top of page
Search

வசையிலா வண்பயன் ... 239, 240

03/12/2023 (1002)

அன்பிற்கினியவர்களுக்கு:

புகழைத்தரும் செயல்களைச் செய்யாமல் இருந்த உடல்களைப் பொறுத்த இந்த நிலத்தின் பயன் குறைந்து போகும் என்கிறார்.

 

உயிர் இருந்தும் நல்ல செயல்களைச் செய்யாததால் அதனை உடல் அஃதாவது யாக்கை என்கிறார்.

 

இந்த அதிகாரம் மிகவும் கவனிக்கத்தக்கது. விதித்தன செய்தல் விலக்கியன ஒழித்தல் அறம் என்றவர், விதித்தவைகளைச் செய்யாமல் விட்டால் இந்த நிலத்திற்கு மிகப் பெரிய குறையாகும் என்றும், ஒருவர்க்கு அதனால் இசை, அதாங்க புகழ் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால், வசை வந்து சேரும் என்று சொல்லி விதித்தனவற்றைச் செய்யத் தூண்டுகிறார். தோன்றின் புகழொடு தோன்றுக!

 

வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா

யாக்கை பொறுத்த நிலம். – 239; புகழ்

 

இசை இலா யாக்கை பொறுத்த நிலம் = புகழ் தரும் செயல்களைச் செய்யாமல் இருந்த உடல்களைப் பொறுத்த இந்த நிலமானது; வசை இலா வண் பயன் குன்றும் = புகழ் தரும் விளைவுகள் இல்லாமல் அதனின் வளமையான பயன் குறைந்துவிடும். வண்பயன் = வளமையான பயன்.

 

புகழ் தரும் செயல்களைச் செய்யாமல் இருந்த உடல்களைப் பொறுக்கும் இந்த நிலமானது  புகழ் தரும் விளைவுகள் இல்லாமல் அதனின் வளமையான பயன் குறைந்துவிடும்.

 

நம்மாளு: வெட்டியாக உட்கார்ந்து பொழுதைக் கழித்தால் சோத்துக்கு கேடு; பூமிக்கு பாரம்ன்னு சொல்கிறார்.

 

ஆசிரியர்: அது மட்டுமில்லைத் தம்பி, பூமிக்கு பாரமாக மட்டும் இருப்பவர்களை வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் நிரலில் (list) இணைக்க முடியாது என்று சொல்லி இந்த அதிகரத்தையும், அதனுடன் இந்த இல்லறவியலையும் நிறைவு செய்கிறார்.

 

நம்மாளு: செய் அல்லது செத்துமடி என்று இடித்துச் சொல்லாமல் செய்யுங்கள் உங்களைப் புகழ் தொடரும் என்று மிக அழகாகச் சொல்கிறார். அவர்கள்தாம் எப்போதும் இந்த நில உலகில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள், நினைக்கப் படுவார்கள். அவர்களால் இந்தப் பூமிக்கும் பயன் இருக்கும் என்கிறார்.

  

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய

வாழ்வாரே வாழா தார். – 240; - புகழ்

 

வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார் = பழிச்சொல்லுக்கு ஆளாகாமல் வாழ்பவர்களே வாழ்பவர்கள்; இசை ஒழிய வாழ்வாரே வாழாதார் = புகழ் தரும் செயல்களைச் செய்யாமல் வாழ்பவர்கள் வாழாதவர்களே.

 

பழிச்சொல்லுக்கு ஆளாகாமல் வாழ்பவர்களே வாழ்பவர்கள்; புகழ் தரும் செயல்களைச் செய்யாமல் வாழ்பவர்கள் வாழாதவர்களே.

 

புகழ் அதிகாரம் முற்றிற்று. இல்லறவியல் இனிதே நிறைவுற்றது. இனி, அதன் தொடர்ச்சியும் வளர்ச்சியுமான துறவறவியலைத் தொடர்வோம்.

 

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




 

 

 

Post: Blog2_Post
bottom of page