இரப்பான் வெகுளாமை ... 1060, 309
Updated: Feb 15, 2022
12/02/2022 (351)
துறவறவியலில் வெகுளாமை என்று ஒரு அதிகாரம் (31வது). அதில் ஒரு குறள் நாம ஏற்கனவே பார்த்ததுதான். மீள்பார்வைக்காக - காண்க 01/12/2021 (281):
“உள்ளியது எல்லாம் உடன் எய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.” --- குறள் 309; அதிகாரம் – வெகுளாமை
பொருள்: நினைத்தது உடனே நடக்க, கோபத்தைத் தவிர்க்கனும்.
சரி, இப்போ என்ன அதற்கு? என்று கேட்கிறீர்கள்.
இரவு என்ற அதிகாரத்தில் பெரும்பாலானக் குறள்கள் கொடுப்பவர்களுக்குச் சொன்னது போலவே இருந்தது. இப்போது, கடைசிக் குறள் சொல்ல வேண்டும் முடிவுரையாக.
நம் பேராசான், என்ன சொல்கிறார் என்றால் கொடுப்பவர்கள் இல்லை என்று சொன்னால் இரப்பவர்கள் கோபம் கொள்ளக் கூடாதாம். இதை அறுதிபட உறுதியாக இறுதியில் சொல்கிறார். (சும்மா ஒரு ஓட்டத்திற்காக அடுக்கினேன்).
எதற்காகச் சொல்கிறார் என்றால், உன் நிலைமையைப் பார்த்தாலே தெரியலையா? என்று கேள்வி கேட்கிறார்,
என் நிலைமைக்கு என்ன?
கொஞ்சம் பொறு தம்பி, நீ கோபப்பட்டு, கோபப்பட்டுதான் இந்த நிலைமைக்கு வந்து இருக்கே. அது உனக்கு கவனம் வரவேண்டாமா?
ஐயா, நீங்கதானே சொன்னீங்க இரத்தக்காரைக் காணின் கேட்கலாம் என்று. அவர்களும் கொடுக்கலைன்னா கோபம் வராதா?
அது சரிதான் தம்பி. உனக்கு இன்னும் ஒன்று தெரியனும்.
சில சமயம் அவர்களுக்கும் கொடுக்க இயலாது போகுன்னும் உனக்குத் தெரியாதா? உன்னையே நீ திரும்பிப் பார். கொடுக்க இயலாத நிலை, நிலையாமை போன்றவை யாவருக்கும் ஏற்படலாம். அது கொண்டு நீ அமைதியாகனும்.
ஏமாற்றிட்டான் என்று ஏங்கித்தவிப்பவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள்.
ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய குறள் மாதிரி தெரிகிறது. பல அறிஞர் பெருமக்கள் பல விதமாக பொருள் கண்டிருக்கிறார்கள் இந்தக் குறளுக்கு. சரி, குறள் இதோ:
“இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி.” --- குறள் 1060; அதிகாரம் – இரவு
இரப்பான் வெகுளாமை வேண்டும் = பொருள் கிடைக்காதபொது கோபம் கொள்ளக் கூடாது; நிரப்பிடும்பை தானேயும் சாலும் கரி = (தனது) வறுமையே அதற்குச் சான்று.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
