top of page
Search

இலனென்று தீயவை செய்யற்க ... 205, 204, 206, 319

21/11/2023 (990)

அன்பிற்கினியவர்களுக்கு:

மறந்தும்கூட பிறர்க்குத் தீயவை செய்ய நினைக்காதீர்கள் என்றார். இந்தக் குறளை நாம் முன்பு சிந்தித்துள்ளோம். காண்க 24/06/2021. மீள்பார்வைக்காக:


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்

அறம்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு. - 204; தீவினை அச்சம்


மறந்தும்கூட பிறர்க்குக் கேடு நினைக்காதீங்க. அவ்வாறு நினைப்பவரின் அழிவை இயற்கை நாடும்; உறுதி செய்யும்.


நம்மாளு: மறந்தும் செய்யாதீங்க என்று சொல்கிறீர்கள். என்னிடம்தான் ஏதும் இல்லையே. நான் எப்படியாவது பொருள் ஈட்டினால்தானே என்னைச் சார்ந்தவர்களையும் என்னையும் காப்பாற்றிக் கொள்ள முடியும்.  


வள்ளுவப் பெருந்தகை: ஏதும் இல்லை என்றாலும்கூட அறம் அல்லாதவைகளைச் செய்தல் கூடா. தீவினைகளைச் செய்தால் உங்களை அவை நீண்ட காலத்திற்கு ஒன்றும் இல்லாதவனாக்கிவிடும்.  


இலனென்று தீயவை செய்யற்க செய்யின்

இலனாகும் மற்றும் பெயர்த்து. - 205; தீவினை அச்சம்


இலன் என்று தீயவை செய்யற்க = என்னிடம் ஏதும் இல்லையே என்று தீயச் செயல்களைச் செய்யாதீர்கள்; செய்யின் = அவ்வாறு செய்யின்; பெயர்த்தும் = அந்தச் செயல்களைச் செய்து கடந்த பின்னும்; இலன் ஆகும் = இன்னும் வறியவர்களாகவே இருப்பீர். மற்று - அசை நிலை.


என்னிடம் ஏதும் இல்லையே என்று தீயச் செயல்களைச் செய்யாதீர்கள். அவ்வாறு செய்யின், அந்தச் செயல்களைச் செய்து கடந்த பின்னும் இன்னும் வறியவர்களாகவே இருப்பீர். அது மட்டுமல்ல, அந்தத் தீவினைகளால் வெகு நீண்ட காலத்திற்கு வறுமையில் இருந்து மீள முடியாமல் போகும்.


தீய வினைகளை நம் மனம், மொழி, மெய் பழகுவதால் நெஞ்சத்தில் ஈரம் இல்லாமல் போகும். அஃதாவது, அன்பில்லாமல் போகும். அது வறுமையிலும் வறுமை. கொடுமையிலும் கொடுமை! இல்லறத்திற்கு அன்பு அடிப்படை. அந்த அன்பினையே தொலைத்துவிட்டால்? காண்க அன்புடைமை.

 

நம்மைத் துன்பங்கள் தொடரக்கூடாது என்று நினைப்பவர்கள் மற்றவர்களுக்குத் துன்பங்கள் கொடுக்கும் செயல்களைச் செய்யாதீர்கள்.


தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால

தன்னை அடல்வேண்டா தான். - 206; தீவினை அச்சம்


அடல் என்றச் சொல்லுக்குக் கொல்லுதல், வலிமை, வெற்றி, ஒரு வகை மீன் என்றெல்லாம் அகராதி பொருள் சொல்கிறது. இங்கே, இந்தக் குறளில் அடல் என்றால் வருத்துதல் என்பது பொறுத்தமாக இருக்கும்.


நோய்ப்பால தன்னை அடல் வேண்டாதான் = துன்பங்களை விளைவிக்கும்  வினைகள் முதலானவை பின் வந்து நம்மை வருத்துதல் வேண்டாதவர்; தான் பிறர்கண் தீப்பால செய்யற்க = அவரும் பிறர்க்குத் தீயச் செயல்களைச் செய்யாமல் இருக்க வேண்டும்.


துன்பங்களை விளைவிக்கும்  வினைகள் முதலானவை பின் வந்து நம்மை வருத்துதல் வேண்டாதவர், அவரும், பிறர்க்குத் தீயச் செயல்களைச் செய்யாமல் இருக்க வேண்டும்.


முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்! காண்க 11/11/2023.


பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா

பிற்பகல் தாமே வரும். - 319; - இன்னாசெய்யாமை


நாம் எதைக் கொடுக்கிறோமோ அதையே பல மடங்கு பெறுவோம் என்பது இயற்கை நியதி. அன்பைக் கொடுப்போம்; பல மடங்கு அன்பைப் பெறுவோம்.


மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.




Post: Blog2_Post
bottom of page