top of page
Search

முயங்கிய கைகளை ... 1238, 3, 31/03/2024

31/03/2024 (1121)

அன்பிற்கினியவர்களுக்கு:

நம் முன் செல்லும் ஒருவரை, இவர் அவராக இருக்குமோ என்று உற்று நோக்குவோம். அந்த மனிதர் அந்தக் கணத்தில் ஏதேச்சையாகத் திரும்பிப் பார்ப்பார்! இது போன்ற நிகழ்வு அனைவரின் வாழ்க்கையிலும் அனுபவித்த ஒன்றாக இருக்கும்.

 

ஒருவரைக் காண வேண்டும் என்று இருப்போம். எதிர்பாராதவிதமாக நம் செல்லும் இடத்தில் அவர் இருப்பார். அண்மையில்கூட, நான் ஒரு இடத்திற்குச் சென்ற போது, நான் பார்க்கவேண்டும் என்று நினைத்தவரும் அங்கிருக்க, மிக்க மகிழ்ச்சியானத் தருணமாக அமைந்தது.

 

மனத்திற்கு அற்புத சக்தி உண்டு. நினைத்த நேரத்தில், நினைத்த வடிவில், நினைத்த நேரத்திற்கு, நினைத்த இடத்திற்கு விரைந்து செல்லும்.

 

அதேபோல, நாம் ஒன்றை கூர்மையாக நினைக்க அது நம் மனத்துக்குள் வந்து அமர்ந்து கொள்ளும். அதை ஆங்கிலத்தில் Power of Focus (கூர்மையின் வலிமை) என்பார்கள். நம் சிந்தனையை ஒட்டிய பல செய்திகளும் தொடர்புகளும் நமக்கு வாய்க்கும்.

 

திறக்காத வாசல்கள் திறக்கும். இவ்வாறு நிகழ்வதனை, தற்செயலான நிகழ்வு (Coincidence) அல்லது தெய்வாதீனம் (Providence) என்பார்கள்.

 

திருக்குறளில், கடவுளின் இலக்கணத்தை நம் பேராசான் விளக்க முற்படும்போது ஒரு அழகான பாடலை அமைத்துள்ளார். காண்க 14/07/2021, 11/05/2022. மீள்பார்வைக்காக:

 

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார். - 3;  - கடவுள் வாழ்த்து

 

சேர்தல்  என்ற சொல்லுக்கு இடைவிடாது நினைத்தல் என்று பரிமேலழகப் பெருமான் பொருள் சேர்கிறார். இடைவிடாது நினைக்கும் பொழுது இறைவன் மனத்திற்குள் வந்து அமர்ந்து வழி நடத்துவானாம். இயற்கையின் சக்தியைதான் இறை என்கிறோம்.  

 

நினைவு நல்லது வேண்டும்;

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;

மனதிலுறுதி வேண்டும் … மகாகவி பாரதி

 

என்ன காமத்துப் பாலில் இந்த விளக்கங்கள் என்றுதானே கேள்வி? இதோ வருகிறேன்.

 

அவள், அவளின் நெஞ்சைச் சென்று, அவரைக் கண்டு, தன் நிலையைச் சொல்லத் தூண்டுகிறாள். அவளின் நினைவின் கூர்மை அவனைச் சென்று அடைகிறது. அவனை, அவளின் எண்ண அலைகள் தக்குகின்றன.

அடுத்து வரும் மூன்று பாடல்களும் அவன் சொல்வது போல அமைந்துள்ளன.

 

பெண்ணே பாடிக் கொண்டிருக்கிறாளே, ஆணுக்கு ஒன்றும் இல்லையா என்ற வினாவிற்கு விடை அளிப்பதுபோல இந்தப் பாடல்கள் வருகின்றன.

 

அன்று நான் அவளை இறுகத் தழுவி இருந்தேன். அப்பொழுதுதான் எனக்குத் தோன்றியது, இவ்வளவு இறுகத் தழுவுகிறோமோ அவளுக்கு நோகாத என்று! சற்றே, பிடியைத் தளர்த்தினேன். அவ்வளவுதான், எங்கே நான் விலகிவிடுவேனோ என்று எண்ணி, அந்த நொடிக்குள் அவளின் நெற்றி வியர்த்துவிட்டது! அது போன்ற இயல்பைக் கொண்டவளை பிரிந்திருக்கிறேனே! என்ன கொடுமை இது என்று நினைக்கிறான்.

 

முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது

பைந்தொடிப் பேதை நுதல். – 1238; - உறுப்பு நலன் அழிதல்

 

ஊக்க = சற்றே தளர்த்த; முயங்க = தழுவ;

முயங்கிய கைகளை ஊக்க = இருக்கமாக அவளைத் தழுவுகிறோமே என்று எண்ணி தழுவிய என் கைகளை நான் சற்றே தளர்த்த; பைந்தொடிப் பேதை நுதல் பசந்தது = அந்த நொடிக்குள், நான் எங்கே விலகி விடுவேனோ என்று எண்ணி, அழகான தொடிகளை அணிந்திருந்த என்னவளின் நெற்றி பொலிவிழந்தது.

 

இருக்கமாக அவளைத் தழுவுகிறோமே என்று எண்ணி தழுவிய என் கைகளை நான் சற்றே தளர்த்த, அந்த நொடிக்குள், நான் எங்கே விலகி விடுவேனோ என்று எண்ணி, அழகான தொடிகளை அணிந்திருந்த என்னவளின் நெற்றி பொலிவிழந்தது.

 

அவன் படும் பாட்டைத் தொடர்ந்து கவனிப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Post: Blog2_Post
bottom of page