top of page
Search

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் ... குறள் 789

10/12/2021 (290)

இன்பத்திலும் துன்பத்திலும் இணைந்தே இருப்பது நட்பு என்று குறள் 787ல் எடுத்துச் சொன்ன நம் பேராசான், குறள் 788ல் உடுக்கை இழந்தவன் கை அனிச்சையாய் சென்று மானத்தைக் காப்பாற்றுவது போல உதவி செய்வதாம் நட்பு என்றார். (இங்கே காண்க).


அடுத்து, நட்பு வீற்று இருக்கும் இடம் எது? என்று ஒரு கேள்வி எழுப்புகிறார் நம் பெருந்தகை.

அதாவது உதவி, உதவி மனசு விட்டுப் போகுமாம். கடல் தண்ணிரைக் கையால் தள்ளி தள்ளி வழி செய்ய முடியுமா? ‘ஆற்றில் போட்டாலும் அளந்து போடு’ என்று எல்லாம் எண்ணத் தோன்றுமாம்.


இருந்தாலும், ஒல்லும் (இயலும்) வகையில் எல்லாம் உதவ வேண்டும் என்கிறார். அப்படி உதவுவதுதான் நட்பு அமர்ந்திருக்கும் உச்ச இருக்கை என்கிறார்.


நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி

ஒல்லும்வாய் ஊன்று நிலை.” --- குறள் 789; அதிகாரம் - நட்பு


நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் =நட்பு அமரும் உச்ச இருக்கை எது என்றால்; கொட்பின்றி = மனசு விடாம; ஒல்லும்வாய் ஊன்று நிலை = இயலும் வழியில் எல்லாம் தாங்கி நிற்கும் நிலை


பெருமூச்சுதான் வருகிறது. காசின் பின்னால் ஓடும் உலகத்தில் இது போன்ற அறிவுரை எவ்வளவு எடுபடும்? இல்லை, கொடுத்து கொடுத்து கெடுப்பதா? குழப்பம்தான் மேலோங்குகிறது.


வாரியார் சுவாமிகள் ஒரு கதை சொல்கிறார். ஒரு செல்வந்தர் தினமும் கோயிலுக்குச் செல்வார். அங்கே பலர் உதவியை இறைஞ்சி இருப்பதை தினமும் காண, ஒரு நாள் சில்லறைகளை கொடுக்க முற்படுகிறார்.


கூட்டம் அள்ளுகிறது. வரிசையில் வருமாறு வேண்டுகிறார். வரிசையில் வருகிறார்கள். ஒவ்வொருவருக்கும் கொடுத்துக் கொண்டே வருகிறார். அப்போது முன் வாங்கிச் சென்ற நபரே மீண்டும் வருகிறார்.


அவருக்கு கோபம் தலைக்குமேல் வர, ‘நீ ஏற்கனவே வாங்கின இல்லை, ஏன் மறுபடியும், மறுபடியும் வருகிறாய். வரக்கூடாது என்று நன்றாக திட்டி விரட்டுகிறார்.


சரிதானே, வாங்கியவர்களே மீண்டும் மீண்டும் வந்தால் எப்படி? என்று பக்கத்தில் இருப்பவரிடம் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.

அப்போது, பக்கத்தில் இருந்த முதியவர், ஐயா, உங்களுக்கு கடவுள் கேட்டதைக் கொடுக்கிறாரா? என்று கேள்வி எழுப்புகிறார்.


அதிலென்ன சந்தேகம். இந்த தெய்வம்தான் என் கண் கண்ட தெய்வம். கேட்தையெல்லாம் கொடுக்கும்; நித்தம் நித்தம் வேண்டுவதை நிச்சயமாக அளிக்கும் என்கிறார்.


அந்த முதியவர்: நீங்கள் தினம் தினம் இறைவனிடம் கேட்கும் போது அந்த இறைவன் என்றாவது ஒரு நாள், தினம் தினம் கேட்டு வருகிறாயே வராதே என்று சொன்னதுண்டா?


செல்வந்தர் மௌனமாகிறார்.


மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.




71 views1 comment
Post: Blog2_Post
bottom of page