top of page
Search

இன்மையின் இன்னாது ... 558

16/01/2023 (683)

கொடுங்கோன்மையால் இல்லாதவனைவிட இருப்பவன் துன்பப்படுவானாம்!

இப்படிக்கூடவா நம்ம பேராசான் சொல்லியிருக்கார்? ஆமாம்.


அதாவது, சும்மா உட்கார்ந்து பொழுதை வீணாக்குபவர்களைவிட, உழைத்து பொருள் ஈட்டி, செல்வம் சேர்ப்பவர்கள் துன்பப்படுவார்கள் என்கிறார்.


ஒரு கற்பனை உரையாடல்:


அரசு: நீ உழைத்துச் சேர்ப்பதில் பாதியை அரசிடம் கொடுத்துவிடு. அரசிற்குத் தேவையானதை எடுத்துக் கொண்டு, மீதமுள்ளதில், உழைக்காத உனது தம்பிமார்களுக்கு அரசு உணவளிக்கும். உனக்கும் புண்ணியம் சேரும். மேல் உலகில் உனக்கு நல்லதொரு இடத்தை இறைவனளிப்பான். தயங்காதே!


அவன்: அரசே, இது என்ன நியாயம்? ஆண்டுக்கு ஆண்டு வரிகள் உயர்த்தப் படுகின்றன. நேர்மையாக உழைப்பவர்களே உறிஞ்சப்படுகிறார்கள். பலர் உழைக்க எந்த முயற்சியிலும் ஈடுபடுவதில்லை. வீணே பொழுதைக் கழிக்கிறார்கள். அவர்களுக்கு பயிற்சி அளிக்கலாம். மீனைக் கொடுப்பதைவிட மீன் பிடிக்க கற்றுக் கொடுக்கலாம். “If you give a man a fish, you feed him for a day. If you teach a man to fish, you feed him for a lifetime.” மேலும் சிலர், தான் ஈட்டுவதை மறைக்கிறார்கள். அவர்களை நேர்மையாக உழைக்கச் சொல்லாமல், ஒழுங்காக கணக்கை காட்டச் சொல்லாமல் ஆண்டுக்கு ஆண்டு வரியை உயர்த்தினால்...


அரசு: நிறுத்து உன் நியாயத்தை! சுயநலவாதியாக (selfish) இருக்காதே! நீதான் பொருள் ஈட்டுகிறாய் அல்லவா? கொடுத்தால் என்ன? கொடுப்பதில்தான் இன்பம். உனக்குத் தெரியாதா? அவனுக்கு இயலவில்லை. அவனிடம் கேட்டு என்ன பெற முடியும்? அது மட்டுமல்ல! அரசிற்கும் ஆண்டுக்கு ஆண்டு செலவுகள் அதிகரிக்கிறது!


அவன்: அரசே, என்னால் இயலவில்லை என்று எல்லோரும் இருந்தால் என்ன ஆகும்?


அரசு: நீ கேள்விகள் அதிகம் கேட்கிறாய். பொதி சுமக்கும் மாட்டைத்தான் வேலை வாங்க முடியும். முரண்டு பிடித்தால் இரண்டு அடி. அவ்வளவுதான். தானாக வழிக்கு வரும். சண்டி மாடுகளிடமும், சப்பை மாடுகளிடம் எப்படி வேலை வாங்கமுடியும்? நீ வேலை செய்வாய் என்று தெரியும். ஏமாற்ற நினைக்காதே. அரசிற்கு உன்னை பணிய வைக்க பல உத்திகள் இருக்கின்றன.


இந்தக் கணத்தில் இருந்து உனக்கு வரும் வருவாயில் அரசுக்குத் தேவையானதை பிடித்துக் கொண்டு கொடுக்குமாறு ஆணையிடுகிறது இந்த அரசு. இதை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்குத் தண்டனை!


உனக்கு அதிகம் வேண்டுமா? கடுமையாக உழை! மறக்காதே, அதிலும் அரசிற்கு பங்கு உண்டு! நீ நேர்மையாக உழைக்க உழைக்க நீ கொடுக்க வேண்டியது அதிகமாகும். அதனால் வரும் புண்ணியங்கள் அனைத்தும் உனக்குத்தான்!


அவன் ஓடுகிறான் வேலைக்கு நேரமாகிவிட்டதென்று!


இது நிற்க.


அதாவது, கொடுங்கோன்மையை கை கொள்ளும் அரசில், இல்லாமல் இருப்பதைவிட துன்பம் தருவது செல்வம் உடைமை என்கிறார் நம் பேராசான்.


இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா

மன்னவன் கோல்கீழ்ப் படின்.” --- குறள் 558; அதிகாரம் – கொடுங்கோன்மை


முறைசெய்யா மன்னவன் கோல்கீழ்ப் படின் = நியாயமறிந்து நடக்காத மன்னவனின் கீழ் வாழ்ந்தால்; இன்மையின் இன்னாது உடைமை = இல்லாததைவிட கொடியது இருப்பதுதான்.


நியாயமறிந்து நடக்காத மன்னவனின் கீழ் வாழ்ந்தால் இல்லாததைவிட கொடியது இருப்பதுதான்.


இன்னாது = கொடியது


நம்மாளு: வள்ளுவப் பெருந்தகை முதலாளித்துவ (capitalist) கொள்கை கொண்டவரா?


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.

(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)




Post: Blog2_Post
bottom of page