top of page
Search

வேட்பத்தாம் சொல்லுக ... 645, 646

14/04/2023 (771)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

குறள் 644 இல் திறனறிந்து சொல்லுக என்றார். அடுத்து வரும் குறள் நாம் பல முறை சிந்தித்துள்ள குறள். காண்க 26/01/2021 (9). மீள்பார்வைக்காக:


சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லும்சொல் இன்மை அறிந்து” --- குறள் 645; அதிகாரம்-சொல்வன்மை


திறனறிந்து சொல்லும் சொல்லைப் பிறிதோர் சொல் வெல்ல முடியாதவாறு இருத்தல் வேண்டும். மேலும் ஒரு குறிப்பு தருகிறார் குறள் 646இல்.


சரி, நாம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, தலைமை வேறு ஏதாவது சொன்னாலோ, அல்லது தவறான புரிதலால் பேசினாலோ நாம் சற்று அமைதியாகத்தான் இருக்க வேண்டுமாம். வல்லுநர்கள் வல்லாரை இகழ மாட்டார்களாம்!


அவர்கள், சொல்வதில் ஏதேனும் பொருள் இருந்தால் அதனைக் கொண்டுதான் அவர்கள் விரும்பும்படி நமது பேச்சை அமைக்க வேண்டுமாம். அப்படிப் பேசினால்தான், அது குற்றமற்ற சிறப்பாகப் பேசுபவர்களின் கோட்பாடாக இருக்குமாம்.


வேட்பத்தாம் சொல்லிப் பிறர்சொல் பயன் கோடல்

மாட்சியின் மாசற்றார் கோள்.” --- குறள் 646; அதிகாரம் – சொல்வன்மை

வேட்ப = விரும்பும் வண்ணம்; கோடல் = கொள்ளுதல்; கோள் = கோட்பாடு, துணிபு, முடிவு;

வேட்பத் தாம் சொல்லி = பிறர்க்கு நாம் சொல்லும்போது அவர்கள் விரும்பும் வண்ணம் சொல்லுதலும்; பிறர் சொற்பயன் கோடல் = அதே சமயம், அடுத்தவர்கள் சொல்வதில் உள்ள மேலான கருத்துகளை அதன் பயன் கருதி ஏற்றலும், அதைக் கொண்டு தன் பேச்சை மேலும் தகவமைத்துக் கொள்ளுதலும்;

மாட்சியின் மாசற்றார் கோள் = குற்றமற்று சிறப்பாகச் சொல்ல வேண்டும் என்று நினைப்பவர்களின் முடிவாக இருக்கும்.


பிறர்க்கு நாம் சொல்லும்போது அவர்கள் விரும்பும் வண்ணம் சொல்லுதலும்; அதே சமயம், அடுத்தவர்கள் சொல்வதில் உள்ள மேலான கருத்துகளை அதன் பயன் கருதி ஏற்றலும், அதைக் கொண்டு தன் பேச்சை மேலும் தகவமைத்துக் கொள்ளுதலும்; குற்றமற்று சிறப்பாகச் சொல்ல வேண்டும் என்று நினைப்பவர்களின் முடிவாக இருக்கும்.


அதாவது, ஒரு சொல்லைத் தேர்ந்தெடுக்கும் போது திறனறிந்தும், வெல்லும் சொல்லாகவும், மற்றவர்களின் கருத்தினையும் மதிக்கும் விதத்திலும், அனைவரும் விரும்பும்படியாகவும் அமைய வேண்டுமாம்!


சும்மா, நாம் நினைப்பதையெல்லாம் அடிச்சு விடக்கூடாது என்கிறார்.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Post: Blog2_Post
bottom of page