top of page
Search

காக்கை பகல்வெல்லும் கூகை ... 527, 481

23/12/2022 (659)

“கா, கா, கா

ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக அன்போடு ஓடி வாங்க

என்ற அனுபவப் பொருள் விளங்க, அந்த அனுபவப்பொருள் விளங்க

காக்கை அண்ணாவே நீங்க அழகான வாயால் பண்ணாகப் பாடுறீங்க

காக்காவென ஒண்ணாகக் கூடுறீங்க வாங்க கா, கா, கா ...” பராசக்தி திரைப்படம் (1952), உடுமலை நாராயணகவி அவர்களின் வரிகள், இசைமேதை சுதர்சனம் அவர்களின் இசை


காக்கையை இரண்டு இடங்களில் கையாள்கிறார் நம் பேராசான்.

ஒரு குறளை நாம் ஏற்கனவே சிந்தித்துள்ளோம். காண்க 04/04/2021. மீள்பார்வைக்காக:


பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்

வேந்தர்க்கு வேண்டும் பொழுது.” ---குறள் 481; அதிகாரம் - காலமறிதல்


கூகையைக் காக்கை = ஆந்தையைக் காக்கை; பகல்வெல்லும் = பகலிலே வென்று விடும்; இகல் = மாற்றார்(ஐ); வெல்லும் வேந்தர்க்கு = வென்று விட நினைக்கும் தலைவனுக்கு; பொழுது வேண்டும் = சரியான காலம் வேண்டும்.


அடுத்து, இந்த சுற்றந்தழால் அதிகாரத்தில் பயன்படுத்துகிறார்.


காக்கை கரவா கரைந்து உண்ணும் என்கிறார். ‘கரவா’ என்றால் ‘ஒளிக்காமல்’, ‘மறைக்காமல்’ என்று பொருள் என்று நாம் பார்த்துள்ளோம்.


அதுபோல, எந்த ஒரு தலைமையும் தமக்கு கிடைத்தப் பொருள்களை அதை ஆக்கிய சுற்றங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்கிறார் நம்பேராசான்.


எதற்கு செய்ய வேண்டும்? அப்போதுதான் பொருள் பெருகும் ஆக்கம் மேலும், மேலும் தலைமைக்கு உண்டாகுமாம்!


காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்

அன்ன நீரார்க்கே உள.” --- குறள் 527; அதிகாரம் – சுற்றந்தழால்


காக்கை கரவா கரைந்து உண்ணும் = காக்கைகள் இரையைக் கண்டபோது மறைக்காமல் தம் இனத்தை அழைத்துவிட்டு சேர்ந்து உண்ணுமாம்;

அன்ன நீரார்க்கே ஆக்கமும் உள = அதுபோல உள்ள தலைமைக்கே பகை இன்மையும், பெருஞ்செல்வமும் பெருகுமாம்.


காக்கைகள் இரையைக் கண்டபோது மறைக்காமல் தம் இனத்தை அழைத்துவிட்டு சேர்ந்து உண்ணுமாம். அதுபோல, பகிர்ந்தளிக்கும் உள்ளம் உள்ள தலைமைக்கே பகை இன்மையும், பெருஞ்செல்வமும் பெருகுமாம்.


பொருள் பெருக பகிர்ந்தளிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது.


மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.


உங்கள் அன்பு மதிவாணன்




Post: Blog2_Post
bottom of page