top of page
Search

ஒற்றினான் ஒற்றி ... 583, 828, 584

11/02/2023 (709)

ஒற்றும் உரை சார்ந்த நூலும் தலைமைக்கு இரு கண்கள் என்று ஒற்றின் முக்கியத்துவத்தை முதல் குறளில் எடுத்துவைத்தார். அடுத்தக் குறளில் எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவைகளை எப்போதும் அறிந்து வினையாற்றுவது அந்தத் தலைமையின் பணியாக இருக்க வேண்டும் என்றார்.


அப்படிச் செய்யவில்லையென்றால்? அதற்குத்தான் அடுத்தக் குறளினை வைக்கிறார் நம் பேராசான்.


ஒற்றினால் ஒற்றி, மேலும், அதன் பொருளை அறிந்து கொண்டு, ஆட்சி செய்யாதவனின் நாடு, நிலைத்து நின்றதில்லை என்கிறார்.


ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்

கொற்றம் கொளக்கிடந்த தில்.” --- குறள் 583; அதிகாரம் – ஒற்றாடல்


ஒற்றினான் ஒற்றி = ஒற்றினால் தன் நாட்டிலும், அயலகத்திலும் என்ன நடக்கிறது என்பதை அறிந்து; பொருள் தெரியா மன்னவன் = அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதையும் அதனை எப்படி நெறிப் படுத்தலாம் என்பதையும் தெரியாத தலைவன்; கொற்றம் கொளக்கிடந்தது இல் = வெற்றி பெற எந்த வழியும் இல்லை; கொற்றம் = வெற்றி, அரசாட்சி


ஒற்றினால் தன் நாட்டிலும், அயலகத்திலும் என்ன நடக்கிறது என்பதை அறிந்து, அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதையும் அதனை எப்படி நெறிப் படுத்தலாம் என்பதையும் தெரியாத தலைவன், வெற்றி பெற எந்த வழியும் இல்லை. அதாவது, அவனின் அரசு நிலைப்பதற்கு வழி இல்லை.


ஒற்றி முறை செய்யாக் குற்றம் சொன்ன நம் பேராசான், வரும் குறள்களில் ஒற்றின் இலக்கணங்களைச் சொல்கிறார்.


முக்கியமான ஒரு குறிப்பைச் சொல்கிறார் முதலில்! வேலை செய்கிறவன், வேலை செய்யாது வெட்டியா இருக்கிறவன் என்று எல்லாரையும் ஆராய்ந்து ஒற்று பார்ப்பதுதான் ஒற்று என்கிறார்.


வெட்டிப் பயலுகளைக் கூடவா ஒற்று பார்க்க வேண்டும்?


பசுத்தோல் போற்றிய புலிகள்தான் ஏராளம். புலிகளை சுலபமாக எதிர் கொண்டுவிடலாம். புரூட்டஸ்களை எதிர் கொள்வது கடினம்.


காண்க 26/09/2021 (215), மீள்பார்வைக்காக.


தொழுதகையுள்ளும் படை ஒடுங்கும் ஒன்னார்

அழுத கண்ணீரும் அனைத்து.” --- குறள் 828; அதிகாரம் – கூடா நட்பு


நண்பனைப் போல் நடித்திருக்கும் பகைவன் தொழுவான், அழுவான். புறத்திலே கொலைக் கருவி மறைந்திருக்கலாம். அகத்திலே அழுக்குகள் ஒளிந்திருக்கலாம் என்பது தான் இந்தக் குறளின் பொருள்.


இது நிற்க.


செயலாற்றுபவர்கள் மற்றும் விலகி நிற்பவர்கள் (Active persons as well as passive persons) என்று எல்லோரையையும் ஒரு ஒற்றன் கண்காணித்தல் வேண்டும்.


வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு

அனைவரையும் ஆராய்வது ஒற்று.” --- குறள் 584; அதிகாரம் – ஒற்றாடல்


வினை செய்வார் = துடிப்புடன் செயலாற்றிக் கொண்டிருப்பவர்களையும்; தம் சுற்றம் வேண்டாதார் = யாரும் வேண்டாம் என்று விலகி நிற்பவர்கள்; என்று அனைவரையும் ஆராய்வது ஒற்று = என்று அனைவரையும் ஆராய்வது ஒற்று.

(ஆங்கு - அசை நிலை).


துடிப்புடன் செயலாற்றிக் கொண்டிருப்பவர்களையும், யாரும் வேண்டாம் என்று விலகி நிற்பவர்கள் என்று அனைவரையும் ஆராய்வது ஒற்று.


யாரையும் விட்டு விடாதே என்பது இதன் பொருள்!


இப்படி அடியேன் எழுதிக் கொண்டிருக்கும் போது, ஆசிரியர் தொலைப் பேசியில் அழைத்தார். இன்றைக்கு, பண்டைய உரைக்காரகளின் உரைகளைப் படித்து எழுது என்றார்.


இந்தக் குறளை, மணக்குடவப் பெருமான் இப்படிப் பார்க்கிறார்:

அதாவது, தம் வினை செய்வார் – அதாவது தமக்கு துணை புரிபவர்கள், தம் சுற்றம் – தம்முடன் இருப்பவர்கள், தம்(மை) வேண்டாதார் – அயலார், மாற்றார் என்று அனைவரையும் கண்காணிப்பது ஒற்று என்கிறார். அருமையான விளக்கம். பரிமேலழகப் பெருமானும் அவ்வாறே உரை செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது.


(அடியேனின் உரை ஆசிரியர் வராத குறை! – பொறுத்தறுள்க)


இது போன்று, ஒரு சொல் (தம்) முன்னும் பின்னும் சென்று பொருளை விளக்குமானால், அதனை, “தீவக அணி” என்கிறார்கள் இலக்கணத்தில். தீவகம் என்றால் விளக்கு. அணி என்றால் அழகு, அலங்காரம்.


நம்ம பேராசான், ‘தம்’ என்ற இரண்டு எழுத்தைப் போட்டு எப்படி நம்மையெல்லாம் வேலை வாங்குகிறார் பாருங்கள்!


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)




Comments


Post: Blog2_Post
bottom of page