top of page
Search

முகத்தின் இனிய ... 824, 19/09/2021

19/09/2021 (208)

அன்பிற்கினியவர்களுக்கு:

பசலைன்னு ஒரு நோய் இருக்கான்னு என் நண்பர் ஒருத்தர் கேட்டிருந்தார். இருக்குன்னு சொல்கிறார்கள் உளவியல் அறிஞர்கள். அது ஒரு விதச் சோகை நோயாம். அதுக்குப் பெயரும் வைத்திருக்கிறார்கள்.

 

ஜெர்மானிய மருத்துவர் ஜோஹன்னஸ் லேன் (Dr. Johannes Lange) என்பவர் இதைப் பெரும்பாலும் கன்னியர்களுக்கு வரும் ஒரு நோய் என்கிறார். தோல் வெளுக்குமாம், பசியிருக்காதாம், மூச்சு விட சிரமப்படுவாங்களாம், மற்றும் பல.. எப்போ சொன்னார் இதை என்றால் 1554 இல்! இந்த நோயை ஆங்கிலத்தில் green sickness, cholorosis, hypochromic anaemia அப்படி இப்படின்னு நீட்டுகிறார்கள்.

 

நான் அது இட்டுக் கட்டிய கவிஞர்களின் கற்பனை என்றிருந்தேன்! இது நிற்க.

 

இன்றைக்கு நாம் பார்க்கப் போவது அஞ்ச வேண்டிய சிரிப்பு! சிரிச்சாகூட ஆபத்து. நம்ம பழம்பெரும் நடிகர் நம்பியார் சிரிப்பை பார்த்து இருப்பீங்க.

 

வெளுத்ததெல்லாம் பால் இல்லை; சிரித்ததெல்லாம் சிறப்பில்லை!

 

கூடா நட்பு (83 ஆவது) அதிகாரத்திலிருந்து ஒரு குறள். கொஞ்சம் நிறுத்து என்றார் ஆசிரியர்.

 

ஒரு குறள்ன்னு சொல்லணுமா ஓர் குறள் என்று சொல்ல வேண்டுமா? ன்னு ஆசிரியர் கேட்டார். வழக்கம்போல நான் ‘ங்கே’ன்னு விழித்தேன் என்று சொல்லவும் வேண்டுமோ?

 

உயிர் எழுத்துக்கு முன் ‘ஓர்’ வருமாம். ஓர் இரவு, ஓர் அணில் …

உயிர்மெய் எழுத்துகளுக்கு முன் ‘ஒரு’ வரவேண்டுமாம். ஒரு படம், ஒரு மானிடன் …

 

நம்மாளு: ஐயா, ‘ஒரு ஊரிலே’ ன்னு தானே பல கதைகள் தொடங்குது?

 

சரியான கேள்வி. பல பழம் பெரும் பாடல்களில்கூட இந்த மயக்கம் இருக்கிறது. இது கவிஞர்களுக்கு அளிக்கப் பட்டுள்ள உரிமை. இதை ‘வழுவமைதி’ என்பார்கள். சில சமயம் ஓசை நயத்திற்காகப் பேச்சு வழக்கில் பயன்படுத்துவதிலும் தவறில்லை.

 

குறளுக்கு வருவோம்.

முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா

வஞ்சரை அஞ்சப் படும். - 824; - கூடா நட்பு

 

முகத்தின் இனிய நகாஅ அகத்து இன்னா வஞ்சரை = நேரிலே பார்க்கும் பொழுது சிரித்துப் பழகி, மனத்துக்குள் பகை வைத்திருக்கும் வஞ்ச எண்ணம் கொண்டவர்களிடம்;  அஞ்சப்படும் = அஞ்ச வேண்டும்.

 

நேரிலே பார்க்கும் பொழுது சிரித்துப் பழகி, மனத்துக்குள் பகை வைத்திருக்கும் வஞ்ச எண்ணம் கொண்டவர்களிடம் அஞ்ச வேண்டும்.

 

“….சிரிப்பது போலே முகம் இருக்கும், சிரிப்புக்குப் பின்னால் நெருப்பிருக்கும்

அணைப்பது போலே கரம் இருக்கும், அங்கே கொடுவாள் மறைந்திருக்கும் …”

இந்தப் பாடலைக் கேட்டு இருக்கீங்களா? தெரிந்தால் சொல்லுங்கள்.

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Post: Blog2_Post
bottom of page