top of page
Search

ஒலித்தக்கால் என்னாம் ... 763, 762, 764

14/07/2023 (862)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

மலிவாகக் கிடைக்கிறதே என்று எலிக்கூட்டங்களைப் படையாகச் சேர்த்துக் கொள்ளக் கூடாது!

இப்படிக்கூட நம் வள்ளுவப் பெருந்தகை சொல்லியிருப்பாரா என்பதுதானே உங்கள் கேள்வி? சொல்லியிருக்கிறார்!


இதைவிட இன்னும் ஒரு படி மேலேச் சென்று சொல்கிறார். கடல் போல எலிகள்கூடி எக்காளமிட்டாலும் ஒரு பாம்பு சீற அனைத்தும் அலறி அடித்துச் சிதறும் என்கிறார்.


ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை

நாகம் உயிர்ப்பக் கெடும்.” --- குறள் 763; அதிகாரம் – படை மாட்சி


உவரி = உப்பு நீர் நிறைந்த கடல்; உவரி எலிப்பகை ஒலித்தக்கால் என்னாம் = கடல் போல எலிகள் திரண்டு வந்து எக்காளமிட்டாலும் என்னாகும்?; நாகம் உயிர்ப்பக் கெடும் = பாம்பானது எழுந்து ஒரு சீறு சீறினால் அந்த எலிகள் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.


கடல் போல எலிகள் திரண்டு வந்து எக்காளமிட்டாலும் என்னாகும்? பாம்பானது எழுந்து ஒரு சீறு சீறினால் அந்த எலிகள் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.


நமக்கு எலிகளைப் போல படைகள் தேவையில்லை என்பது கருத்து!


சரி, வல்லவர்கள் நமக்குத் துணையாக இருக்கிறார்கள் என்றால் அது மட்டும் போதுமா? இல்லை. அவர்கள் எத்தன்மையவர்கள் என்பதும் முக்கியம்.


ஒரு சோதனை என்று வரும்போது அதனால் வரும் இன்னல்களுக்காக அஞ்சாத, அசராத பேராற்றல், தம்மை அழித்துவிடுமோ என்பது போன்ற கடுமையான களங்கள் பல கண்டுத் தேர்ந்தவர்களுக்கல்லால் வாய்க்காது. அதாவது களம் பல கண்டு வென்றவர்கள் வேண்டும் என்றார் குறள் 762 இல். காண்க 13/07/2023 (862). மீள்பார்வைக்காக:


உலைவிடத் தூறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்

தொல்படைக் கல்லால் அரிது.” --- குறள் 762; அதிகாரம் – படை மாட்சி


சரி, இது மட்டும் போதுமா என்றால் இல்லை. உடலில் உறுதி இருந்தாலும் உள்ளத்திலும் உறுதி வேண்டும். பகைவனின் சூழ்ச்சிகளால் மனதைக் குழப்பிக் கொள்ளாமலும், பகைவன் விரித்த வலையில் வீழ்ந்துவிடாத வீரமுமாக இருக்க வேண்டும். அவ்வழி வந்தவர்கள் உள்ள படைதான் செம்மையான படை.



அழிவின் றறைபோகா தாகி வழிவந்த

வன்க ணதுவே படை.” --- குறள் 764; அதிகாரம் – படை மாட்சி


அழிவு இன்றி = மனதில் எந்தக் குழப்பமும் இன்றி; அறை போகாதது ஆகி = (சூழ்ச்சி என்னும்) அறைக்கு விலை போகாதது ஆகி; வழிவந்த = அந்த வழியில் வந்த; வன்கண் = பேராற்றல்; அதுவே படை = உடையவர்களே படை வீரர்களாக இருக்க வேண்டும்.


மனதில் எந்தக் குழப்பமும் இன்றி, சூழ்ச்சி என்னும் அறைக்கு விலை போகாதது ஆகி, அந்த வழியில் வந்த பேராற்றல் கொண்டதுவே படை.


படை வீரனின் நடவடிக்கைகளில் இருந்து அவனின் பண்புகளை அறியலாம்.

“Tell me what you did today, and I will tell you who you are.”


“இன்று நீங்கள் என்ன செய்தீர்கள் என்று சொல்லுங்கள், நீங்கள் யார் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.” என்பது ஒரு பழமொழி.


மேற்கண்டக் குறளுக்கு அறிஞர் பெருமக்கள் வேறு விதமாக பொருள் கண்டிருக்கிறார்கள்.


அதாவது, “வழி வந்த” என்பதற்கு பெரும்பாலான அறிஞர் பெருமக்கள் பரம்பரையாக அஞ்சாமை முதலான குணங்களோடு வந்தவர்கள் என்று பொருள் காண்கிறார்கள்.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Post: Blog2_Post
bottom of page