top of page
Search

பணைநீங்கிப் பைந்தொடி 1234, 980, 689

17/08/2023 (895)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:


அற்றம் மறைத்தலோ புல்லறிவு என்ற நம் பேராசான் அற்றம் மறைப்பது பெருமை என்றும் சொல்லியிருக்கிறார்! எங்கே, எப்போது? என்ற கேள்விகளோடு நேற்று நிறுத்தியிருந்தோம்.


இந்தக் குறளை நாம் ஏற்கெனவே பார்த்துள்ளோம். நம் குற்றங்களை மறைப்பது புல்லறவு. ஆனால், பிறர் குற்றங்களைக் கிண்டிக் கிளறுவது கீழ்மைத்தனம். சிறுமைதான் குற்றமே கூறிவிடும் என்கிறார் நம் பேராசான் குறள் 980 இல். காண்க 15/08/2022 (534). மீள்பார்வைக்காக:


அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்

குற்றமே கூறி விடும்.” --- குறள் 980; அதிகாரம் - பெருமை


அற்றம் மறைக்கும் பெருமை = பெரியோர், பெருமை மிக்கோர் எனப்படுபவர் மற்றவர்கள் செய்யும் நல்ல செயல்களைப் பாராட்டி, சிறிய செயல்களை ஊதிப் பெரிதாக்க மாட்டார்கள்.


நம் குற்றங்களை மூடி மறைக்கவும் கூடாது. பிறர் செய்யும் குற்றங்களை ஊதிப் பெரிதாக்கவும் கூடாது! இது நிற்க.


சோர்வு என்றால் தளர்ச்சி, நெகிழ்ச்சி, மறதி, களவு, தவறு, நிறையழிவு, வதக்கம் என்றெல்லாம் பொருள் சொல்கிறது கழகத் தமிழ் அகராதி.

சோர்வு என்ற அடிச்சொல்லில் இருந்து வருவது ‘சோரும்’.

“சோரும்” என்பது வேறு; “சோரம்” என்பது வேறு. சோரம் என்றால் களவு, வஞ்சனை, விபச்சாரம் சோரகன் என்றால் கள்வன். சோரம் என்னும் சொல்லை நம் பேராசான் பயன்படுத்தவில்லை.


நம் பேராசான் “சோர்வு” என்றும், “சோரா” என்றும், “சோரும்” என்றும், “சோர விடல்” என்றும் பயன்படுத்தியுள்ளார்.


நாம் “தூது” என்னும் அதிகாரத்தில் குறள் 689 ஐப் பார்த்துள்ளோம். காண்க 12/10/2021 (231). மீள்பார்வைக்காக:


விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்

வாய்சோரா வன்க ணவன்” ---குறள் 689; அதிகாரம் - தூது


தலைமைச் சொன்ன செய்தியை இன்னுமொரு தலைமைக்குச் சொல்பவர்கள்; தன் பேச்சில் தளர்ச்சி சிறிதும் இல்லாமலும், சொல்லச் சொன்னக் கருத்துகளுக்குச் சிறிதும் தாழ்ச்சி நேரா வண்ணம் சொல்பவர்கள் கில்லாடிகள், மன உறுதி உடையவர்கள். அவர்கள்தாம் சரியான தூதுவர்கள்.


சோரா = தளர்ச்சி சிறிதும் இல்லாமல்


“சோரும்” என்னும் சொல்லை காமத்துப் பாலில் உறுப்பு நலனழிதல் என்னும் அதிகாரத்தில் ஆண்டுள்ளார்.


எது சோருமாம்? பைந்தொடி சோருமாம். தொடி என்றால் வளையல்.பைந்தொடி என்றால் அழகான வளையல். அந்த அழகான வளையல் தளருமாம்! கழண்டு கீழே விழுமாம்!


நாம் சொல்லுவோம் இல்லையா, இந்தச் சட்டை அளவு மாறிவிட்டது என்று! அது போல! சட்டை என்னமோ அப்படியே அதே அளவில்தான் இருக்கும். நாம்தாம் மாறியிருப்போம்.


அதைப்போல, தன் கை மெலிந்து விட்டது என்பதை வளையல் கொஞ்சம் தளர்ந்து பெரிதாகிவிட்டது என்கிறாள் காதலில் சிக்குண்டு பின் இல்லறத்திலும் சிக்கியவள்.


அவளின் துணையானவன் அவளைவிட்டு நீங்கிச் சென்றுள்ளான். அவள் தனது உறுப்புகளின் நலன் எவ்வாறு அழிந்து கொண்டுள்ளது என்று முறையிடுகிறாள்.


அன்று அவர் நீங்கிய போது எனது தோள் தனது பழைய வனப்பை இழந்து வாடியது. இன்றோ அது தன் பெருமையையும் இழந்து அது அணிந்திருக்கும் அழகிய வளையல்களும் தளர்ந்து நழுவி விழும் நிலையில் உள்ளன.


“பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணை நீங்கித்

தொல்கவின் வாடிய தோள்.” --- குறள் 1234; அதிகாரம் – உறுப்பு நலனழிதல்


பணை = பெருமை; சோரும் = தளரும்; கவின் = வனப்பு, அழகு.

துணை நீங்கித் தொல்கவின் வாடிய தோள் = அன்று, அவர் நீங்கிய போது எனது தோள் தனது பழைய வனப்பை இழந்து வாடியது; பணைநீங்கிப் பைந்தொடி சோரும் = இன்றோ, அது தன் பெருமையையும் இழந்து அது அணிந்திருக்கும் அழகிய வளையல்களும் தளர்ந்து நழுவி விழும் நிலையில் உள்ளன.


அவள்: எப்போ வருவாரோ?


வருவார், வருவார், நிச்சயம் வருவார் என்று அவளிடம் சொல்லிவிட்டு நாம் நடு வழியில் விட்டுவிட்டு வந்த திரு. புல்லறிவாளரைப் பார்க்க வேண்டும்.

அப்பாடி, ஒரு வழியாகச் “சோரும்” என்பதற்கு என்ன பொருள் என்பது விளங்குவதுபோல் உள்ளது. சோர்ந்து போயிடாதீங்க! இதனைக் கவனத்தில் வையுங்கள்.


நாளைத் தொடர்வோம்.


மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.




Post: Blog2_Post
bottom of page