top of page
Search

வினைகலந்து வென்றீக ... 1268, 1263, 20/04/2024

20/04/2024 (1141)

அன்பிற்கினியவர்களுக்கு:

இந்த அதிகாரத்திலோ, இதற்கு முன் உள்ள அதிகாரங்களிலோ அல்லது இதனைத் தொடர்ந்து வரும் அதிகாரங்களிலோ, வராத “வேந்தன்” என்னும் சொல், குறள் 1268 இல் மட்டும் வருகிறது. மீள்பார்வைக்காக:

 

வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து

மாலை அயர்கம் விருந்து. – 1268; - அவர்வயின் விதும்பல்

 

என் செல்ல ராசா, அவரின் திறமைகளைப் பயன்படுத்தி வெற்றிக் கொடி நாட்டி எனக்காக வாங்கி வந்த ஆடைகளையும் அணிகலன்களையும் கொடுக்க, அவற்றையெல்லாம் நான் அணிந்து கொண்டு, மிக்க மகிழ்ச்சியுடன், எங்கள் இல்லத்தில் இருவரும் இணைந்து மாலையில் மகிழ்ச்சியானதொரு விருந்து செய்வோம்.

 

அவர்வயின் விதும்பலில் இருவரும் இணைய வேண்டும் என்ற விருப்பம் மேலோங்குகிறது. அதற்குரிய முனைப்புகளில் இருவருமே இருப்பதாகத்தான் பாடல்களும் அமைந்துள்ளன.

 

இடையே, இந்த “வேந்தன்” என்னும் சொல்  வந்ததனால், “வேந்தன் வெற்றி பெறட்டும், பின்னர் அவளை நான் தேடிச் சென்று மகிழ்வேன்” என்று ஒரு நிபந்தனை தலை தூக்குமா? என்பது என் எண்ணம்.

 

இதே அதிகாரத்தில், குறள் 1263 இல், அறிவையும், மன உறுதியையும் துணை கொண்டு சென்றார் என்று சொல்லும்போதும் வேந்தனுக்குத் துணையாகச் சென்றிருக்கிறான் என்ற எந்தக் குறிப்பும் இல்லை. காண்க 16/04/2024. மீள்பார்வைக்காக:

 

உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்

வரல்நசைஇ இன்னும் உளேன். – 1263; - அவர்வயின் விதும்பல்

 

உரன் = அறிவு, உறுதி, திண்மை

இந்த உலகை வெல்ல பொருளும் தேவை என்ற அறிவின்பால் ஆசை வைத்து அதையே ஒரு குறிக்கோளாக உள்ளத்திலும் உறுதி ஏற்றுச் சென்றவர், இப்போது தம் செயலில் வெற்றி கண்டு, என்னுடன் இணைய வருதல் வேண்டும் என்ற உணர்ச்சியின் உத்வேகத்தால், ஆசையால் விரைவாகத் திரும்ப வந்து கொண்டுள்ளார். அதனால் நான் இன்னும் மிக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

 

போர் என்றால் வெற்றியும் உண்டு; தோல்வியும் உண்டு. உயிர் பிழைப்பதும் கூடும்; அல்லதும் கூடும். அவ்வாறான நிலையை அவள் மனம் வருந்திய நிலையிலும் வெளிப்படுத்திடவில்லை.

 

நாட்டு மக்கள் தம் அரசன் வெற்றி பெற வெண்டும் என்ற விருப்பம் இருக்கலாமே! அந்த விருப்பம் நிறைவேற அவர்கள் காத்திருக்கிறார்கள் என்றால் அது குறித்தும் எந்த குறிப்பும் இல்லை.

 

அது மட்டுமல்ல, இந்தக் காமத்துபாலே இல்லற வாழ்க்கையைத்தான் படம் பிடித்துக் காட்டுகிறது. இதிலே நாட்டின் போர்ச்சூழல் எங்கனம் வரும். அதிலும் அந்த வேந்தன் வெற்றி பெற வேண்டும் என்று இந்த ஒரு குறளில் மட்டும் வருவது போல உரை காண்பது எப்படி என்று தான் என் ஐயம்.

 

அவள் அவனை வேந்தன் என்று அன்பாக அழைக்கிறாள் என்றே நினைக்கிறேன்.

 

உங்களின் பார்வைக்காக அறிஞர் பெருமக்கள் சிலரின் உரைகள்:

 

மூதறிஞர் மு.வரதராசனார்: அரசன் இச் செயலில் முனைந்து நின்று வெற்றி பெறுவானாக; அதன்பின் யாம் மனைவியோடு கூடியிருந்து அன்றுவரும் மாலைப்பொழுதிற்கு விருந்து செய்வோம்.

 

புலவர் குழந்தை: வேந்தன் போர் செய்து வெல்வானாக; யானும் மனைவியுமாக மாலைப் பொழுதுக்கு விருந்து நடத்துவோமாக.

 

உங்களின் கருத்தைப் பகிரவும்.

 

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.




Post: Blog2_Post
bottom of page