top of page
Search

படைகொண்டார் நெஞ்சம்போல் ... 253

14/12/2023 (1013)

அன்பிற்கினியவர்களுக்கு:

நேற்றைய குறளில் பிழைத் திருத்தம்:

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான்

எங்ஙனம் ஆளும் அருள். – 251; புலால் மறுத்தல்

 

புலாலைத் தவிர்த்தல் நலம். அதுவும், ஒரு நிலையைக் கடந்துவிட்டால் புலாலை மறுத்துவிடுங்கள் என்றார். அஃதாவது, அருள் வாழ்விற்கு கொல்லாமையும் ஊன் உண்ணாமையும் அடிப்படை என்றார்.

 

ஒரு புராணக் கதையைப் பார்க்கலாம். சைவ மரபில் தோன்றிய அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் சிறுதொண்டர். இவரின் கதை மிகவும் வித்தியாசமானது. இவ்வாறு நடக்குமா? இறைவன் என்பவன் அப்படியும் இருப்பானா? இதுவெல்லாம் ஆண்டவனாரின் திருவிளையாடலா? அப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்க வாய்ப்புண்டா? இவற்றை ஒதுக்கிவிட்டு அந்தக் கதையைச் சுருக்கமாகப் பார்க்கலாம்.

 

பரஞ்சோதி என்பவர் போர் தொழில் கற்றவர்; அது மட்டுமல்ல பல கலைகளையும் கற்றவர். இவரைத் தன் தளபதியாக்கிக் கொண்டார் நரசிம்மப் பல்லவன். வடக்கில் இருந்த வாதாபியை ஆண்ட சாளுக்கிய அரசை வெல்ல கி.பி. 642 இல் பரஞ்சோதியார் அனுப்பப்பட்டார். அவர் இரண்டாம் புலிகேசி என்ற மன்னனை வென்றுத் திரும்பினார். இவர் சிறந்த போர் தொழில் வல்லுநராக இருப்பினும் இறை நாட்டம் கொண்டவராக இருந்ததை அறிந்த மன்னன், இவரை விடுவித்து இறைப்பணி செய்ய வழிவிட்டார். அது முதல் அவர் சிவனடியார்களுக்கு உணவு அளிப்பதைத் தன் பணியாகக் கொண்டார். அவரைச் சிறுதொண்டர் என்று வழங்கினர். சிவனடியார் ஒருவர்க்கேனும் உணவளிக்காது அவரும், அவர் மனைவியும் உண்ணுவதில்லை. அவர்களுக்கு ஒரு மகன். அக் குடும்பத்திற்கு உதவ ஒரு தாதி.

 

ஒரு நாள் அவர்க்கு ஒரு தொண்டரும் கிடைக்கவில்லை உணவளிக்க. அப்போது, வடக்கேயிருந்து வரும் காபாலிகர்களைப் போன்று ஒருவர் வருகிறார். அவரை உண்ண அழைக்கிறார். அவர் நான் மனிதக் கறியைத்தான் சாப்பிடுவேன். அதுவும் ஐந்து வயது பாலகனாக இருக்க வேண்டும். அவனை அவன் தாய் பிடித்துக் கொள்ள தந்தை அவனை மகிழ்வுடன் அறுத்து அவன் கறி சமைத்து வைத்தால் வருவேன் என்கிறார். ஒப்புக்கொண்ட சிறுதொண்டர் தன் மகனை மனைவி பிடித்துக் கொள்ள அறிந்து சமைத்து அந்த அடியவர்க்குப் பறிமாறுகிறார்.

நான் தனியாக உண்பதில்லை. நீயும் அமர் என்கிறார். அவரும் அமர்ந்து உண்ணத் தொடங்கும் போது உனக்கு ஒரு மகன் இருக்கிறானே அவனை அழைக்காமல் நீ எப்படி உண்ணலாம் அவனையும் அழை என்கிறார்.

