கொடுத்தும் கொளல் வேண்டும் ... குறள் 867
16/12/2021 (296)
கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பை என்றார் குறள் 794ல், நம் பேராசான்.
அதே போன்று பகையையும் கொடுத்தும் கொளல் வேண்டுமாம், சொல்கிறார் நம் பெருந்தகை.
கொடுத்தும் கொளல் என்கிறத் தொடரை மூன்று குறள்களில் பயன் படுத்தியுள்ளார்.
1. குறிப்புணர்வாரை கொடுத்தும் கொளல் வேண்டும் – குறள் 703
2. குடிப்பிறந்து தன் கண் பழிநாணுவானை கொடுத்தும் கொளல் வேண்டும் – குறள் 794
3. மாணாத செய்வான் பகையையும் கொடுத்தும் கொளல் வேண்டும் – குறள் 867
பகைக்கும் அதே மதிப்பைக் கொடுக்கிறார் நம் பேராசான். ‘நண்பனைக் காட்டு உன்னைப் பற்றிச் சொல்கிறேன்’ என்பதைப் போல, உன் ‘பகைவனைக் காட்டு உன்னைப் பற்றியும் சொல்லலாம்’ என்கிறாரா?
உடன் இருப்பான், உதவுவது போலும் இருப்பான், ஆனால் அதில் உண்மை இருக்காது. அடுத்திருப்பான், ஆனால் ஆகாதன செய்வான் இப்படி சிலர் இருக்கக்கூடும். பசுவின் தோல் போர்த்திய புலி என்கிறார்களே அதுபோல. பல தலைமைக்கு தலைவலியே இதுதான்.
அந்த மாதிரி நபர்களை என்ன கொடுத்தாயினும் பகையாக்கி விட வேண்டும் என்கிறார். அவர்களை விலக்குவதால் சிறு நட்டங்கள் வரலாம். இதற்குத்தான் நாம் தயங்குவோம். ஆனால், தயங்காமல் அந்த இழப்புகளை சிறு விலையாகக் கொடுத்து அவர்களைப் ‘பகை’ கூட்டத்தில் சேர்த்து விட வேண்டும். பிறகு அதற்கு ஏற்றார் போல் நமது செய்கைகளைச் செய்யலாம்.
“கொடுத்தும் கொளல் வேண்டும் மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை.” --- குறள் 867; அதிகாரம் – பகை மாட்சி
அடுத்திருந்து மாணாத செய்வான் பகை = பக்கதிலிருந்தே நமக்கு வேண்டாதன, அழிவு தருவன செய்வான் பகையை; கொடுத்தும் கொளல் மன்ற வேண்டும் = எதை இழந்தாலும் பரவாயில்லை என்று விட்டுக் கொடுத்து நிச்சயமாகச் செய்ய வேண்டும்; மன்ற = நிச்சயமாக, தெளிவாக
அதாவது, குறள் காட்டும் வழிமுறையே இரண்டுதான்.
1. விதித்தன செய்தல்;
2. விலக்கியன ஒழித்தல்.
அவ்வளவுதான் அறம். இந்த இரண்டைப் பிடித்து விட்டால் போதும், “வேற எதுவும் வேணாமே நாம் வாழவேன்னு” பாட்டு பாடி ஜாலியாக(மகிழ்ச்சியாக) இருக்கலாம்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
