இகல்காணான் ... 859, 372
25/04/2022 (423)
விதியைப் பற்றி நேற்று சில கருத்துகளைச் சொன்ன ஆசிரியர் ஒரு கேள்வி கேட்டார். விதியை நம்பலாமா? கூடாதா? என்பதுதான் கேள்வி.
விதியை நம்பாதவன்தான் உயரமுடியும். விதியை நம்பினால் முயற்சிக்கு இடம் ஏது? என்ற வாதம் மேலோட்டமாகச் சரி போலத் தோன்றுகிறது.
விதிக் கொள்கையைச் சரியாகப் புரிந்து கொண்டால் இந்தக் கருத்து மாறலாம். ஒவ்வொரு வினைக்கும் அதற்கு ஏற்றவாறு எதிர்வினை உண்டு என்பதுதான் விதி. (for every action there is an equal and opposite reaction – என்ன பாருங்க , இது காலம் காலமாக இருக்கும் ஒரு புரிதல்தான். ஆனாலும் இதனை Newton’s third law என்கிறோம்)
இந்த விதியை நம்பாமல் இருந்தால்தான் தவறு. இந்த விதியை நம்பினால்தான் முயலமுடியும். முயன்று எதையும் மாற்ற முடியும். விதியை நம்பியே ஆக வேண்டும்; முயற்சி செய்வதற்கு அது துணையாக இருப்பதால்!
ஓருவனுக்கு ஏதோ ஒரு காரணத்தால் கடன் வந்து சேர்ந்துவிடுகிறது. அதை நாம் விதி என்று எடுத்துக் கொள்வோம். அவனின் உழைப்பில் பெரும் பங்கு அதற்கு வட்டியைக் கட்டுவதிலும், முதலில் சிறு பகுதியைச் செலுத்துவதிலும் சென்று கொண்டு இருக்கும். தன் முயற்சியின் பெரும் பங்கு ‘விதி’யை மாற்றவே சென்று கொண்டிருக்கிறது என அவன் முயலாமல் இருந்தால்?
கடன் பெருகும். அதிலேயே அவன் மூழ்கி விடுவான். எனவே, விதியை மாற்றும் திறன் முயற்சிக்குத்தான் இருக்கிறது. ‘விதி’ என்று வாளாவிருப்பதல்ல விதி சொல்லும் செய்தி.
நாம் ஏற்கனவே பார்த்தது போல, விதி என்பது நம்மைச் சந்திக்கும் நிகழ்வுகள். அதை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதுதான் மதி. அதனால்தான், விதியை மதியால் வெல்லாம் என்கிறார்கள். சரி, இது நிற்க. குறளுக்கு வருவோம்.
இது ஒரு சிக்கலான குறளாக இருக்கிறது. அதனால்தான் மேற்கண்ட விசாரங்கள். வளர்ச்சிதான் ஒருவனுக்கு விதியாக இருந்தால் ‘இகல்’ (அதாங்க difference of opinion) ஒரு பொருட்டாகத் தோன்றாதாம். அவ்வாறு, இல்லாமல் அவனுக்கு தாழ்வுதான் விதியாக இருந்தால் அவனுக்கு எல்லாம் இகலாகவே இருக்குமாம் கேடு செய்வதற்கு.
“இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு.” --- குறள் 859; அதிகாரம் - இகல்
ஆக்கம் வருங்கால் இகல்காணான் = வளர்ச்சி வரும்போது இகல் காணான்; கேடு தரற்கு அதனை மிகல்காணும் = தாழ்வு என்பது விதியானால் இகலை மிகுதியாகக் காண்பான்.
இக்கருத்தைக் கவனம் வைத்துக் கொண்டால் விதியை வெல்லலாம்.
மேலும், நாம் ஏற்கனவே, ஊழ் என்ற அதிகாரத்திலிருந்து ஒரு குறளைப் பார்த்துள்ளோம். காண்க 27/12/2021 (306).
“பேதைப் படுக்கும் இழவூழ் அறிவுஅகற்றும்
ஆகல்ஊழ் உற்றக் கடை.” --- குறள் 372; அதிகாரம் – ஊழ்
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
