top of page
Search

எண்பதத்தான் ... 548, 386

04/01/2023 (671)

காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்

மீக்கூறும் மன்னன் நிலம்.” --- குறள் 386; அதிகாரம் – இறைமாட்சி


எளிதில் அணுகக் கூடிய வகையில், கடுமையான சொற்களைப் பயன்படுத்தாமல் இனிமையான சொற்களைப் பயன்படுத்தும் தலைமையை, மக்கள் கொண்டாடுவார்கள் என்பதைச் சொன்ன நம் பேராசான், அவ்வாறில்லாமல் இருந்தால் அந்த தலைமை தானாக தாழ்ந்து அழிந்து போகும் என்கிறார் செங்கோன்மை அதிகாரத்தில்.


அவர் பயன்படுத்தும் சொற்கள் எண் பதத்தான் மற்றும் தண் பதத்தான். பதம் என்றால் நிலை; எண் என்றால் எளிய; எண் பதத்தான் என்றால் எளிய நிலையில் இருப்பவன், அதாவது காட்சிக்கு எளியன்.


“தண்” என்றால் குளிர்ந்த என்ற பொருளில் வருவது நமக்குத் தெரியும். ஆனால், அதே “தண்” தாழ்ந்த என்ற பொருளிலும் வருமாம்; தண் பதத்தான் என்றால் தாழ்ந்த நிலையில் இருப்பவனாம். எதனால் தாழ்ந்த நிலை? அவன் பழியும், பாவமும் எய்தி மக்கள் வெறுக்கும் நிலையில் இருப்பதால் அது தாழ்ந்த நிலை. அதனால், அவனின் இயல்புகளால் தானே கெடுவான்.


எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்

தண்பதத்தான் தானே கெடும்.” --- குறள் 548; அதிகாரம் – செங்கோன்மை


எண் = எளிய; எண்பதத்தான் = காட்சிக்கு எளியனாகி; ஓரா = ஆராய்ந்து; முறை செய்யா = செய்ய வேண்டிய உதவிகளைச் செய்யாத; மன்னவன் = தலைமை; தண் = தாழ்ந்து; தண்பதத்தான் = பழியும், பாவமும் எய்தி; தானே கெடும் = தானாக கெடுவான்.


“கெடுவான்” என்று முடித்திருக்க வேண்டும், ஆனால் “கெடும்” என்று அஃறினை முடிவு கொடுத்திருக்கிறார். அழிச்சாட்டியம் செய்து அழியும் அவனுக்கு, என்ன மரியாதை என்று நினைத்து, அஃறினை முடிவு கொடுத்திருப்பார் போலும்!


அல்லவை செய்வார்களுக்கு அறமே கூற்றம். அதாவது, அறமே அழிவைத்தரும் என்பது இயற்கை விதி.


விளம்பிநாகனார் பெருமான் நான்மணிக் கடிகையில் ஒரு பாடல் அமைத்துள்ளார்:


“கல்லா ஒருவர்க்குத் தம்வாயிற் சொற்கூற்றம்

மெல்லிலை வாழைக்குத் தானீன்ற காய்கூற்றம்

அல்லவை செய்வார்க்கு அறங்கூற்றம் கூற்றமே

இல்லத்துத் தீங்கொழுகு வாள்” பாடல் 84; நான்மணிக் கடிகை


கல்லாதவர்களுக்கு அவர்களின் சொற்களே அழிவைத்தரும். அது போல,

வாழைக்கு அதன் குலை அழிவைத் தரும்; அல்லவை செய்பவர்களுக்கு இயற்கை நியதியே அழிவைத் தரும்; அழிவைத் தரும் மற்றொன்று, இல்லத்தில் இருந்து கொண்டு தீங்கிழைக்கும் மனைவி என்று முடிக்கிறார்!


முதல் மூன்று, சொந்தக் காலில் சூனியம். நான்காவது வந்தக் காலில் சூனியம். அவரவர்கள் முயற்சியால் அது வந்திருக்கலாம் அல்லவா என்று கேட்கிறீர்களா, அதுவும் சரிதான்! விதி யாரை விட்டது! இந்த விதி இரு பாலாருக்கும் பொருந்துமா என்றால் ஏன் பொருந்தாது என்பதுதான் என் கேள்வி என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்!


மீண்டும் சந்திப்போம்.


நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.






Post: Blog2_Post
bottom of page