நாடாது நட்டலின் கேடில்லை ... குறள் 791
12/12/2021 (292)
உயிர்கள் உய்ய உயர்ந்தோரால் எடுக்கப்பட்ட பொருட்கள் நான்கு. அவையாவன: அறம், பொருள், இன்பம், வீடு. இவை நான்கும் புருடார்த்தங்கள் என்று அழைக்கப்படுகிறது என்று முன்பு பார்த்தோம் (13/02/2021 (27), 14/02/2021 (28), 14/08/2021 (172) காண்க)
வீடினைப் பற்றி நேரடியாகச் சொல்லமுடியாது என்பதனால் நம் பேராசான் மற்ற மூன்றின் மூலம் குறிப்பால் உணர்த்தியுள்ளார் என்றும் பார்த்தோம்.
‘வீடு’ என்ற சொல்லை ஒரே ஓரு இடத்தில் மட்டுமே வள்ளுவப் பெருந்தகை பயன்படுத்தியுள்ளார்.
அதுவும் எங்கே என்று கேட்டால், ‘நட்பாராய்தல்’(80 ஆவது அதிகாரம்) எனும் அதிகாரத்தில் முதல் குறளில் (791) பயன்படுத்தியுள்ளார்.
நட்பு என்பது கொடுப்பதாலும் கொள்வதாலும் தொடங்கி வளர்வது. நாமே தேடிக்கொள்வது. அந்த நட்பினை தொடர்வதும், முளையிலேயே விடுவதும் நம் கையில்தான் உள்ளது.
ஆராயாமல் தொடர்ந்தால் அதைவிட கேடில்லை. வழக்கிலே குரங்கு-முதலை-நாவல் பழம் கதை, எலி-தவளை கதையெல்லாம் இருக்கு. இதையெல்லாம் கவனத்திலே வைக்கனும்.
வள்ளுவப் பெருந்தகை என்ன சொல்கிறார் என்றால் நாடாது (ஆராயாது) நட்டுவிட்டால், அதையும் தொடர்ந்துவிட்டால் நமக்கு ‘வீடு’ இல்லை என்கிறார். அதாவது நமக்கு விடுதலை இல்லையாம். அந்த நட்பினால் நாம பழி, பாவங்களுக்கு துணை போக வேண்டியிருக்கும். அதனாலே, இம்மை, மறுமை இரண்டிலுமே நமக்கு இன்பம் கிடைக்காது.
விடுவதுதான் வீடு. நாம் இந்த உலகைவிடும் போதும் நிம்மதி இருக்காது.
“நாடாது நட்டலின் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு.” --- குறள் 791; அதிகாரம் – நட்பாராய்தல்
நட்பு ஆள்பவர்க்கு = நட்பினை விரும்பி அதை ஆள்பவர்க்கு (FRIENDSHIP MANAGEMENT – நட்பு மேலான்மை); நட்டபின் வீடு இல்லை = ஒழுங்காக ஆராயாமல் நட்பினைத் தொடர்ந்தால் ‘வீடு’ இல்லை; நாடாது நட்டலின் கேடில்லை = (ஆகையால்) ஆராயாமல் கொள்ளும் நட்பைப்போல கேடு தருவது எதுவுமில்லை. சான்ஸ் (chance) இல்லை ராஜா
நட்புக்கும் மேலான்மை வேண்டும் என்று நம் வள்ளுவப் பெருந்தகை சொல்லியிருப்பது கவனிக்கத்தக்கது. எல்லாருக்கும் friendship request கொடுப்பது, வம்பை விலைக்கு வாங்குவது இப்போ வாடிக்கையா இருக்கு.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
