top of page
Search

உட்பகை அஞ்சி ... 883, 867

10/05/2022 (438)

அடுத்திருந்து கெடுப்பவர்களை, அதாவது உட்பகையை, என்ன செய்தாவது வெளிப்பகையாக செய்துவிட வேண்டும் என்று நம் பேராசான் குறள் 867, பகைமாட்சி எனும் அதிகாரத்தில் சொல்லியிருந்ததை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். காண்க 16/12/2021 (296). மீள்பார்வைக்காக அந்தக் குறள்:


கொடுத்தும் கொளல் வேண்டும் மன்ற அடுத்திருந்து

மாணாத செய்வான் பகை.” --- குறள் 867; அதிகாரம் – பகை மாட்சி


பக்கதிலிருந்தே நமக்கு வேண்டாதன, அழிவு தருவன செய்வான் பகையை; எதை இழந்தாலும் பரவாயில்லை என்று விட்டுக் கொடுத்து நிச்சயமாகச் செய்ய வேண்டும்.


ஒரு குயவர், தன் திகிரியில் (சக்கரம். அதாவது மண்பாண்டங்கள் செய்யப் பயன் படுத்தும் சக்கரம்) மண்ணினை இட்டு மிகவும் பாசமாக அதில் தண்ணீர் விட்டு இளக்கி, அழகாகத் தடவிக் கொடுத்து, இங்கேயும் அங்கேயும் இதமாக பிடித்துவிட்டு மண்ணினை நெகிழ்வாக்கி மட்கலங்களைச் செய்வார்.


மண் அதுவரை நினைத்திருக்குமாம். ஐயா, என்ன ஜாலியா இருக்கு. நம்மை இந்தச் சக்கரத்தில் உட்கார வைத்து ஜம்ன்னு சுத்துகிறார். போதாதுக்கு நமக்கு மசாஜ் (massage) வேற செய்துவிடுகிறார் என்று நினைக்குமாம். (உனக்கு எப்படித் தெரியும் என்று கேள்வியெல்லாம் கேட்க்கப் படாது. எல்லாம் கற்பனா தேவியின் அருள்தான்!)


நம்ம ‘மண்ணார்’ அந்த வேகமான சுற்றுதலில் கிரங்கி இருக்கும் போது நம்ம குயவர், ஒரு ஊசியை நைசாக எடுத்து கீழே வைப்பார் அந்த பச்சை மண் பானை அப்படியே அறுபட்டு அவர் கையிலே வரும். நம்ம மண்ணார் அறுபட்டதே அதற்கு தெரியாது. அது மட்டுமா, அதை அப்படியே எடுத்துப் போய் சுடு தணலில் வைத்து சுடுவார்! அப்பதான் அதற்குத் தெரியும் ஓ அவ்வளவும் இதற்குத் தானா பாலகுமாரான்னு.


சரி, இந்தக் கதை இப்போ எதற்குன்னு கேட்கறீங்க. கேட்காமல் விட மாட்டீங்கன்னு தெரியும். இது என் கதை இல்லைங்க. இது நம்ம பேராசானின் கதை.


உட்பகைக்கு அஞ்சி உங்களைத் தற்காத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால், எப்படி மண் பானைசெய்யும் உலைக்களத்தில் அந்த மண் அறுக்கப் பட்டு சுடுபடுமோ அதுபோலத் தப்பாமல் அறுத்து அதில் குழம்பும் வைத்துவிடுவார்கள். கவனம் தேவை என்கிறார் நம் பேராசான்.


உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து

மட்பகையின் மாணத் தெறும்.” --- குறள் 883; அதிகாரம் – உட்பகை


உட்பகை அஞ்சித் தற்காக்க = உட்பகைக்கு அஞ்சித் தன்னைக் காத்துக் கொள்க; உலைவு = நெகிழ்வு; உலைவிடத்து = உலைக் களத்தில், நெகிழ்ந்திருக்கும் சமயம்; மட்பகையின் = மண் + பகை = குயவர்; மாணத் = நிச்சயமாக; தெறும் = அறுபடும்.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com )






10 views2 comments
Post: Blog2_Post
bottom of page