உடுக்கை இழந்தவன் கை ... குறள் 788
04/12/2021 (284)
நட்பு என்றால் எப்படி இருக்கனும் என்று நம் பேராசான் சொல்லியிருக்கார். நமக்கு தெரிந்த குறள்தான்.
ஒரு செயலைச் செய்ய வேண்டுமென்றால் மனது அதை உள்வாங்கி பின் செயல் கருவிகளுக்கு கட்டளையிட்டு அதை செய்ய வைக்கும். இதற்கு சில மணித்துளிகளாவது வேண்டும். (என்னைப் போல சிலருக்கு பல காலம் கூட ஆகலாம்! இது விதிவிலக்கு).
ஆனால், சில சமயம் செயல் கருவிகள் உடனே செயல்படத் தொடங்கும். இதை ஆங்கிலத்தில் reflex என்பார்கள். தமிழில் இது அனிச்சைச் செயல் என்று சொல்கிறார்கள். பொதுவாக செயல்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்: 1. இச்சைச் செயல், 2. அனிச்சைச் செயல்.
அனிச்சைச் செயலையும் இரு வகையாகப் பிரிக்கலாம். அவையாவன: 1. உடன் பிறந்த அனிச்சைச் செயல், 2. அனுபவதால், பயிற்சியால் நிகழும் அனிச்சைச் செயல்.
உடன் பிறந்த அனிச்சைச் செயல் எல்லாருக்கும் பொது. நமது காலிலே ஒரு அடிபடுகிறது என்றால் உடனே கை தானாக அங்கே போகிறது அல்லவா, அது பொதுவானது. இன்னொன்று, பழக பழக வருவது. உதாரணம் – விளையாட்டு வீரர்களின் லாவகம். நமது இல்லத்தரசிகளின் சமையல் சாகசங்கள்.
இச்சைச் செயலுக்கு நமது பெருமூளை (cerebellum) காரணம். அனிச்சைச் செயலுக்கு தண்டுவடமும் (Spinal cord), மூளையின் பிற பகுதிகளும் காரணமாம்.
சரி, என்ன இன்றைக்கு குறள் எங்கேன்னு கேட்கறீங்க. இதோ:
“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.” --- குறள் 788; அதிகாரம் – நட்பு
உடுக்கை = ஆடை; இழந்தவன் கைபோல = நழுவி அவிழும் போது கை தானாகச் சென்று சரி செய்வது போல; இடுக்கண் = ஒரு துன்பம் (நண்பனுக்கு) என்றால்; ஆங்கே = அப்போதே; களைவதாம் நட்பு = சென்று உதவுவதாம் நட்பு
யோசனையே பண்ணாம போய் உதவி செய்வதுதான் நட்பு என்கிறார். இது ஒரு அனிச்சைச் செயல் போல இருக்கனுமாம். இது பிறக்கும் போதே வாய்த்து விட்டால் சிறப்பு. இல்லையென்றால் பயிற்சியால் முயற்சிக்க வேண்டியதுதான். நட்புக்கு உதவுங்க என்பதை என்ன அழகாகச் சொல்லியிருக்கார் நம் பேராசான். அதையும் பழகி அனிச்சைச் செயல் ஆக்குங்க என்கிறார்.
நட்பும் இயற்கை, செயற்கை என்று இரண்டுவகைப் படுமாம். அதிலே, இயற்கை நட்பு என்பது, பிறப்பு முறையால் வருவது என்றும், ஊர் சம்பந்தத்தால் வருவது என்றும் இரு வகைப்படுமாம்…(இரண்டு இரண்டாக வகைப்படுத்துவதில் தமிழர்களை அடித்துக் கொள்ள முடியாது)
நாளை தொடரலாம் என்று ஆசிரியர் சொல்லிவிட்டார்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
