top of page
Search

கண்ணின் பசப்போ ... 1240, 02/04/2024

02/04/2024 (1123)

அன்பிற்கினியவர்களுக்கு:

இருவரும் இறுகத் தழுவி இருந்த நிலையில் எங்களின் ஊடாக, மெல்லிய குளிர்ந்த காற்று நுழைய, அந்தச் சிறிய இடைவெளியையும் தாங்கிக் கொள்ளாமல் என்னவளின் கண்களில் இருந்து பெருமழை பெருக அவை பொலிவிழந்தன என்றான்.

 

கண்களில் பெருமழை! கண்கள் பொலிவிழந்தன! எதனால்? என்ற வினாவிற்கு அடுத்து வரும் பாடலில் விடையளிக்கிறான்.

 

ஒளி பொருந்திய நெற்றி களையிழந்ததனைக் கண்டு அவளின் கண்கள் பசப்புற்றுத் துன்பமும் அடைந்தன!

 

ஒருவரின் கண்கள் கண்ணாடியின் துணையில்லாமல் அவர்களின் நெற்றியைக் காண முடியமா? முடியாது. அவன் தளர்த்தியதோ, மெல்லிய காற்று வெளியிடை! ஆங்கே, கண்ணாடிக்கு இடமில்லை!

 

அவள் நெற்றி வியர்த்தது. அதனைக் கண்ட அவனின் கண்கள் கலங்கின.

அவன் கண்களில் அவளின் நெற்றி தெரிந்ததோ? அப்படித்தான் இருக்க வேண்டும்.

 

ஒள் நுதல், அஃதாவது, ஒளி பொருந்திய நெற்றி களையிழந்ததனை அவனின் கண்களில் காண்கிறாள். அவன் கண்கள் கலங்குவதனையும் காண்கிறாள்.  இப்பொழுது, அவளின் கண்களில் கலக்கம் குடியேறுகிறது.

 

கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே

ஒண்ணுதல் செய்தது கண்டு. – 1240; உறுப்பு நலன் அழிதல்

 

பசப்பு = கலக்கம்; பருவரல் = துன்பம்; ஒள் நுதல் செய்தது கண்டு = அவளின் ஒளி பொருந்திய நெற்றி களையிழந்ததனை, அவனின் கண்களில், கண்டு; கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே = கலக்கமுற்று அவளின் கண்கள் மேலும் துன்பம் அடைந்தனவே.

 

அவளின் ஒளி பொருந்திய நெற்றி களையிழந்ததனை அவனின் கண்களில் கண்டு, கலக்கமுற்று அவளின் கண்கள் மேலும் துன்பம் அடைந்தனவே.

 

இதனை எண்ணிப் பார்க்கும் அவன் விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று எண்ணி விரைவாகத் தன் பணிகளை முடிக்க முயல்கிறான்.

 

அறிஞர் பெருமக்கள் சிலரின் உரைகளைப் பார்ப்போம்.

 

நாவலர் நெடுஞ்செழியன்: தோழியின் கூற்றாகச் சொல்கிறார்:

 

தலைவனின் பிரிவாற்றாமையைத் தாங்க முடியாமல், தலைவியின் நெற்றியானது பசலை நிறம் அடைந்ததோடு மட்டுமல்லாமல், அவளது கண்களின் பசலை நிறமும் மிகவும் துன்பத்தைத் தருவதாக அமைந்திருக்கிறது என்று தோழி, தலைவியின் உறுப்புகளின் நலன் அழிந்திருப்பதைக் கண்டு கலங்கிக் கூறுகிறாள்.

 

புலவர் புலியூர் கேசிகன்: காதலியின் ஒளியுள்ள நெற்றி பசலை நிறம் அடைந்ததைக் கண்டு, அவளுடைய கண்களின் பசலை நிறமும் மேலும் பெருந்துன்பம் அடைந்துவிட்டது!

 

மணக்குடவர் பெருமான்: ஒள்ளியநுதல் பசந்ததுகண்டு கண்ணிலுண்டான பசலை கலங்கிற்று.

 

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.




Post: Blog2_Post
bottom of page