top of page
Search

அகழ்வாரைத் தாங்கும் நிலம் ... 151

26/10/2023 (964)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:


ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என்றார் ஏசு பிரான்.

வன்முறைக்கு வன்முறை என்பது தீர்வல்ல. நம் மேல் ஏவப்பட்ட வன்முறைக்கு நாம் வன்முறையைக் கையில் எடுக்காமல் இருந்ததனால் நமக்கு நீடித்திருக்கும் சுதந்திரம் வாய்த்துள்ளது. இந்த நெறியைக் கடைபிடித்து நம்மை எல்லாம் வழி நடத்தியதால் காந்தியார் அவர்களை “மகாத்மா” என்று உலகம் முழுவதும் கொண்டாடுகிறார்கள்.


அது போன்றே, நெல்சன் மாண்டேலா அவர்கள் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்து, தென் ஆப்பிரிக்காவிற்குச் சுதந்திரம் பெற்றுத் தந்தார்.


தீவிரவாதம் என்பது நேர்மையான கோரிக்கைகளைக்கூட மற்றவர்களால் ஏற்க முடியாமல் செய்துவிடும். தீவிரவாதம் நிரந்தரத் தீர்வை அளித்ததாக வரலாறு இல்லை. இருப்பினும் அதில் உள்ள ஈர்ப்பு மட்டும் குறையவே இல்லை.


கடாரம் கொண்டான், இமயம் கண்டான், அதை வென்றான், இதைத் தாக்கினான் என்பதெல்லாம் மன்னர்கள் ஆண்டக் காலம். அந்தக் காலம் மலையேறிவிட்டது. மக்கள் வெறும் ஒரு எண்ணிக்கையாக (numbers) இருந்த காலம் அது. ஆனால், இப்போது மக்கள் ஒவ்வொருவரும் ஒரு முதல் (Human capital) இந்த உலகம் செழிக்க!


மதங்கள் என்றும் மனங்களை இணைத்ததில்லை;

போர்கள் எப்போதும் வளர்ச்சியைத் தந்ததில்லை;

ஆயுதங்கள் அமைதியைத் தரும் என்றால் அதைவிட நகைமுரண் வேறில்லை!


மத குருமார்கள் உலக நன்மைக்காகச் சொன்னவைகளை நாம் தவறாக புரிந்து கொண்டு அதையும் மிக அழுத்தமாக பிடித்துக் கொண்டு நாம் ஆடும் ஆட்டம் கொஞ்சநஞ்சமல்ல.


அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்று சொல்லாத அருளாளர்கள் யார்? இருப்பினும் நம் குழந்தைகள்தாம் குழந்தைகள், மற்றவை சாத்தான்கள் என்று எந்த மதம் சொன்னது? கடவுளை நாம் ஏற்றுக் கொண்டோமா என்பதைவிட கடவுள் நம்மை ஏற்றுக் கொள்வானா என்பதுதான் எனது அச்சம்.


எதற்கும் பொறுமை இல்லை. குழுக்களின் பயங்கரவாதமானாலும் சரி, அரசுகளின் பயங்கரவாதமானாலும் சரி, அதனை எதிர்த்து இன்றளவும் சிறிய அளவில் மக்கள் ஒன்றுகூடி உலகமெங்கும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் முழக்கங்கள் என்னவென்றால்: “நீங்கள் உங்கள் நாட்டை நேசியுங்கள், ஆனால், உங்கள் அரசைச் சந்தேகப்படுங்கள். எச்சரிக்கையாக இருங்கள். உங்களுக்கும் ஒரு நாள் வரும்!”


சரி, இதென்ன தத்துவ விசாரம் என்பீர்களானால், நாம் பார்க்கப் போவது “பொறையுடைமை”.

“பொறையுடைமையாவது தமக்குத் துன்பம் செய்தாரைத் தாமும் துன்பம் செய்யாது அவர்மாட்டுச் சென்ற வெகுளியை மீட்டல்.” என்கிறார் மணக்குடவப் பெருமான்.


அஃதாவது, பொறுத்துப் போதல். இது ஒரு முக்கியமான பண்பு. இதனைத்தான் “இதுவும் கடந்து போகும்” என்கிறார்கள்.


நம் பேராசான் ஒரு அருமையான உவமையோடு தொடங்குகிறார். இந்தப் பூமியைப் பிளந்து நமக்குத் தேவையானதையெல்லாம் எடுக்கும் நம்மையும் அதே பூமி எப்படித் தாங்கிப் பிடிக்கிறதோ அதைப் போல நம்மை இகழ்வாரையும் நாம் பொறுத்துக் கொள்ளவேண்டும் என்கிறார்.


அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை.” --- குறள் 151; அதிகாரம் – பொறையுடைமை


அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல = நாம் இந்தப் பூமியைப் பிளந்து நமக்கு வேண்டுயதை உறிஞ்சி எடுக்கும்போதும் அதே பூமி நம்மைத் தாங்கிக் கொண்டும் நிற்கிறது. அது போல; இகழ்வார்ப் பொறுத்தல் தலை = நம்மைச் சிறுமையாகப் பேசினாலும், நல்லதன அல்லாதவை செய்தாலும் அதனைப் பொறுத்துப் போதல் என்பது தலையாயப் பண்பு.


நாம் இந்தப் பூமியைப் பிளந்து நமக்கு வேண்டியதை உறிஞ்சி எடுக்கும்போதும் அதே பூமி நம்மைத் தாங்கிக் கொண்டும் நிற்கிறது. அது போல; நம்மைச் சிறுமையாகப் பேசினாலும், நல்லதன அல்லாதவை செய்தாலும் பொறுத்துப் போதல் என்பது தலையாயப் பண்பு.


இதைத்தான் சுருக்கமாகப் பொறுத்தார் பூமி ஆள்வார் என்றார்கள்.

பொறுப்போம்.


மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.



Post: Blog2_Post
bottom of page