top of page
Search

பொருளல் லவரைப் பொருளாக ... 751

04/07/2023 (852)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

நான் அல்லும் பகலும் என் மனம் மொழி மெய்களால் போற்றி வணங்கும் என் மானசீக ஆசிரியர்களுள் ஒருவரான இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்கள் ஒரு கதையைச் சொல்லுவார். அந்தக் கதையின் தலைப்பு இப்படி இருக்கலாம் “நான் போய் சொல்லிடறேன்”. அந்தக் கதை சுருக்கமாக:


... ஒரு ஊரில் ஒருத்தர் இருந்தாராம். அவர் வீதிகளில் நடந்து செல்லும் போது அனைவரும் அவருக்கு வணக்கம் சொல்லுவார்களாம். அவர் அதற்குப் பதில் வணக்கம் சொல்லாமல் “நான் போய் சொல்லிடறேன்” என்பாராம்!


அவரும் தனது இல்லத்தை அடைந்தவுடன் ஒரு அறைக்குச் சென்று கதவை அடைத்துக் கொண்டு இன்று குமார் உனக்கு வணக்கம் சொன்னார், குப்புசாமி சொன்னார், கந்தன் இரு முறை வணக்கம் தெரிவித்தார் ... இப்படி யார் யாரெல்லாம் அன்றைக்கு வணக்கம் சொன்னார்களோ அவர்கள் அனைவரின் பெயர்களையும் அவர்கள் எத்தனை முறை வணக்கம் சொன்னார்கள் என்பதனையும் சொல்லுவாராம். அதற்குப் பிறகு வெளியே வந்து அந்த அறையின் கதவை அடைத்துப் பூட்டிவிட்டு மற்ற வேலைகளில் ஈடுபடுவாராம்!


இது வேடிக்கையாக இருக்க, ஒரு நாள், அவரின் நெருங்கிய நண்பர் அவரின் செயல் குறித்து கேட்டாராம். அவரும் சரி என்னுடன் வா என்று அழைத்துச் சென்று அந்த அறையைத் திறந்து காட்டினாராம். அங்கே ஒரு பெட்டி இருந்ததாம் அதனிடம் தான் அவர் பேசிக் கொண்டிருந்தாராம்.


சரி, இந்தப் பெட்டியில் என்ன இருக்கிறது என்றாராம். அதற்கு அவர் எனக்கு அண்மையில் ஒரு பரிசுச் சீட்டின் மூலம் பரிசு விழுந்தது. அதில் கிடைத்தப் பணம்தான் இதில் உள்ளது. அது வரை என்னை ஒரு பொருளாக மதிக்காத ஊரார் எனக்கு பணம் வந்தபின் என்னையும் ஒரு பொருளாக மதித்து வணக்கம் சொல்ல ஆரம்பித்தார்கள். அந்த மரியாதைகள் உண்மையில் இந்தப் பெட்டியில் இருக்கும் பணத்திற்கல்லவா? அதனால்தான் இதனிடம் யார் யார் அன்று மரியாதை செய்தார்கள் என்று வந்து சொல்லி விடுவேன் என்றாராம்!...


நம்மாளு: இந்த மாதிரி செய்யாவிட்டாலும் இந்தத் தெளிவு இருக்கே அது நமக்கு நன்மை பயக்கும்.


பொருளுக்குப் பல பொருள்கள் இருக்கு. “என்னை ஒரு பொருளாக மதிக்கமாட்டார்கள்” என்றால் இங்கே மரியாதை என்று பொருள். பொருள் என்றால் பணம், செல்வம், புகழ், உறுதிப் பொருள் என்று பல பொருள்கள்.


இதை வைத்துக் கொண்டு நம் பேராசான் விளையாடிய விளையாட்டுதான் பொருள் செயல்வகையின் முதல் குறள்.



பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

பொருளல்ல தில்லை பொருள்.” --- குறள் 751; அதிகாரம் – பொருள் செயல்வகை


பொருள் அல்லவரைப் பொருளாகச் செய்யும் = ஒரு பொருளாக மதிக்கப்படாதவரையும் ஒரு பொருட்டாக மதிக்கச் செய்யும் திறன்; பொருளல்லது இல்லை பொருள் = செல்வத்திற்குத் தவிர வேறு பொருளுக்கு இல்லை.


ஒரு பொருளாக மதிக்கப்படாதவரையும் ஒரு பொருட்டாக மதிக்கச் செய்யும் திறன் செல்வத்திற்குத் தவிர வேறு பொருளுக்கு இல்லை.


அது வரை அவனுக்கு அறிவில்லை, அவன் அந்த மாதிரி, இந்த மாதிரி என்று பழிக்கும் உலகம், அவனுக்கு கொஞ்சம் பணம் வந்துவிட்டால், அவன் சூரன், வீரன் என்று புகழ்ந்து, அவனுடன் இணைந்து கொண்டு பயனிக்க முயலும். இதுதான் உலக இயற்கை என்கிறார்.


ஏழையின் சொல் அம்பலம் ஏறாது என்கிறார்களே அது போல! ஐம்பது ரூபாய் சீட்டு இருந்தால் ஆண்டவனைக் கூட அருகில் சென்று தரிசிக்கலாம். அம்பலம் ஏற வேண்டும் என்றால் ஒரு ஐநூறு ரூபாயாவது வேண்டும்! இது நிற்க.


பொருள் பெரும்பாலும் அனைத்து வேறுபாடுகளையும் களையும் வல்லமை கொண்டது. இதுதான் இரகசியம்.


இருளில் இருந்து கொண்டு இருளோடு போராடி வெல்ல முடியாது. ஒரு விளக்கை ஏற்றுங்கள். இருள் தன்னால் மறையும்; ஒளிரும்!


ஆகையினால் செய்க பொருளை!


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Post: Blog2_Post
bottom of page