top of page
Search

கொடையளி செங்கோல் 390, 389

02/07/2023 (850)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

இன்சொல் பேசி, காட்சிக்கு எளியனாக இருந்தால் அந்தத் தலைவனை உயர்த்திப் பேசுவார்கள் என்றவர் மேலும் அவன் மக்களுக்கு முறை செய்து காப்பாற்றினால், அதாவது வேண்டியன செய்து பாதுகாத்தால் அவனை இறை என்றே ஏற்றுவார்கள் என்றார்.


சரி இன்சொல் பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதுமா? மக்களின் சொல்களையும் அவன் கேட்க வேண்டாமா என்றால் அது முக்கியம்தான். அதைவிட முக்கியமானது காதுக்கு கசப்பான விமர்சனங்களும் அறிவுரைகளையும்கூட காது கொடுத்து கேட்கும் பண்பு தலைமைக்கு இருக்கணுமாம். அப்படி இருந்தால், அந்தத் தலைமையின் கீழே இந்த உலகம் இருக்க நினைக்குமாம். இந்தக் குறளை நாம் முன்பு ஒரு முறை சிந்தி த் துள்ளோம். காண்க 05/05/2021 (108). மீள்பார்வைக்காக:


செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கு முலகு.” --- குறள் 389; அதிகாரம் - இறைமாட்சி

அவன் கொடையின் கீழ் இந்த உலகம் தங்கினால் மட்டும் போதுமா என்றால் இல்லையாம்! இன்னும் அவனுக்கு புகழும் பெருமையும் சேர வேண்டுமாம். அவன் மற்ற வேந்தர்களுக்கெல்லாம் ஒரு உதாரணமாகவும் இருக்க வேண்டுமாம். சரி அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் நான்கு குறிப்புகளைக் கொடுக்கிறார். இந்தக் குறளும் நாம் முன்பு பார்த்த ஒரு குறள்தான். காண்க 13/01/2023 (680). மீள்பார்வைக்காக:


தலைமைக்கு நான்கு செயல்களை வரையறுக்கிறார். அவையாவன: இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுதல், அனைவரிடமும் இன்சொல் பேசி கருணையோடு இருத்தல், முறையான ஆட்சி, மக்களைக் காத்தல் இந்த நான்கையும் ஒழுகினால் அதுதான் வேந்தர்க்கு பெருமை, புகழ் என்கிறார்.


கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்

உடையனாம் வேந்தர்க் கொளி.” --- குறள் 390; அதிகாரம் - இறைமாட்சி


கொடை = இல்லாதவர்களுக்கு கொடுத்தல்; அளி = கருணை, இன்சொல்; செங்கோல் = முறையான ஆட்சி; குடி ஓம்பல் = மக்களைக் காத்தல்; நான்கும் உடையனாம் = இந்த நான்கு பண்புகளையும் ஒருங்கே பெற்றவன் வேந்தர்களுக்கு எல்லாம் ஒரு எடுத்துக் காட்டு போன்றவன். அதுதான் பெருமை, புகழ்.


இறைமாட்சி இனிதே நிறைவுற்றது.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.






Post: Blog2_Post
bottom of page