top of page
Search

அற்றாரைத் தேறுதல் ... 506

04/12/2022 (640)

“ஓம்புக” என்றால் “காக்க” என்று பொருள் என்பது நமக்குத் தெரியும். ஆனால், அதே சொல்லுக்கு “தவிர்க்க”, “விலக்குக” என்ற பொருளும் இருக்காம்!


குறிஞ்சிப் பாட்டு எனும் சங்காலப் பாடல் 261 வரிகளைக் கொண்டது. கபிலர் பெருமானால் இயற்றப்பட்ட து. இது ‘பத்துப்பாட்டு’ எனும் தொகையில் அடங்கியது. எட்டுத் தொகையும் பத்துப்பாட்டும் பதிணென் மேற்கணக்கு நூல்களாகும்.


அந்தக் குறிஞ்சிப்பாட்டில் சில வரிகள்:


... அஞ்சிலோதி அசையல் யாவதும்

அஞ்சல் ஓம்பு நின் அணி நலம் நுகர்கு என ...180/181 வரிகள்


அழகிய நுண்மையான கூந்தலையுடையவளே, கலங்கவேண்டாம், சிறிதளவுகூட அஞ்சுவதை விலக்கவும், (நான்)உன் பேரழகைக் கண்டுமகிழ்வேன் ...


‘அஞ்சல் ஓம்பு’ என்றால் ‘அஞ்சுவதை விலக்கு’ என்ற பொருளில் கையாண்டு இருக்கிறார் கபிலப் பெருமான்.


சரி, இப்போது என்ன அதற்கு என்கிறீர்களா? இதோ வருகிறேன் குறளுக்கு.


அதாவது, ஒருவரைத் தேர்ந்து எடுக்கும் போது கொஞ்சம் நஞ்சம் பற்று இருப்பவனாகப் பார்த்து தேர்ந்து எடுக்கனுமாம்.


பற்று இல்லாதவன்தானே ஊழல் பண்ணமாட்டான். பிறகு ஏன் பற்று இல்லாமல் இருப்பவனைத் தேர்ந்து எடுக்கக் கூடாது?


சுத்தமாக பற்று இல்லாதவன் ஊழலும் பண்ணமாட்டான். வேலையும் செய்ய மாட்டான். அவனுக்குத்தான் இந்த உலகம் என்ன சொன்னாலும் கவலை இல்லையே! என்கிறார் நம் பேராசான்.


என்ன ஒரு குறிப்பு? (point?) பார்த்தீங்களா! இப்படியும் இருக்கனும், அப்படியும் இருக்கனும்.


ஆகையால், இந்த உலகவியலில் நல்ல முறையில் பற்று இருப்பவனாகவும் இருக்கனும் ஒருவனை வேலைக்கு வைக்க வேண்டும் என்றால்.


அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்

பற்றிலர் நாணார் பழி.” --- குறள் 506; அதிகாரம் – தெரிந்து தெளிதல்


அற்றார் = சுற்றம் மீது பற்று அற்றார்; தேறுதல் = தெரிந்து தெளிதல், சேர்த்துக் கொள்ளுதல்; ஓம்புக = விலக்குக; அவர் மற்றுப் பற்று இலர் = அவர்கள் இந்த உலகத்தோடு எந்த த் தொடர்பும் இலர்; பழி நாணார் = (ஆதலால், இந்த உலகத்தின் பழிக்கு அஞ்சமாட்டார்கள்.


சுற்றம் மீது பற்று அற்றாரை சேர்த்துக் கொள்ளுதலை விலக்குக; அவர் மற்றுப் அவர்கள் இந்த உலகத்தோடு எந்தத் தொடர்பும் இலர்; ஆதலால், இந்த உலகத்தின் பழிக்கு அஞ்சமாட்டார்கள்.


நம்மாளு: EMI கட்டுகிற ஆளான்னு பார்த்து வேலைக்கு வைக்கனும். EMI க்கு பயந்தாவது ஒழுங்கா வேலை செய்வான்.


ஆசிரியர் சிரித்துக் கொண்டே நடையைக் கட்டினார்.


மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.


உங்கள் அன்பு மதிவாணன்


பி.கு.: EMI – Equated monthly installment. நாம் பெரிய கடன் வாங்கினால் சிறிது சிறிதாக பணத்தைத் திருப்பிக் கொடுப்பது. வங்கிகளை விரைவாக வளர்க்கும் ஒரு கருவி. நம்மை நீண்ட காலத்திற்கு கடனாளியாகவே வைத்து இருக்கும் வாகனம். ஆகையால் EMI ஓம்புக!





Comments


Post: Blog2_Post
bottom of page