அவன் உதவான் என்று சொன்ன சிறுதொண்டரைப் பார்த்து அழை என்று மீண்டும் சொல்ல அவரும் அவர் மனைவியும் வாசலில் நின்று அழைக்க அவர்களின் மகன் ஓடோடி வருகிறான். உள்ளே சென்று பார்க்க அந்த அடியவரும் அவர்க்காகச் செய்த உணவும் காணவில்லை. ஒன்றும் புரியாமல் விழிக்க, ஆண்டவனார் தம் இல்லாளுடனும் அவர் தம் குழந்தையுடனும் தோன்றி சிறுதொண்டர் குடும்பத்தார்க்கு நற்பேறு வழங்குகிறார்.

 

இது என்ன ஒரு கதை? இது எப்படி இயல்பான அறிவிற்கு பொருந்தும்? என்ற பல கேள்விகள் இருக்கின்றன. இருக்காதே பின்னே?

 

இந்தக் கதையை நம் பரஞ்சோதியாருக்கு வந்த கணவாகச் சிந்தியுங்கள்.

 

அந்தப் பரஞ்சோதியார் எத்தனை உயிர்களைக் கொன்றிருப்பார்? மகன், தந்தை, யானை, குதிரை என்று இனம் பிரித்தா உயிரினை எடுத்திருப்பார்.

அதை வெற்றி! வெற்றி! என்று மெத்த மகிழ்வுடன் மீண்டும் மீண்டும் கொன்றிருப்பார்கள் அவரும் அவர் படை வீரர்களும்.

போர் தருமம் என்று சொல்லி கண்ணில் கண்ட அனைத்து உயிர்களையும் அல்லவா கொன்றிருப்பார். படை எடுத்துச் சென்றவர் நல்லது கெட்டது என்று சிந்திக்கும் திறன் அற்றவராகிறார். அதற்கு அவர்கள் தரும் விளக்கம் அது போர் தருமம் என்பது. நான் கொல்லவில்லை. ஏவினார்கள் செய்தேன் அவ்வளவே.

கொலைகளைச் செய்துமுடித்து, அவர்களின் வாழ்வில் ஓய்வெடுக்கும் காலத்தில் அவர்களின் மனம் எவ்வாறு பாதிப்புக்கு உள்ளாகிறது என்பது நாள்தோறும் நடக்கும் நிகழ்வு. பரஞ்சோதியாரும் விலக்கல்லவே.

பரஞ்சோதியாருக்கு ஆண்டவனாரின் கட்டளை மனமகிழ்வுடன் கொல்ல வேண்டும். அதையும் அவர் மகனையே கொல்ல வேண்டும். அவர் எப்படிப் போரினில் உயிர்களை எடுத்தாரோ அதே போல் மகிழ்ச்சியுடன்!

 

ஆசையுடனும் அன்புடனும் சமைத்த உணவைத் தாயும், தந்தையும் தம் சிறு மக்களுடன் சேர்ந்து உண்ணபதில்தானே மகிழ்ச்சி.  அந்த மகிழ்ச்சியை எத்தனை வீடுகளில் இல்லாமல் செய்திருப்பர் போரின் மேல் சென்றவர்கள். அந்த மகிழ்ச்சியை இழந்தவர்களின் மன நிலை எப்படி இருக்கும்?

 

அந்த மன நிலைக்கு ஆட்படுகிறார் பரஞ்சோதியார். ஞானம் பிறக்கிறது; கண் திறக்கிறது; மகன் ஒடோடி வருகிறான்; அவரின் எதிரில் இயற்கையின் விஸ்வரூபம், அஃதாவது, பிறப்பும் நானே; இறப்பும் நானே என்று இயற்கை பரந்து விரிகிறது. ஆண்டவனார் எதிரே தம் குடும்பத்துடன் தோன்றுகிறார். அவர் குடும்பம் என்பது மாடு, மான், பாம்பு உள்ளிட்ட அனைத்து உயிர்களும் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் குடும்பம்! நம் பரஞ்சோதியார் உண்மையானச் சிறுதொண்டராகிறார். கணவு கலைந்தது.

