top of page
Search

செறிவறிந்து சீர்மை பயக்கும் ... 123, 27

04/10/2023 (942)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

அறிவறிந்து அடக்கம் தேவை என்கிறார்.


அறிவு என்றால் என்ன? எதனால் அறிந்து கொள்கிறோம்? எதனை நாம் அறிந்து கொள்ள வேண்டும்? அறிந்து கொண்டால் என்ன நிகழும்?


திருக்குறளில் மிக ஆழமானக் குறள் என்றால் நீத்தார் பெருமையில் அமைந்திருக்கும் குறள். காண்க 10/08/2021 (168). மீள்பார்வைக்காக:


சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு.” --- குறள் 27; அதிகாரம் – நீத்தார் பெருமை


அறிதல் ஏற்படுவது சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐந்து வழிகளில்தாம். நாம் சாய்ந்துவிடுவதும் இவை மீது நமக்கு ஏற்படும் அதீதக் காதலினால்தான்!


சரி, அதற்கு என்ன செய்ய வேண்டும்?


அடக்க வேண்டும்.


எதனை அடக்க வேண்டும்?


அந்த உனர்ச்சிகளிக்குக் கருவியாக இருக்கும் மெய், வாய், கண், மூக்கு, செவியினை அடக்க வேண்டும். இப்படியே படிப்படியாகத் தோண்டிக் கொண்டே போனால் இதன் வகைகள் விரிவது தெரியும். உண்மையான உண்மை விளங்கும். அதுதான் அறிவு. அதனை அறிந்துகொண்டால் அவர்களுக்கு இந்த உலகம் அடங்கும்.


அஃதாவது, சுருக்கமாக, நாம் அடங்கினால் இந்த உலகம் நமக்கு அடங்கும். அந்த அறிவின் செறிவு அறிந்து சிர்மை பயக்கும் என்கிறார் நம் பேராசான்.


இந்தக் குறள் தான் வாழ்க்கைக்கு 1, 2, 3. குறள். அதன் எண்ணும் அவ்வாறே!

அஃதாவது அடிப்படை.


செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்

தாற்றின் அடங்கப் பெறின்.” --- குறள் 123; அதிகாரம் – அடக்கமுடைமை


அறிவறிந்து ஆற்றின் = சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் முதலியனவின் வகைகளை அறிந்து அதன்படி நாம் செயல்களைச் செலுத்தி; அடங்கப் பெறின் = மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐந்து புலன்களும் அடங்கப் பெற்றால்;

செறிவறிந்து = அந்த அறிவின் செரிவினை அறிந்து; சீர்மை பயக்கும் = அனைவர்க்கும் நன்மை விளையும்.


சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் முதலியனவின் வகைகளை அறிந்து அதன்படி நாம் நம் செயல்களைச் செலுத்தி மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐந்து புலன்களும் அடங்கப் பெற்றால் அந்த அறிவின் செறிவினை அறிந்து அனைவர்க்கும் நன்மை விளையும்.


அடக்கம் ஐந்திலும் இருக்கவேண்டும் என்று சொன்னவாறு.


திருக்குறளில் இருக்கும் ஏழு சொல்களை நாம் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுக்கலாம். அதே சமயம், ஆராய்ச்சியாளர்களுக்கும் பல ஆண்டுகளுக்கும் ஆராயக் கொடுக்கலாம். அவ்வாறு அதன் எல்லை பரந்து விரிந்துள்ளது என்பது ஆச்சரியமான ஒன்றுதான்.


அதனால்தான் இடைக்காடர் பெருமான் “கடுகைத் துளைத்து” என்றும், ஔவை பெருந்தகை “அணுவைத் துளைத்து ஏழு கடலைப் புகுத்தி குறுகத் தரித்தக் குறள்” என்றும் குறிப்பினைக் காட்டினர்.


நமது பள்ளி பாடத் திட்டத்தில், சில குறள்களையாவது அதன் ஆழத்தையும் விரிவையும் உணரும் வகையில் தொடர்ந்து ஒவ்வொரு வகுப்பிலும் விரிக்க வேண்டும்.


அவ்வாறு விரிக்கும் முறையை நம் மாணவர்கள் அறிந்து கொண்டால் பின்னாளில் அனைத்துக் குறள்களையும் அவர்கள் விரித்துக் கொள்வார்கள்.


மனப்பாடப் பகுதி முக்கியம்தான் என்றாலும் அதனை கல்லூரிவரை தொடர்ந்து எண்ணிக்கையைக் கூட்டிக் கொண்டே செல்வது என்பது மீள்பார்வைக்கூரியது.


இளங்கலை - தமிழில் (BA – Tamil) கிட்டத்தட்ட 300 குறள்கள் மனப்பாடப் பகுதி போன்று அமைந்திருக்கிறது. அகலம் கிடைக்கலாம். ஆழமும் தேவை என்பது சிந்திக்கத்தக்கது. முதுகலையில் எப்படியோ? தெரியவில்லை.


எப்படித்தான் இளங்கலை - தமிழை நானும் தேறிவிட்டேன் என்பதை உங்களுக்குச் சொல்வது!


படிக்கப் படிக்க அறியாமைதான் மிஞ்சுகிறது. “அறிதொறும் அறியாமை கண்டற்றால்” என்றார் நம் பேராசான் (குறள் 1110).


மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.







Post: Blog2_Post
bottom of page