top of page
Search

துறப்பார்மன் ... குறள் 378, 1050

05/05/2022 (433)

துப்புரவு என்ற சொல்லை இப்போது தூய்மைக்குப் (sanitation) பயன் படுத்துகிறோம். அதனால், துப்புரவு பணியாளர் (sanitation worker) என்கிறோம்.


துப்புரவு என்றால் நுகர்தல், நுகர்ச்சிப் பொருள், அனுபவித்தல் என்ற பொருளில் அக்காலத்தில் பயன்படுத்தியுள்ளார்கள்.


வடலூர் வள்ளல் பெருமான், ஆறாம் திருமுறையில் ‘அச்சோ பத்து’ எனும் பத்து பாடல்களை அருளியுள்ளார். அதில் ஒரு பாடலில்:


“எப்பொருளும் எவ்வுயிரும் எவ்வுலகும்

விளங்க விளக்கிடுவான் தன்னைச்

செப்பரிய பெரிய ஒரு சிவபதியைச்

சிவகதியைச் சிவபோகத்தைத்

துப்புரவு பெற எனக்கே அருளமுதம்

துணிந்தளித்த துணையை என்றன்

அப்பனைச் சிற்றம்பலத்தென் அருட்பெருஞ்சோ

தியைப் பெற்றேன் அச்சோ அச்சோ.” --- வடலூர் வள்ளல் பெருமான்


சிவபதி, சிவகதி என்பன யோகத்தைக் குறிக்கின்றன; சிவபோகம் என்பது போகத்தைக் கூறிக்கிறது என்று நினைக்கிறேன். இவ்விரண்டினையும் ஒரு சேர நுகர (துப்புரவு) அருள் செய்தாயே அடடா, அடடா என்று பாடுகிறார்.


நாம் ஏற்கனவே நல்குரவு எனும் அதிகாரத்தில் இருந்து ஒரு குறள் பார்த்துள்ளோம்…ம்ம். காண்க 02/02/2022 (342) மீள்பார்வைக்காக.


துப்புரவு இல்லார் துவரத் துறவாமை

உப்பிற்கும் காடிக்கும் கூற்று.” --- குறள் 1050; அதிகாரம் – நல்குரவு


ஏதும் இல்லாதார் முற்றும் துறவாமல் இருப்பது, வாழ வேண்டும் என்று ஆசையை மட்டும் வைத்துக் கொண்டு வழி ஏதும் செய்யாமல் இருப்பது மற்றவர்களின் உப்பிற்கும், பழம் கஞ்சிக்கும்தான் வடிகால்.


இந்தக் குறளுக்கு ஒரு முன்னுரையாகத்தான் ‘ஊழ்’ அதிகாரத்தில் ஒரு பாடலை வைத்துள்ளார்.


ஏதுமிலார் பற்றுகளைத் துறக்காமல், வாழ ஆசைப்பட்டு துன்பம் அடைவதற்கு ‘ஊழ்’ என்பதுகூட ஒரு காரணமாக இருக்கலாம் என்று ஒரு எச்சரிக்கையாக சொல்லிவைத்துவிட்டார்.


துறப்பார்மன் துப்புரவு இல்லார் உறற்பால

ஊட்டா கழியும் எனின்.” --- குறள் 378; அதிகாரம் – ஊழ்


நுகரும் பொருள் இல்லாதவர்கள், அதற்கு வகையும் இல்லாதவர்கள் துறந்து விடுவார்கள்; ஆனால், அவர்கள் துன்பப்பட்டுத் தான் ஆகவேண்டும் என்று இருந்தால் துறக்காமல் துன்பப்படுவார்கள்.


துப்புரவு இல்லார் துறப்பார் = வறுமையில் இருப்போர் துறந்துவிடுவார்கள்; உறற்பால = பட்டுத்தான் ஆக வேண்டும்; ஊட்டா கழியும் எனின் = அது அவர்களைத் துன்பப்படுத்தாமல் போகாது.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)




14 views0 comments

Comments


Post: Blog2_Post
bottom of page