top of page
Search

களவினா லாகிய ஆக்கம் ... 283, 285

01/01/2024 (1031)

அன்பிற்கினியவர்களுக்கு:

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

கள்ளாமையில் மூன்றாவது பாடலை நாம் முன்பொருமுறை சிந்தித்துள்ளோம். காண்க 27/05/2022. மீள்பார்வக்காக:


களவினா லாகிய ஆக்கம் அளவிறந்

தாவது போலக் கெடும். - 283; - கள்ளாமை

களவினால் அடைந்தவை பயன் இருப்பது போலத் தோன்றி அளவிற்கு அதிகமாக கெடுத்துவிடும்.

 

ஓய்வெடுக்கும் பருவத்தில் பொருள்களின் மேல் உள்ள பற்றினைத் துறக்க வேண்டும் என்பது அடிப்படை. பொருள்களின் மேல் உள்ள பற்று இருவகைப் படும். அவை யாவன: முதல் வகை - தாம் ஈட்டிய பொருள்களின் மேல் உள்ள பற்று; இரண்டாம் வகை – பிறர் பொருளைக் கள்ளத்தால் கள்வேம் என்பது.

 

இதில் இரண்டாம் வகைதான் முதலில் துறக்க வேண்டியது. அதுவே முடியாவிட்டால், தாம் ஈட்டிய பொருள் மீது இருக்கும் பற்றினை நீக்குவது எங்ஙனம் சாத்தியம்?

 

அன்பு என்பது இல்லறத்தின் பண்பு. அன்பு இருக்கும் நெஞ்சத்தில் வஞ்சனை இருக்காது. அன்பு என்பது நமக்குத் தொடர்புடையவர்களிடம் செலுத்துவது. அவ்வாறு, அன்பு பெருகப் பெருக மற்றவர்களிடமும் அன்பு விரியும். அருளாகும். இஃது அன்பின் விளைவு. இல்லறத்தின் பயன்.

 

ஒருவரின் உடைமையைக் கவருவது என்பது எந்தவிதச் சந்தேகமும் இல்லாமல் அன்பற்ற செயல். நாம் கவருவதால் அவர் துன்பம் அடைவார் என்பது தெரிந்தும் செய்யும் வன்முறை. அன்பே மலராதபோது அருள் எங்கே துளிர்ப்பது என்கிறார் நம் பேராசான்.

 

அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்

பொச்சாப்புப் பார்ப்பார்க ணில். – 285; - கள்ளாமை

 

பொச்சாப்பு = மறவி; அருள் கருதி அன்புடையர் ஆதல் = அருள் என்னும் பயன் விளைய வேண்டும் என்று கருதி அன்பினைப் பெருக்குவோரிடம்; பொருள் கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல் = பிறரின் பொருளைக் கவர சரியான தருணத்தை நோக்கி, அஃதாவது, எப்போது அவர் கவனம் தவறுவார் நாம் எளிதாக அவரின் பொருளைக் கவர்ந்துவிடலாம் என்று பார்த்துக் கொண்டிருக்கும் கீழான பண்பு இருக்காது

 

அருள் என்னும் பயன் விளைய வேண்டும் என்று கருதி அன்பினைப் பெருக்குவோரிடம், பிறரின் பொருளைக் கவர சரியான தருணத்தை நோக்கி, அஃதாவது, எப்போது அவர் கவனம் தவறுவார், நாம் எளிதாக அவரின் பொருளைக் கவர்ந்துவிடலாம் என்று பார்த்துக் கொண்டிருக்கும் கீழான பண்பு இருக்காது.

 

“அண்ணன் எப்போ போவான்; திண்ணை எப்போது காலியாகும்” என்று பார்த்துக் கொண்டு இருக்கும் பண்பு, துறவறத்தை முயலுவோரிடம் இருக்கக் கூடாது என்கிறார்.


பிறர் பொருளைக் கள்ளுபவரிடம் அன்பும் இல்லை, அருளும் தோன்றாது என்பது கருத்து.

 

கள்ளுதல் என்பது ஏதோ பிறரிடம் உள்ள பொருளைக் கவர்வது என்பது மட்டுமன்று. பிறர்க்கு வரும் வாய்ப்பினைத் தட்டிப் பறிப்பது, மற்றவர்கள் வளர்வதை விழுந்து தடுப்பது, பிறர் தலையில் மிளகாய் அரைப்பது - ஏமாற்றிப் பிழைப்பது, பிறர் வளராமல் இருக்கட்டும் என்று நினைப்பது, பிறர் வளர வழிகாட்டாமல் வாய் மூடி நிற்பது உள்ளிட்டன. இவை எல்லாமே திருட்டுச் செயல்கள்தாம். அஃதாவது, கள்ளுதல்தாம். இவற்றுக்குக் காரணம், தாம் மட்டுமே பெரிய ஆளாக இருக்க வேண்டும் என்ற பற்று! இது நிற்க.

 

இந்த ஆண்டு அனைவர்க்கும் இனிய ஆண்டாக, பயனுள்ள ஆண்டாக தொடரட்டும். நாமும் தொடர்வோம் நாளை.


நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Post: Blog2_Post
bottom of page