09/09/2023 (917)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
இளம் பெருவழுதியைத் தொடர்வோம்.
யாரோடும் வெறுப்பும் கொள்ளவும் மாட்டார்கள், வெறுக்கும் படியும் நடக்க மாட்டார்கள் என்கிறார் கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி. நம் பேராசான் சொல்லுவதோ “பல்லோர் முனியப் பயனில சொல்லாமை நன்று” என்கிறார். காண்க 16/11/2021 (266). மீள்பார்வைக்காக:
“பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.” --- குறள் 191; அதிகாரம் – பயனில சொல்லாமை
பிறர் அஞ்சத்தகும் செயல்களுக்குத் தாமும் அஞ்சி அதனை நீக்கும் பொருட்டு தூங்கவும் மாட்டார்கள் என்கிறார் கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி. அந்தக் கருத்தை நம் பேராசான் அஞ்சுவது அஞ்சாமை பேதைமை என்கிறார். காண்க 01/06/2022 (460). மீள்பார்வைக்காக:
“அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.” --- குறள் – 428; அதிகாரம் – அறிவுடைமை
பழி வரும் ஆனால் அதற்கு ஈடாக இந்த உலகம் முழுவது எடுத்துக் கொள்ளலாம் என்றாலும் அதனைப் புறந்தள்ளுவார்கள் என்கிறார் இளம் பெருவழுதி. இந்தக் கருத்துக்கு நம் பேராசான் சொல்வது, பழியைத் தரும் செயல்களைச் செய்து அதனால் வரும் பயன்களைவிடத்துன்பத்தைத் தரும் வறுமையே மேல் என்கிறார். காண்க 26/04/2023 (783).
“பழிமலைந் தெய்திய ஆக்கத்திற் சான்றோர்
கழிநல் குரவே தலை.” --- குறள் 657; அதிகாரம் – வினைத்தூய்மை
அயர்வு இலர் அஃதாவது மனத்தில் சலனமில்லாதவர்கள் என்கிறார் கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி. நம் பேராசான் குறள் 956 இல் வஞ்சனையால், சபலத்தால் சால்பு இல்லா செயல்களை, அதாவது, கீழானச் செயல்களைச் செய்யமாட்டார். காண்க 28/07/2022 (517).
“சலம்பற்றிச் சால்பில செய்யார் மாசற்ற
குலம்பற்றி வாழ்தும் என்பார்.”---குறள் 956; அதிகாரம் – குடிமை
முத்தாய்ப்பாக நம் இளம் பெரு வழுதி, தன்னை முன்னிறுத்த முயலாது பிறரைத் தூக்கிவிட எப்போதும் முயலுபவர்கள் இருப்பதால்தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டு இருக்கிறது அம்மா!
இந்தக் கருத்துக்கு நம் பேராசான், பண்பு உடைமை என்னும் அதிகாரத்தில் குறள் 996 இல்:
“பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்
மண்புக்கு மாய்வது மன்.” --- குறள் 996; அதிகாரம் – பண்பு உடைமை
பண்பு உடையார்ப் பட்டு உண்டு உலகம் = பண்பு மிக்கோர் இருப்பதனால் இந்த உலகம் நிலைத்திருக்கின்றது; அது இன்றேல் மண் புக்கு மாய்வது = அந்தப் பேறு இல்லையானால் இந்த உலகம் மண்ணோடு மண்ணாகியிருக்கும் என்பது உறுதி. மன் என்பது ஒழியிசை.
இளம் பெருவழுதி நம் பேராசானின் காலத்திற்கு முந்தியவரா, பிந்தியவரா, சம காலத்தவரா என்பது அறுதியிட்டுக் கூறமுடியாது. எனினும், இந்த உயர்ந்த அரிய கருத்துகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வழக்கில் இருந்துள்ளன என்பது இம் மொழிக்கு இருக்கும் தனிச் சிறப்பு என்று உறுதியாகக் கூறலாம்.
எதைப் போற்றுகிறோமோ அது வளரும் செழிக்கும். போற்றுதல் என்பது துதிபாடுவது மட்டுமன்று!
பி.கு: “மன்” என்ற சொல் “ஒழியிசை எச்சம்” . ஒழியிசை எச்சம் என்றால் ஒழித்துக் கட்டும் பொருளைக் கொண்டு தன் கருத்தை முற்றுப் பெறச் செய்யும்.
“கூரியதோர் வாள் மன்” என்றால் இந்தக் கூரிய வாள் ஒழித்துக் கட்டும் என்று பொருள்.
“மண் புக்கு மாய்வது மன்” என்றால் மண்ணோடு மண்ணாக மாய்ந்து ஒழியும் என்று பொருள்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comments