில்லாமல் இருப்பவளின் நிலைதான் என் நிலை. மாலைப் பொழுதே, நீயும் இரக்கம் இல்லாமல் என்னைக் கொல்லத் துணிகிறாய்!


காதலர் இல்வழி மாலை கொலைக்களத்

தேதிலர் போல வரும். – 1224; - பொழுது கண்டு இரங்கல்

 

மாலை காதலர் இல்வழி = மாலைப் பொழுதே, எம் காதலர் என்னருகில் இல்லாத காரணத்தினால்; கொலைக் களத்து ஏதிலர் போல வரும் = கொலைக் களத்திலே கொலைஞன் எப்படி இரக்கம் இல்லாமல் கொல்லத் துணிவானோ அவ்வாறு நீயும் வருகிறாய். நான் என்ன செய்வேன்.

 

மாலைப் பொழுதே, எம் காதலர் என்னருகில் இல்லாத காரணத்தினால், கொலைக் களத்திலே கொலைஞன் எப்படி இரக்கம் இல்லாமல் கொல்லத் துணிவானோ அவ்வாறு நீயும் வருகிறாய். நான் என்ன செய்வேன்.

 

இந்த அதிகாரத்தில் உள்ள பாடல்கள் இரு பாலர்க்கும் பொருந்தும். இருப்பினும், உணர்ச்சி பூர்வமாக பெண்தான் சொல்ல முடியும் என்பதனால் அவளைப் பேச வைக்கிறார் நம் பேராசான்.

 

அவளின் பிரிவினைக் குறித்து உன் கருத்து என்னவென்று நம்மாளைக் கேட்டால்,

 

கடுப்பா

இருக்குடா!

 

என்று இரண்டு வார்த்தைகளில் முடித்து விடுவான். அதனை அவன் ஒரு ஹைக்கூ கவிதை என்றும் நினைத்துக் கொள்வான்!

 

அவ்வளவுதான் அவனின் வெளிப்பாடு! அது சுவையாக இருக்குமா என்ன?

 

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.



ree

Comments


©2021 by தினமும் திருக்குறள்.

bottom of page