top of page
Search

தள்ளா விளையுளும் ...731

10/01/2023 (677)


“நாடு” என்பதற்கு வரைமுறை என்ன?


நாடு என்று ஒரு அதிகாரத்தையே (74ஆவது) வைத்துள்ளார் நம் பேராசான்.

அதில் முதல் பாடலில் என்ன சொல்கிறார் என்றால் பொருள்களை உருவாக்கும் பெருமக்கள், குறிப்பாக விவசாயிகள்; அற உணர்வோடு செயல்களைச் செய்பவர்கள்; கேடு இல்லாத செல்வத்தைக் கொண்டிருக்கும் செல்வந்தர்கள் ஆகிய மூன்று வகையானவர்களின் கூட்டுதான் நாடு என்கிறார்.


தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்

செல்வரும் சேர்வது நாடு.” --- குறள் 731; அதிகாரம் – நாடு


தள்ளா விளையுளும் = மதிப்பு குன்றாத பொருட்களைச் செய்வோரும், விளைவிப்போர்களும்; தக்காரும் = அற உணர்வோடு செயல்களைச் செய்வோரும்; தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு = கேடு இல்லாத செல்வத்தைக் கொண்டவர்களும் சேர்ந்தால் அதுதான் நாடு.


இது என்ன, மூவரும் தனித்தனி பகுதியா என்றால் அதுவல்ல இதன் பொருள்!

இம் மூன்று பண்புகளையும் ஒருங்கே அமைந்திருக்கும் குடிகள் பெருமளவில் இருப்பின் அதுதான் ஒரு நாடாக பரிணமிக்க இயலும். அதாவது, அதுதான் நாடு!


அப்படி அமையும் ஒரு நாடானது, சுதந்திரமாக, தனக்கென ஒரு எல்லைகளை அமைத்துக் கொண்டு, அமைதியாக வாழும் குடிகளைத் தன்னகத்தே காத்து, இது போன்று இருக்கும் நாடுகளிடம் ஒரு மதிப்பையும், மரியாதையையும் பெற்று நட்புறவோடு தலை நிமிர்ந்து இருக்கும்.


“நாடு” (State) என்பதை எப்படி வரையறை செய்ய வேண்டும் என்ற கேள்வி அகில உலக அளவில் எழுந்த போது, 1933ல் உலக நாடுகள் Montevideo, Uruguayல் கூடி ஒரு வரைமுறையை உருவாக்கியது. இது தான் இப்போது நடைமுறையில் இருக்கும் வரைமுறை. அந்த ஒப்பந்ததிற்கு “Montevideo Convention on the Rights and Duties of States” என்று பெயர்.


அதன் முதல் உருபு (Article 1) என்ன சொல்கிறது என்றால் நாடு என்றால் நான்கு கூறுகள் இருக்க வேண்டுமாம். அதாவது:


1. நிரந்தரமாக அங்கேயே தங்கியிருக்கும் குடிகள் ( a permanent population);

2. தனக்கென ஒரு எல்லையைக் கொண்ட ஒரு நிலப்பரப்பு (a defined territory);

3. தன்னைத் தானே நிர்வகிக்கும் ஒரு அரசு ( a government); மேலும்

4. இது போன்று இருக்கும் மற்ற நாடுகளுடன் உறவை வைத்துக் கொள்ளும் தகுதி ( capacity to enter into relations with other States).


இந்த நான்கினை விரித்தால் விரிந்து கொண்டே இருக்கும்.


சரி, நாம் பார்த்துக் கொண்டிருந்த கொடுங்கோன்மையில் இருந்து ஒரே தாவாக தாவி இங்கே ஏன் வந்தோம்? என்று தானே கேட்கிறீர்கள்.


நாளை அதற்கான விடையைத் தெரிவிக்கிறேன் என்றார் ஆசிரியர். பொறுப்போம் நாளைவரை!


மீண்டும் சந்திப்போம்.


நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




.

Post: Blog2_Post
bottom of page