top of page
Search

மருவுக மாசற்றார் கேண்மை ... குறள் 800

21/12/2021


ஆராய்ந்து விலக்க வேண்டிய நட்புகள் மூன்று:

1. பேதையார் கேண்மை;

2. அல்லற்கண் ஆற்று அறுப்பார் நட்பு;

3. கெடுங்காலைக் கைவிடுவார் நட்பு.


பேதையார் கேண்மை (பேதைகளின் நட்பு) கைவிடுதல் ஊதியம் என்றார் குறள் 797ல். பேதைமை என்றாலே ‘ஏதம் கொண்டு ஊதியம் கைவிடல்தான். தவிர்க்க வேண்டியதைப் பிடித்துக்கொண்டு செய்ய வேண்டியதைத் தவிர்ப்பதுதான் ஏதம்.


ஒரு தலைமைக்கு எது ஏதம் என்ற கேள்விக்கு, குறள் 432ல் வரிசைப்படுத்தி இருந்ததைப் பார்த்தோம். காண்க 02/04/2021 (75)


ஒரு அல்லல் வரும்போது விலகி இருப்பவர்களின் நட்பையும் விலக்க வேண்டும் என்றார் குறள் 798ல்.


கெடுங்காலைக் (நமக்கு ஒரு மிகவும் இக்கட்டான நிலையில்) கைவிடுபவர்களை ஆராய்ந்து விலக்கிவிட வேண்டும் என்றார் குறள் 799ல்


இந்த அதிகாரத்திற்கு முடிவுரையாக ஒரு குறளை அமைத்துள்ளார்.


எல்லாவற்றையும் மறந்துவிட்டாலும்கூட இரண்டே இரண்டைமட்டும் கவனம் வைங்க என்கிறார். ரொம்பவே சுலபம் கவனம் வைக்க.


ஒன்று: நல்லவர்கள், மாசற்றவர்கள் நட்பைக் கொள்ளவேண்டும்

இரண்டு: சிறப்பு எது, ஏற்றதுஎது, ஒத்தது எது என்று அறியாத பேதைகளின் நட்பை எதைக்கொடுத்தாவது விலக்கிவிட வேண்டும். அவ்வளவுதான்.


மருவுக மாசற்றார் கேண்மைஒன்று ஈத்தும்

ஒருவுக ஒப்பிலார் நட்பு.” --- குறள் 800; அதிகாரம் – நட்பாராய்தல்


மாசு அற்றார் கேண்மை மருவுக = உலகத்தோடு ஒத்த இருக்கும் குற்றமற்றவர்களின் நட்பை நாடுக; ஒப்பு இலார் நட்பு ஒன்று ஈத்தும் ஒருவுக = நட்பு மேற்சொன்னது போல இல்லை என்றால் எதையாவது கொடுத்தும் தவிர்க்க.


நல்ல நட்புகளைப் பேணுவோம். தவிர்க்க வேண்டியதை தவிர்ப்போம்.


சரி, இப்படி எல்லாரும் பேதைகளைக் கைவிட்டால் அவர்கள் உய்வதுதான் எவ்வாறு? இது ஒரு நல்ல கேள்வி.


பதில் இருப்பின் பகிரவும். நானும் என் ஆசிரியரைக் கேட்கிறேன்.


மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.





15 views1 comment
Post: Blog2_Post
bottom of page