top of page
Search

பலசொல்லக் இணர்ஊழ்த்தும் நாறா மலர் ... 649, 650

16/04/2023 (773)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

சொல்வன்மை அதிகாரத்தின் கடைசி இரு பாடல்கள் மூலம் எவ்வாறு சொல்லக்கூடாது என்பதைத் தெரிவிக்கிறார்.


சுருங்கச் சொல்லி விளங்க வைக்க வேண்டுமாம். அதாவது, சொல்லும் சொல்லில் சிக்கனம் இருக்க வேண்டும்.


அவ்வாறு இல்லாமல் , சிலர், சும்மா வளைத்து, நெளித்து அவசியமேயில்லாமல்,, வீணாகப் பலவற்றைச் சொல்லவிரும்புவார்களாம். அதுகூடாதாம்.


இந்தக் குறளை நாம் ஏற்கனவேப் பார்த்துள்ளோம். காண்க 27/01/2021 (10). மீள்பார்வைக்காக:


பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற

சிலசொல்லல் தேற்றா தவர்.” --- குறள் 649; அதிகாரம் – சொல்வன்மை


மன்ற = தெளிவாக, உறுதியாக, நிச்சயமாக , தேற்றமாக;

தேற்றமாட்டாதார் = அறிய மாட்டாதார்;

மன்ற = தெளிவாக; மாசு அற்றசில சொல்லல் தேற்றாதவர் = குற்றமற்ற சில வார்த்தைகளைக் கொண்டு சொல்ல அறியாதவர்கள்; பல சொல்லக் காமுறுவர் = தேவை இருக்கோ இல்லையோ பலவற்றையும் சொல்ல விரும்புவார்களாம். அது கூடாது.


குற்றமற்ற சில வார்த்தைகளைக் கொண்டு சொல்ல அறியாதவர்கள், தேவை இருக்கோ இல்லையோ பலவற்றையும் சொல்ல விரும்புவார்களாம். அது கூடாது என்கிறார்.


எப்படிப் பேசக்கூடாது என்பதற்கு, இது முதல் குறிப்பு. இரண்டாம் குறிப்பு என்னவென்றால்... என்னவென்றால்...


அப்படியே மாற்றுகிறார். சுருங்கச் சொல்லணும் என்றவர் அடுத்து விரித்துச் சொல்லணும் என்கிறார்!


நம்மாளு: அப்படியா ஐயா?


ஆசிரியர்: ஆமாம்.


சிலர் இருப்பாங்க, சுருங்கச் சொல்லணும் என்று வள்ளுவப் பெருமான் சொல்லிட்டாரு, அதனால், எதைக் கேட்டாலும் மிகவும் சுருக்கமாகச் சொல்லுவாங்க. அது புரியவும் புரியாது! இன்னும் சில சிக்கனப் பேர்வழிகள் இருக்காங்க, வாயைத் திறக்காமல், தலையை மட்டும் ஆட்டி ஆட்டி பதில் சொல்வார்கள்!


இப்படியும் இருக்கக் கூடாதாம்.


நாம் கற்றதை மற்றவர்களுக்கு விளங்குமாறு விரித்துச் சொல்லணுமாம். அந்தத் திறமை மிகவும் முக்கியம் என்கிறார்.


ஒரு பூ இருக்கிறது; அது நன்றாக மலர்ந்தும் இருக்கிறது. ஆனால், அதில் வாசம் இல்லையென்றால் அதனால் இன்பமும் இல்லை.


நம்மாளு: ஐயா ஒரு உதாரணம்?


ஆசிரியர்: காகிதப் பூ.

அதாவது, பல நூல்களைக் கற்றிருப்பார்கள். அதனால் யாருக்கும் பயனில்லை.


சரி, நாம் குறளுக்கு வருவோம்.


இணர்ஊழ்த்தும் நாறா மலர்அனையர் கற்றது

உணர விரித்துரையா தார்.” --- குறள் – 650; அதிகாரம் – சொல்வன்மை


இணர் = கொத்து; ஊழ்த்தும் = மலர்ந்தும்

கற்றதுஉணர விரித்து உரையாதார் = கற்றவைகளைப் பிறருக்குப் பயன்படும்படி தெளிவாக விரித்துச் சொல்லத் தெரியாதவர்கள்; இணர் ஊழ்த்தும் நாறா மலர் அனையர் = கொத்து கொத்தாகப் பூக்கள் நன்றாக மலர்ந்து இருந்தாலும் அதனின் பயனாகிய நறுமணம் வெளிப்படாதவர்களாவர்.


கற்றவைகளைப் பிறருக்குப் பயன்படும்படி தெளிவாக விரித்துச் சொல்லத் தெரியாதவர்கள்; கொத்து கொத்தாகப் பூக்கள் நன்றாக மலர்ந்து இருந்தாலும் அதனின் பயனாகிய நறுமணம் வெளிப்படாதவர்களாவர். அவர்கள் மதிக்கப்பட மாட்டார்கள்.


அதாவது, நாம் சொல்லும் சொல்: சுருக்கமாகவும், தெளிவாகவும், பயனுள்ளதாகவும் அமையவில்லை என்றால் மதிக்கப்பட மாட்டோம் என்பதை இந்த இரு பாடல்கள் (649, 650) மூலம் சொல்லி இந்த அதிகாரத்தை முடிக்கிறார்.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Post: Blog2_Post
bottom of page