top of page
Search

உளர்எனினும் இல்லாரொடு ... 730, 650

17/04/2023 (774)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

சொல்வன்மையின் முடிவுரையானக் குறளை நாம் நேற்று சிந்தித்தோம். காண்க 16/04/2023. மீள்பார்வக்காக:


இணர்ஊழ்த்தும் நாறா மலர்அனையர் கற்ற

துணர விரித்துரையா தார்.” --- குறள் – 650; அதிகாரம் – சொல்வன்மை


கற்றவைகளைப் பிறருக்குப் பயன்படும்படி தெளிவாக விரித்துச் சொல்லத் தெரியாதவர்கள்; கொத்து கொத்தாகப் பூக்கள் நன்றாக மலர்ந்து இருந்தாலும் அதனின் பயனாகிய நறுமணம் வெளிப்படாதவர்களாவர். அவர்கள் மதிக்கப்பட மாட்டார்கள்.


அவை அஞ்சாமையில் (73 ஆவது அதிகாரம்) இந்தக் கருத்தை ஒட்டியே வேறு ஒரு குறளும் செய்துள்ளார் நம் பேராசான்.


அதில் என்ன சொல்கிறார் என்றால் தாம் கற்றவற்றை அவையில் அழகாக எடுத்துச் சொல்லத் தெரியவில்லையென்றால், அவர் அந்த அவையில் இருந்தாலும் பயனில்லை. அந்த அவையில் இல்லாதவர்களுக்கும் அவருக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்கிறார்.


உளர்எனினும் இல்லாரொடு ஒப்பர் களனஞ்சிக்

கற்ற செலச்சொல்லா தார்.” --- குறள் 730; அதிகாரம் – அவை அஞ்சாமை

களன் = களம் = அவை; களனஞ்சிக் கற்ற செலச்சொல்லாதார் = அவைக்கு அஞ்சி கற்றதை விரித்து உணரச் சொல்லாதவர்; உளர் எனினும் இல்லாரொடு ஒப்பர் = அவர் அந்த அவையில் இருந்தாலும் இல்லாதவர்களோடுதான் அவரையும் சேர்க்க வேண்டும்.


அவைக்கு அஞ்சி கற்றதை விரித்து உணரச் சொல்லாதவர், அந்த அவையில் இருந்தாலும், இல்லாதவர்களோடுதான் அவரையும் சேர்க்க வேண்டும்.


இது கொஞ்சம் மென்மையான உரை!


“உளர்எனினும் இல்லாரொடு ஒப்பர்” என்பதற்கு அறிஞர் பெருமக்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், அவைக்கு அஞ்சி சொல்லாமல் இருப்பவர்கள் இந்த உலகத்தில் இருந்தாலும் இறந்தாரோடு ஒப்பர் என்று மிகக் கடுமையான ஒரு உரையைச் சொல்கிறார்கள்.


“இல்லார்” என்பதற்கு,

பரிமேலழகப் பெருமான் - ‘இறந்தார்’;

மணக்குடவப் பெருமான் - ‘செத்தார்’ ;

மூதறிஞர் மு.வரதராசனார் மற்றும் கலைஞர் மு.கருணாநிதி - ‘இறந்தவர்’;

புலவர் புலியூர் கேசிகன் – ‘அறிவற்றவர்கள்’ ;

பேராசிரியர் சாலமன் பாப்பையா – ‘வாழாதவர்கள்’ ;

என்று பொருள் சொல்கிறார்கள்.


இன்னும் சில அறிஞர் பெருமக்கள் ‘மாண்டவர்’ என்றும் உரை எழுதியுள்ளார்கள்.


அதாவது, அறிஞர்களின் பார்வையில் கற்றதை விரித்துணரச் சொல்லத் தெரியாதவர்கள், இருப்பதற்கு இல்லாமலே இருக்கலாம் என்று கடிந்துதான் சொல்கிறார்கள். ஆகவே, கற்பதை நாம் நன்றாகக் கற்க வேண்டும்.


கற்பது என்பது வேறு; நன்றாகக் கற்பது என்பது வேறு என்பார் என் ஆசிரியர்.


நன்றாகக் கற்பது என்பது நாலு பேருக்கு விளங்கச் சொல்லும் வகையில் கற்பது என்றும் சொல்லுவார்.


கற்பதை நன்றாகக் கற்போம்!


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Post: Blog2_Post
bottom of page