top of page
Search

வகையறிந்து வல்லவை ...721, 711

01/06/2023 (819)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

அவையறிதல் என்ற 72 ஆவது அதிகாரத்தைத் தொடர்ந்து அவை அஞ்சாமை அதிகாரத்தை வைக்கிறார்.

அவையறிதலில் முதல் குறளாகச் சொல்லின் தொகையறிந்து சொல்லக் கூடியவர்கள், அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக என்றார். சொல்லின் தொகை என்பன செஞ்சொல், இலக்கணச் சொல், குறிப்புச் சொல் ஆகும் என்றும் பார்த்தோம். காண்க 21/05/2023 (808).

மீள்பார்வைகாக:


அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்

தொகையறிந்த தூய்மை யவர்.” --- குறள் 711; அதிகாரம் – அவையறிதல்.


அவையஞ்சாமையில் (73 ஆவது அதிகாரம்) முதல் மூன்று குறள்களின் மூலம் அவைக்கு அஞ்சாரது சிறப்புகளைச் சொல்கிறார்.

அதில், முதல் குறளாக என்ன சொல்கிறார் என்றால் சொல்லின் தொகையறிந்து சொல்லக் கூடியவர்கள், தம் கருத்துகளைச் சொல்லக் கூடிய அவை இது, தவிர்க்க வேண்டிய அவை என்று அறிந்தபின் சொல்லக் கூடிய அவையில் பயத்தால் பிழையான கருத்துகளைச் சொல்லார் என்கிறார்.

711 ஆவது குறளின் முதல் மூன்று சீர்களை மட்டும் மாற்றி குறள் 721 ஐ அமைத்துள்ளார்.

வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்

தொகையறிந்த தூய்மை யவர்.” --- குறள் 721; அதிகாரம் – அவையஞ்சாமை


சொல்லின் தொகை அறிந்த தூய்மையவர் = சொல்லின் தொகைகளை அறிந்து சொல்லக் கூடியவர்கள்;

வல்லவை = பிழையானவை; வல்லவை வாய் சோரார் = பயந்தும் பிழையானதைச் சொல்லார்; வகையறிந்து வல்லவை வாய்சோரார் = அவை சொல்லக் கூடிய அவையா, தவிர்க்க வேண்டிய அவையா என்ற வகையினை உணர்ந்தவர்கள், சொல்லக் கூடிய அவைதான் என்று உணர்ந்தபின் பயந்தும் பிழையானதைச் சொல்லார்.


சொல்லின் தொகைகளை அறிந்து சொல்லக் கூடியவர்கள், மேலும், இந்த அவை சொல்லக் கூடிய அவையா, தவிர்க்க வேண்டிய அவையா என்ற வகையினை உணர்ந்தவர்கள், சொல்லக் கூடிய அவைதான் என்று உணர்ந்தபின் பயந்தும் பிழையானதைச் சொல்லார்.


அதாவது, மிக்கார் முன் அடக்கம் வேண்டும் என்று அறிவுறுத்திய நம் பேராசானுக்கு, சந்தேகம் வந்துவிட்டது. நாம் அடக்கமாக இருக்க வேண்டும் என்று சொன்னால் எல்லா கருத்துகளுக்கும் தலையை ஆட்டி மௌனமாக இருந்துவிடப் போகிறார்கள். அல்லது, அந்த உருட்டல் மிரட்டல்களுக்குப் பயந்து பிழையானக் கருத்துகளைப் பதிவு செய்துவிடப் போகிறார்கள் என்று நினைத்து அதனை மேலும் தெளிவு படுத்துகிறார்.


அதனால்தான் குறள்களைத் தனித்தனியாகப் பயிலக் கூடாது என்பார் என் ஆசிரியர். தாம் ஒரு இடத்தில் சொன்னக் கருத்துகளை சரியான இடத்தில் மேலும் தெளிவுபடுத்துவார். அதை நாம் கவனிக்காவிட்டால் பிழை விடுவோம்.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Post: Blog2_Post
bottom of page