top of page
Search

காட்சிக்கு எளியன் ... 95, 544, 386

03/01/2023 (670)

அறத்துப்பாலில், இல்லறவியலில், இனியவை கூறல் எனும் அதிகாரத்தில் நாம் சிந்தித்தக் குறள்தான், காண்க 02/08/2022 (522).


பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு

அணியல்ல மற்றுப் பிற.” --- குறள் 95; அதிகாரம் – இனியவைகூறல்


தலைவனாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி பணிவும், கனிவும் மிக முக்கியம் என்பதை தெரிவித்திருந்தார் நம் பேராசான்.


பணிவு என்பதற்கு எங்கு பணிவுடன் இருக்க வேண்டுமோ அங்கு பணிவும், அதே சமயத்தில், எல்லா இடங்களிலும் இன்சொல் முக்கியம் என்பதையும் பரிமேலழகப் பெருமான் விளக்கினார்.


செங்கோன்மை அதிகாரத்தில் நான்காவது குறள் காண்க 30/12/2022 (666):

குடிகளை அரவணைத்து அவர்களிடம் இன்சொல் பேசுதலும், அவர்கள் தளர்ந்த போது அவர்களுக்கு வேண்டுவன செய்தலும் ஒரு தலைமை செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் அந்த தலைமையின் கீழ் அவனின் குடிகள் மட்டுமல்ல இந்த உலகமே அந்தத் தலைமையின் கீழ் நிற்கும் என்றார்.


குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்

அடிதழீஇ நிற்கும் உலகு.” --- குறள் 544; அதிகாரம் – செங்கோன்மை


அரவணைப்பது என்றாலே உதவுவதும், கனிவுடன் இன்சொல் பேசுதலும் ஆகும். அப்படிச் செய்தால் இந்த உலகம் அவனின் பின்னால் திரளும்.


அறத்துப்பாலை சொல்லி முடித்துவிட்டு பொருட்பாலைத் தொடங்குகிறார். அதில் முதல் அதிகாரம் “இறைமாட்சி”. அதாவது, தலைமையின் பண்புகளைச் சொல்கிறார். அதிலே ஒரு குறள்:


காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்

மீக்கூறும் மன்னன் நிலம்.” --- குறள் 386; அதிகாரம் – இறைமாட்சி


காட்சிக்கு எளியன் = குறைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று வருபவர்களுக்கும், செயலைச் செய்யும் முறைகளைத் தெரிந்து கொள்ள வருபவர்களுக்கும், எளிதில் அணுகக் கூடிய வகையில்; கடுஞ்சொல்லன் அல்லனேல் = கடுமையான சொற்களைப் பயன் படுத்தாமல் இனிமையான சொற்களைப் பயன்படுத்தும் தலைமையை; மன்னன் நிலம் = அத் தலைமையின் கீழ் உள்ள மக்கள்; மீக்கூறும் = உயர்த்திப் பேசுவார்கள்.


குறைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று வருபவர்களுக்கும், செயலைச் செய்யும் முறைகளைத் தெரிந்து கொள்ள வருபவர்களுக்கும், எளிதில் அணுகக் கூடிய வகையில், கடுமையான சொற்களைப் பயன்படுத்தாமல் இனிமையான சொற்களைப் பயன்படுத்தும் தலைமையை, அத் தலைமையின் கீழ் உள்ள மக்கள் உயர்த்திப் பேசுவார்கள்.


செங்கோன்மை அதிகாரத்தில், இதையே, வேறு விதமாகச் சொல்கிறார் நம் பேராசான். அதை நாளை பார்க்கலாம்.


இன்சொல் பழகுவோம்!


மீண்டும் சந்திப்போம்.


நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Post: Blog2_Post
bottom of page