top of page
Search

முகத்தான் அமர்ந்தினிது ... 93

19/09/2023 (927)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:


இன்சொல்லானது அன்பு, நெஞ்சில் வஞ்சனை இல்லாமலும், உண்மைப் பொருளையும் கொண்டதாக இருக்க வேண்டும் (குறள் 91)என்றவர் அதனை மேலும் விரித்து இன்சொல்லால் பயன் இருக்க வேண்டும் (குறள் 92) என்றார்.


அஃதாவது, அந்த இன்சொல் ஒருவற்கு அவரின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கு ஏதுவாக இருக்க வேண்டும் என்றும் சொன்னார்.

அவ்வாறு அமைந்த இன்சொல் மனத்தின் அடி ஆழத்தில் இருந்து மலர வேண்டும் என்கிறார் அடுத்தக் குறளில்!


உதட்டிலே உள்ளது உள்ளமே சொன்னதா? என்று கேட்கிறார். இதற்கும் பதில் ஆமாம் என்று இருக்க வேண்டும்.


முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம்

இன்சொ லினதே அறம்.” --- குறள் 93; அதிகாரம் – இனியவைகூறல்


முகத்தான் இனிது அமர்ந்து = முகத்தில் இனிமை அமைந்து; இனிது நோக்கி = இனிமையாகப் பார்த்து; அகத்தான் ஆம் = உள்ளத்தின் அடியில் இருந்து வரும்; இன்சொலினதே அறம் = இன்சொல்லே அறம்.


முகத்தில் இனிமை அமைந்து அது மட்டுமல்ல அதனை இனிமையாக வெளிப்படுத்தி மேலும் உள்ளத்தின் அடி ஆழத்தில் இருந்து வரும் இன்சொல்லே அறம்.


என்ன ஒரு திட்டமிடல் பாருங்க நம்ம பேராசானுக்கு! ஒவ்வொரு படியாக அப்படியே நம் கையைப் பிடித்துக் கொண்டு நம்மை அழைத்துச் செல்கிறார்!

இங்கே ஒரு இலக்கணக் குறிப்பைப் பார்க்கலாம்.


முகம் + ஆல் என்றால் “முகமால்” என்று சொல்ல மாட்டோம். “முகத்தால்” என்றுதான் சொல்லுவோம்! (“ஆல்” என்பது மூன்றாம் வேறுமை உருபு).


அஃதாவது, முகம்+அத்து+ஆல் = முகத்தால். (மூன்றாம் வேற்றுமை விரி). அத்து என்ற சொல் சாரியை. இதன் பயன் ஒரு சொல்லை ஒலிக்கும்போது எளிமைபடுத்தும், மென்மைபடுத்தும்.


மகர மெய்யுடன் (ம்) “ஆல்” சேரும்போது “அத்து” சாரியை தோன்றும். “இல்” என்ற ஐந்தாம் வேற்றுமை உருபுக்கும் அவ்வாறே. உதாரணம் – நிலத்தில், மனத்தில்.


ஆனால், நம் பேராசான் “ஆல்” என்னும் உருபைத் தவிர்த்து “ஆன்” என்னும் உருபைப் பயன்படுத்தியுள்ளார். அஃதாவது “முகத்தான்”, “அகத்தான்” என்கிறார்.


இதற்கு இலக்கண ஆசிரியர்கள் சொல்லும் விளக்கமாவது:


வரும் சொல்லின் முதல் எழுத்து உயிர் எழுத்தாக இருப்பின், அஃதாவது, இந்தக் குறளில் வந்துள்ள “அமர்ந்தினிது” என்ற சொல்லில் “அ” போன்ற உயிர் எழுத்து முதலில் வந்தால், “ஆன்” என்று பயன்படுத்த வேண்டுமாம்.

“முகத்தான் அமர்ந்து” என்று எழுத வேண்டுமாம். முகத்தால் பார்த்து; முகத்தால் நோக்கி என்று எழுதலாம். ஏன் என்றால் பா, நோ என்பன உயிர் மெய் எழுத்துகள்.


வரும் சொல்லின் முதல் எழுத்து உயிராக இருப்பின் ஆன், ஓடு, இன், தோறும், ஓர்.


வரும் சொல்லின் முதலில் உயிர்மெய் இருந்தால் ஆல், ஒடு, இல், தொறும், ஒரு.


திருக்குறளில் இருந்து உதாரணம்:


முகத்தான் அமர்ந்து – குறள் 93 - (ஆன் – அ - உயிர்); எச்சத்தால் காணப்படும் – குறள் 114 (ஆல் – கா - உயிர்மெய்);


கல்லாரோடு ஏனையவர் – குறள் 410-(ஓடு -ஏ - உயிர்); விலங்கொடு மக்கள் – குறள் 410 - (ஒடு – ம - உயிர்மெய்);


மனநலத்தின் ஆகும் – குறள் 459 - (இன் – ஆ - உயிர்) ; நிலத்தில் கிடந்தமை – குறள் 959 - (இல் – கி - உயிர்மெய்);


வெளிப்படுந்தோறும் இனிது – குறள் 1145 – (தோறும் – இ – உயிர்); களித்தொறும் கள்ளுண்டக்கால் – குறள் 1145 – (தொறும் – க – உயிர்மெய்).


இதனை எளிமையாக எனக்கு விளங்கச் செய்த என் ஆசிரியர் புலவர் வெற்றியழகனாரை என் மனம், மொழி, மெய்யால் போற்றி வணங்குகிறேன்.


இது சில இடத்தில் மாறியும் அமையும். அப்போது அது இழிவையோ சிறப்பையோ உணர்த்தும். பின்பொரு நாள் விரிப்போம்.


மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.






Post: Blog2_Post
bottom of page