 

இந்தக் கதையில் அந்தக் காபாலிகர் நம் பரஞ்சோதியாரை முதன் முதலில் காணும்போது ஒரு கேள்வி கேட்பார். “நீர் தான் அந்தப் பெரிய சிறுதொண்டரோ?” என்று. அதற்கு, ஆண்டவனின் அடியவர்கள் அனைவர்க்கும் உணவு அளிப்பதனால் அனைவரும் அவ்வாறுதான் அழைக்கிறார்கள் என்பார் நம் பரஞ்சோதியார். உம்மை உண்மையான சிறுதொண்டராக்குகிறேன் என்று முடிவெடுத்து மாற்றுகிறார்.  மிக நுணுக்கமாகச் சொல்லப்பட்டக் கதை இது.

 

சரி, இந்தக் கதையும் தத்துவ விசாரமும் இப்போது ஏன் என்கிறீர்களா? இந்தக் கதையை நம் பேராசானும் சொல்லி இருக்கிறார். நம்ப முடிகிறதா? ஆமாம்.

 

படை எடுத்துச் செல்லும் நெஞ்சத்தினர், எது நன்று என்று எண்ணிப் பார்க்காமல் அனைத்து உயிர்களையும் கொல்வர். எது போல என்றால் புலாலைச் சுவைக்கத் தொடங்கியவரின் மனம் இந்த இறைச்சியைச் சாப்பிடலாமா, இல்லை அந்த இறைச்சியைச் சுவைக்கலாமா என்று அலை பாயுமாம். அது இது என்றில்லாமல் அத்தனை வகை இறைச்சியையும் சுவைக்க முயலுமாம்! அப்போது கொல்லத்தானே வேண்டும்!

 

மனிதத் தேவைக்கு உணவு என்பது மாறி என்னால் முடியும் அதனால் நான் எல்லாவற்றையும் அடித்து உண்பேன் என்றாகிவிட்டது.  முதலில் ஏதும் கிடைக்காமல் அடித்துத் தின்றவன், பின் வளர்ந்து அவற்றைத் தவிர்த்தான். பின் நாகரிகம் வளர வளர மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியுள்ளான்!

 

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்கா தொன்றன்

உடல்சுவை யுண்டார் மனம். – 253; புலால் மறுத்தல்

 

படை கொண்டார் நெஞ்சம் போல் நன்று ஊக்காது = படை எடுத்துச் செல்லும் வீரர்கள் அச்செயல் நன்மை பயக்குமா என்றெல்லாம் சிந்திக்க மாட்டார்கள். போரில் வெற்றி அதுதான் குறிக்கோள். அதைச் சுவைக்க சுவைக்க மீண்டும் மீண்டும் வெவ்வேறு போர்கள். உயிரிழப்புகள்; ஒன்றன் உடல்சுவை உண்டார் மனம் = அது போலத்தான், ஒன்றன் இறைச்சியைச் சுவைத்தவர்கள் மேலும் மேலும் புதிய புதிய இறைச்சிகளைத் தேடுவர். உயிரிழப்புகள்.

 

படை எடுத்துச் செல்லும் வீரர்கள் அச்செயல் நன்மை பயக்குமா என்றெல்லாம் சிந்திக்க மாட்டார்கள். போரில் வெற்றி அதுதான் குறிக்கோள். அதைச் சுவைக்க சுவைக்க மீண்டும் மீண்டும் வெவ்வேறு போர்கள். உயிரிழப்புகள்! அது போலத்தான், ஒன்றன் இறைச்சியைச் சுவைத்தவர்கள் மேலும் மேலும் புதிய புதிய இறைச்சிகளைத் தேடுவர். உயிரிழப்புகள்.

 

கணவு வரும். அப்போது அனைத்தும் நினைவிலும் வந்து பயமுறுத்தும். நான் இப்போதே படம் பிடித்துக் காட்டுகிறேன். புரிந்து கொள்ளுங்கள் என்கிறார் நம் பேராசான். இயற்கையின் விஸ்வரூபம் கண்ணுக்குத் தெரியட்டும்.

ஒரு குறளில் சொல் விளையாட்டு ஆடுகிறார். அந்தக் குறளை நாளைப் பார்க்கலாம்.

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




 

Post: Blog2_Post
bottom of page