top of page
Search

ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் ... குறள் 792

13/12/2021

நாடாது நட்டலின் கேடு இல்லை. அதாவது, ஆராயாமல் தேடிக் கொள்ளும் நட்பினைப் போல கேடு தருவது ஏதுமில்லை. அந்த நட்பினைத் தொடரவிட்டால் ‘வீடு’ இல்லை என்று நம் பேராசான் சொன்னதைப் பார்த்தோம் குறள் 791ல்.


ஒரு தடவை மட்டும் ஆராய்ந்தால் போதுமான்னு நம்மாளு கேள்வி கேட்டிருப்பார் என்று நினைக்கிறேன்.


அடுத்தக் குறளில், அது போதாது என்பது போல ‘ஆய்ந்து, ஆய்ந்து’ என்கிறார். அது என்ன ஆய்ந்து, ஆய்ந்து?


பல முறை ஆராயனுமாம், அதுவும் பல வகையிலும் ஆராயனுமாம். பல காலநிலைகளிலும் ஆராயனுமாம். சொல்கிறார்கள் அறிஞர்கள். நட்பு என்பது லேசுப்பட்ட விஷயம் இல்லை.


ஆய்ந்து, ஆய்ந்து கொள்ளாத நட்பு, துயரத்தை உண்டாக்குமாம். அதுவும் எப்படி, நம் உயிரையே எடுக்கும் அளவுக்குச் சென்று நம்மையே காலி பண்ணிடுமாம்.


ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை

தான்சாம் துயரம் தரும்.” --- குறள் 792; அதிகாரம் – நட்பாராய்தல்


கேண்மை = நட்பு; ஆய்ந்து ஆய்ந்து கேண்மை கொள்ளாதவன் = நட்பு கொள்ளப் போகிறவனது குணங்களையும் செய்கைகளையும் பல கால நிலைகளிலும், பலவாறும் ஆராய்ந்து நட்பு கொள்ளாதவன்; கடைமுறை தான்சாம் துயரம் தரும் = இறுதியில் தான் சாதற்கு தேவையான அனைத்தையும், நம்ம எதிராளிகளுக்கு வேலையே இல்லாம, நம்ம கூடவே இருந்து தானாக நடக்க வைக்குமாம்.


ஆய்ந்து, ஆய்ந்து நட்பு கொள்ளவில்லை என்றால் என்ன நடக்கும்ன்னு தெரியுது. ஆய்ந்து, ஆய்ந்து நட்பு கொண்டால் என்ன நடக்கும்? நம்மை எல்லா பிணியிலிருந்தும் காப்பாற்ற அது போல ஒரு மருந்து இல்லையாம். நம்ம ஔவை பெருந்தகை சொல்றாங்க மூதுரையில்.


உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா

உடன்பிறந்தே கொல்லும் வியாதி – உடன்பிறவா

மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும்

அம் மருந்து போல்வாரும் உண்டு.” --- மூதுரை 20; ஔவையார்


இவ்வளவு கடினமா நட்பு கொள்வதுன்னு நம்மாளுங்க இந்தத் தொல்லை எல்லாம் வேணாம், நாம சும்மாவே இருப்போம்ன்னு இருக்கக் கூடாது.


‘உடன் பிறந்தே கொல்லும் வியாதி’ களுக்கு தீர்வாக நட்பு இருக்கும். எப்படி என்றால் எங்கேயோ இருக்கும் மலையில் உள்ள மூலிகைகள் நமது பிணிகளைப் போக்குவது போல என்கிறார். அதிலேயும் ஒரு நுட்பம் இருக்கு. எவ்வளவோ செடிகள் இருக்க எப்படி பிணிதீர்க்கும் மூலிகையைக் கண்டு எடுக்கிறோமோ அதுபோல நட்புகளையும் கண்டுபிடிக்கனுமாம்.


மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.




22 views2 comments
Post: Blog2_Post
bottom of page