top of page
Search

விழுப்பேற்றின் ... 162, 353

02/11/2023 (971)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

மனத்தில் பொறாமை இல்லாமல் இருப்பதே நாம் பெற்றுள்ளப் பேறுகளில் பெரும் பேறு என்கிறார்.


அண்மை, அன்மை என்று இரு சொல்கள்.

அண்மை என்றால் அருகில், பக்கத்தில், சமீபத்தில் என்று பொருள்படும். அஃதாவது காலத்திற்கும் இடத்திற்கும் பயன்படுத்தலாம்.


அன்மை என்றால் அல்+மை. இல்லாதது அமைந்திருத்தல். அஃதாவது அற்றுப் போதல், விலகி நிற்றல், இல்லாமல் இருத்தல்.


எது இல்லாமல் இருக்க வேண்டும்? ஐயமே வேண்டாம். பொறாமை, அழுக்காறு இல்லாமல் இருக்க வேண்டும்.


அவ்வாறு இருந்தால்?

நம்மை உயர்த்தவல்ல உயர்ந்த செல்வங்களில் எல்லாம் அதுபோன்ற சிறந்த செல்வம் இல்லை என்கிறார்.


விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்.” --- குறள் 162; அதிகாரம் - அழுக்காறாமை


யார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின் = யாவரிடத்தும் பொறாமை இல்லாமல் இருக்கும் பண்பினைப் பெற்றால்; விழுப்பேற்றின் அஃது ஒப்பது இல்லை = நம்மை உயர்த்தவல்ல சிறந்தப் பேறுகளில் அதைவிட சிறந்தது இல்லை.


யாவரிடத்தும் பொறாமை இல்லாமல் இருக்கும் பண்பினைப் பெற்றால் நம்மை உயர்த்தவல்ல சிறந்தப் பேறுகளில் அதைவிட சிறந்தது இல்லை.


அழுக்காறாமையே அனைத்தையும் அளிக்கும்.


“யார் மாட்டும்” என்றதனால் நட்பு, பகை, நொதுமல் என்ற மூன்று வகையினருக்கும் பொருந்தும்.


பொறாமைக்குத் தாய் யார் என்று கேட்டால் சந்தேகம். நம்மைவிட அவனுக்கு அதிகமோ என்று எண்ணினால் போதும், திருவாளர் அழுக்காறு உடனே வளர்ந்தே பிறப்பார். ஆகையினால் சந்தேகத்தை அறவே அழிக்க வேண்டும்.


நமக்கானது நமக்கே உரித்தாகும் என்ற நம்பிக்கைதான் சந்தேகப் பேயைத் துரத்த வல்ல சவுக்கடி.

ஐயங்களிலிருந்து தெளிவு பெற்றுவிட்டால் நாம் கால் பதித்திருக்கும் இந்தப் பூமிப் பந்தைவிட தொலைவானமும் தொட்டுவிடும் தூரம்தான் என்கிறார். அஃதாவது, உண்மையான உண்மைகள் உள்ளிட்ட அனைத்தையும் அடைய முடியும் என்கிறார்.


ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்

வான் நணிய துடைத்து.” --- குறள் 353; அதிகாரம் – மெய்யுணர்தல்


இந்தக் குறளை விரித்தால் விரிந்து கொண்டே போகும் தன்மைத்து. எனவே, இன்னொரு நாள் இதனைப் பார்க்கலாம் என்றார் ஆசிரியர்.


மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.





Post: Blog2_Post
bottom of page