top of page
Search

ஆக்கம் இழந்தேம்என் றல்லாவார் ... 593

19/02/2023 (717)

ஊக்கம், அதாவது மன எழுச்சி இருப்பின், எது இல்லை என்றாலும் வென்றுவிடலாம் என்றும், ஊக்கம் இல்லை என்றால், எது இருந்தாலும் அதனால் பயனில்லை என்றும் முதல் இரு குறள்களில் தெரிவித்தார் (591 & 592).


சரி, உழைத்து, சிரமப்பட்டு பொருளை ஆக்கினோம். அது ஏதோ, சில, பல காரணங்களால் நம் கையைவிட்டு விலகிவிடுகின்றன. நடக்கத்தானே செய்கிறது! அப்போது என்ன செய்ய வேண்டும்? இந்தக் கேள்விக்கு பதிலைச் சொல்கிறார் வரும் குறளில்.


அதற்கும், ஊக்கத்தை உறுதியாகப் பிடித்துக் கொள் என்கிறார். ‘சென்றது போக நின்றது மிச்சம்’ என்று!


துணிந்து நில்; தொடர்ந்து செல்; தோல்வி கிடையாது தம்பி; சோர்ந்துவிடாதே என்கிறார்.


‘சரியான அல்லாயிடுச்சு’ ப்பா என்பார்கள் நம்ம ஊர் வட்டார வழக்கில். அல்லாயிடுச்சு என்றால் பேஜாராப் போச்சு என்று பொருள். அதாங்க, ‘கஷ்டமா போயிடுச்சுப்பா’ என்று பொருள். செந்தமிழில் சொன்னால் அல் ஆவர், அதாவது துன்பம் அடைவர். ‘அல் ஆகி விட்டது’ என்பது தூய தமிழ்!


இதை நம்ம வள்ளுவப் பேராசான் அப்படியே எதிர் மறையாகப் பயன்படுத்துகிறார்.


நம்மாளு: எப்படியே?


‘அல் ஆவர்’ என்பதை ‘அல் ஆவார்’ என்று பயன்படுத்துகிறார்.


சரி, நாம் குறளுக்கு வருவோம்.


ஆக்கம் இழந்தேம்என் றல்லாவார் ஊக்கம்

ஒருவந்தம் கைத்துடை யார்.” --- குறள் 593; அதிகாரம் – ஊக்கம் உடைமை


ஆக்கம் இழந்தேம் என்று அல் ஆவார் = ஆக்கிய பொருள்களை இழந்து விட்டோமே என்று துன்பமடையமாட்டார்கள்;

ஊக்கம் ஒருவந்தம் கைத்து உடையார் = தொடர்ந்து செல்லும் ஊக்கத்தை உறுதியாக கையகத்து உடையவர்கள்; ஒருவந்தம் = உறுதி


தொடர்ந்து செல்லும் ஊக்கத்தை உறுதியாக கையகத்து உடையவர்கள், ஆக்கிய பொருள்களை இழந்து விட்டோமே என்று துன்பமடையமாட்டார்கள்.


ஆக்கம் என்பதே உறுதியான ஊக்கத்தின் வெளிப்பாடு. ஆக்கம் – காரியம்; ஊக்கம் – காரணம்.


காரணத்தில் கவனம் வைத்தால் காரியம் சித்திக்கும்.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)






Post: Blog2_Post
bottom of page