top of page
Search

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் ... 217, 218

27/11/2023 (996)

அன்பிற்கினியவர்களுக்கு:

சேரும் செல்வத்தை அந்த ஓப்புரவு ஒழுகுபவர் எப்படிப் பயன்படுத்துவார்?

வாழை மரம் இருக்கிறதே அதன் அத்தனைப் பகுதிகளும் நமக்கு பயன் தரக்கூடியன. தண்டு, மட்டை, பூ, காய், பழம், இலை இப்படி அனைத்தையும் நாம் பயன்படுத்தலாம். அது மட்டுமல்ல, அதன் ஒவ்வொரு பாகமும் மருத்துவக் குணம் கொண்டது. அதனை வெட்டிச் சாய்த்தலும் மீண்டும் புத்துரு கொண்டு முளைத்து நிற்கும்.

அது போல ஒப்புரவு ஒழுகுபவரிடம் சேரும் செல்வமானது ஒவ்வொரு துளியும் அனைவர்க்கும்  பயன்படுமாறு பார்த்துக் கொள்வார் என்கிறார் நம் பேராசான்.

 

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்

பெருந்தகை யான்கண் படின். - 217; - ஒப்புரவு அறிதல்

 

செல்வம் பெருந்தகையான்கண் படின் = செல்வமானது ஒப்புரவு ஒழுகுபவரிடம் சேரும்போது; மருந்தாகித் தப்பா மரத்தற்றால் = அஃது, அனைவரின் பிணியைத் தீர்க்கும் மருந்தாக ஒவ்வொரு துளியும் பயன்படும். வீணாகச் செலவழியாது. சில மரங்களின் அனைத்து பாகங்களும் எப்படி மருந்தாகித் தப்பாது பயன்தருமோ அந்த மரங்கள் போன்று அந்த செல்வம் பயன்தரும்.

 

செல்வமானது ஒப்புரவு ஒழுகுபவரிடம் சேரும்போது, அஃது, அனைவரின் பிணியைத் தீர்க்கும் மருந்தாக ஒவ்வொரு துளியும் பயன்படும். வீணாகச் செலவழியாது. சில மரங்களின் அனைத்து பாகங்களும் எப்படி மருந்தாகித் தப்பாது பயன்தருமோ அந்த மரங்கள் போன்று அந்த செல்வம் பயன்தரும்.

 

சரி, வளமையான காலங்களில் மரம் செழித்து ஓங்குவது போல செல்வம் பெருகி அவை பயன்தரலாம்! எல்லாக் காலமும் செழிப்பாக மைவது இல்லையே. அப்போது எப்படி? என்று ஒரு வினாவை யாரோ எழுப்பியுள்ளார்கள். அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக நம் பேராசன் அடுத்தக் குறளில் தெளிவுபடுத்துகிறார்.

 

வறண்ட காலங்களிலும் அம் மரங்கள் பயன் தரும். அம் மரங்கள் தங்களின் தன்மையை எப்போதும், எதற்காகவும் மாற்றிக் கொள்வதில்லை. அது போல, அவர்களுக்கு செல்வம் சுருங்கிய காலத்திலும் தங்கள் கடமையிலிருந்து விலகமாட்டார்.

 

இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார்

கடனறி காட்சி யவர். - 218; - ஒப்புரவு அறிதல்

 

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் = செல்வம் சுருங்கிய காலத்திலும் தாங்கள் ஒழுகி வரும் ஒப்புரவினைச் செய்யத் தளரார்; கடனறி காட்சியவர் = தாம் செய்ய வேண்டுதை எவ்வாறு செய்து முடிப்பது என்பதை அவர்களின் இயல்பான அறிவினால் கண்டு முடிக்கும் பார்வையுடையவர்கள் அவர்கள்!

செல்வம் சுருங்கிய காலத்திலும் தாங்கள் ஒழுகி வரும் ஒப்புரவினைச் செய்யத் தளரார். தாம் செய்ய வேண்டுவதை எவ்வாறு செய்து முடிப்பது என்பதை அவர்களின் இயல்பான அறிவினால் கண்டு முடிக்கும் பார்வையுடையவர்கள் அவர்கள்!

 

தடைக் கற்களும் படிக்கற்களாகும்! பயனம் தொய்வில்லமல் தொடரும் ஒப்புரவு ஒழுகுபவர்க்கு என்கிறார்.

 

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.




Post: Blog2_Post
bottom of page