top of page
Search

மறப்பின் எவனாவன் ... 1207, 14/03/2024

14/03/2024 (1104)

அன்பிற்கினியவர்களுக்கு:

இணைந்து இருந்த அந்த இனிமையான நாள்களை நினைத்துப் பார்ப்பதனால் உயிர் இருக்கிறது என்றாள்.

 

அவள்: நினைப்பதனால் உயிர்தான் இருக்கிறதே தவிர …

 

தோழி: அப்புறம் …

 

அவள்: நினைப்பதனால் உள்ளத்தில் காமத் தீ கொழுந்து விட்டு என்னை எரிக்கிறது.

 

உனக்கு ஒரு கதை தெரியுமா?

 

ஒரு நாய்க்கு ரொம்ப நாளாகச் சாப்பிட எதுவும் கிடைக்க வில்லை. பசி அதைக் கொஞ்சம் கொஞ்சமாக கொன்று கொண்டு இருக்கிறது. எழுந்து நிற்கவும் அதற்கு வலிவு இல்லை. கண்ணை லேசாகத் திறந்து பார்க்கிறது. அதற்கு முன் ஏதோ ஒரு விலங்கின் கால் தெரிகிறது. அதில் வெறும் எலும்பு மட்டும் தான் இருக்கிறது. தசையே இல்லை.

 

இருந்தாலும், சரி இதாவது கிடைத்ததே என்று மிகவும் சிரமப்பட்டு அதை எட்டிக் கடித்துச் சுவைக்கிறது. அதில் இருந்து துளித் துளியாய் இரத்தம் வடிகிறது. இரத்தம் இருந்தால்தானே கொப்பளிக்க! அந்த நாய்க்கு அது மிகுந்த சுவையைத் தருகிறது. அவசரமாக அது சாப்பிட முயல்கிறது.

 

அதற்கு அருகில் பசியோடு இருந்த இன்னுமொரு நாய் அதனைக் கவனிக்கிறது. சாப்பிட்டுக் கொண்டிருக்கும் அந்த நாயும் அதனை கவனித்து விட்டது. இது என்னடா நம்ம கெட்ட நேரம். நம்மால் இந்த இறைச்சியை எடுத்துக் கொண்டு ஓட முடியாதே என்று நினைக்கிறது.

 

அப்போது, அருகில் இருந்த அந்த நாய் சன்னமான குரலில் “நண்பா நீ சுவைத்துச் சாப்பிடுவது எது தெரியுமா? அது உன்னுடைய கால்தான்! உன் இறைச்சியையே நீ உண்ணுகிறாய். என்ன கொடுமை” என்கிறது.

 

அதற்கு, இவ்வளவு நாள்களாக எனக்கு ஏதுவும் சாப்பிடக் கிடைக்கவில்லை. இப்போது இதாவது கிடைத்துள்ளது. அதைக் கண்டு உனக்குப் பொறாமை. உன் வேலையைப் பார் என்று சொல்லிவிட்டு மீண்டும் வேக வேகமாக கடித்துச் சாப்பிடத் துவங்கியது …

 

அவரை நினைக்க நினைக்க நெஞ்சத்தில் தீ எழுந்து என்னை எரித்துக் கொண்டிருந்தாலும், என்னை அது கத கதப்பாக வைத்துக் கொண்டுள்ளது.  அவரை நினைக்காமல் விட்டால் இந்தச் சுகம் கூட கிடக்காது தோழி… நான் என்ன செய்வேன்?

 

மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்

உள்ளினும் உள்ளம் சுடும். – 1207; - நினைந்தவர் புலம்பல்

 

மறப்பு அறியேன் உள்ளினும் உள்ளம் சுடும் = பசித் தீயைப் போலக் காமத் தீ எழும்போது அவரை எங்கனம் மறப்பது. மறப்பறியேன். நினைத்தாலும் அத் தீ இன்னும் கொழுந்து விட்டு என் உள்ளத்தைத் தகிக்கிறது. இருப்பினும் அதுவும் இந்த உயிருக்குக் கத கதப்பைக் கொடுக்கிறது; மறப்பின் எவன் ஆவன் மன் கொல் = அதை விடுத்து, அவரை மறந்தால் என்ன ஆவேன்? உயிர் உடனே பிரிந்து விடுமோ என்ற அச்சம் என்னைத் தாக்குகிறது; மன் – ஒழியிசை; கொல் – அசை நிலை.

 

பசித் தீயைப் போலக் காமத் தீ எழும்போது அவரை எங்கனம் மறப்பது. மறப்பறியேன். நினைத்தாலும் அத் தீ இன்னும் கொழுந்து விட்டு என் உள்ளத்தைத்  தகிக்கிறது. இருப்பினும் அதுவும் இந்த உயிருக்குக் கத கதப்பைக் கொடுக்கிறது. அதை விடுத்து, அவரை மறந்தால் என்ன ஆவேன்? உயிர் உடனே பிரிந்து விடுமோ என்ற அச்சம் என்னைத் தாக்குகிறது.

 

நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Post: Blog2_Post
bottom of page