top of page
Search

துன்புறூஉம் துவ்வாமை நயன்ஈன்று நன்றி 94, 97

20/09/2023 (928)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

எல்லாரிடமும் இன்சொல் பேசுபவர்களுக்கு ஒன்று இல்லாமல் போகுமாம்! சொல்கிறார் நம் பேராசான். அது என்ன?


அஃதாவது, அவர்களுக்கு துன்பம் விளைவிக்கும் துவ்வாமை இல்லாமல் போகுமாம்.


துய் என்றால் நுகர். துவ்வாமை என்றால் நுகராமை. நுகர்தல் என்பது ஐந்து புலன்களின்பால் பெறும் உணர்வு. அவை, இன்பம் தருவதும் கூடும்; துன்பம் தருவதும் கூடும்.


இன்சொல் பேசுபவர்களுக்குத் துன்பம் விளைவிக்கும் நுகர்தல் இல்லாமல் போகுமாம். அஃதாவது, இன்பம்தான் எந்நாளும் என்கிறார் நம் பேராசான்!


துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்

இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.” --- குறள் 94; அதிகாரம் – இனியவைகூறல்


யார்மாட்டும் இன்புறூஉம் இன்சொலவர்க்கு = எல்லாரிடமும் இன்பம் விளைவிக்கும் இன்சொல் பேசுபவர்க்கு; துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் = துன்பத்தை மிகுவிக்கும் வறுமை என்பது இருக்காது.


எல்லாரிடமும் இன்பம் விளைவிக்கும் இன்சொல் பேசுபவர்க்கு துன்பத்தை மிகுவிக்கும் வறுமை என்பது இருக்காது.


நம்மாளு: அதுதான் “வித்தும் இடல் வேண்டும் கொல்லோ” என்று சொல்லிவிட்டாரே முன்பே!


ஆசிரியர்: சரியாகச் சொன்னீர். ஆனால், இதில் உள்ள நுணுக்கம் எந்தப் புலன்களுக்கும் துன்பமே இருக்காது என்கிறார்.


குறள் 95 இல் பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணி என்றார். காண்க 02/08/2022 (522).


அல்லவைதேய அறம் பெருகும் நல்லவை நாடி இனிய சொலின் என்றார் குறள் 96 இல். காண்க 21/02/2021 (35).


சொல்லும் சொல்லுக்கு மேலும் ஒரு குறிப்பினைத் தருகிறார் குறல் 97 இல். அஃதாவது, சொல்லும் சொல் பயனைத் தர வேண்டும் என்கிறார். அது மட்டுமல்ல, அச் சொல் எப்போதும் இனிமையான பண்பினைவிட்டு விலகாமலும் இருக்க வேண்டும் என்கிறார்.


அவ்வாறு சொன்னால் இரண்டு கிடைக்குமாம் சொன்னவர்க்கு!

முதலாவதாக, அவர்கள் எல்லாராலும் விரும்பப்படும் நிலையைத் தந்து இனிமையைத் தருமாம்; இரண்டாவதாக, இன்சொல் கேட்டவர்கள் நன்றிக்கடன் பட்டவர்களாக இருப்பர்.


மணக்குடவப் பெருமான் இந்தக் குறளுக்கு உரையாகச் சொல்வது என்னவென்றால் “ பிறரால் விரும்பப் படுதலையும் பயந்து, பொருளையும் பயந்து, அறத்தினையும் பயக்கும், குணத்தினின்று நீங்காத சொல் என்றவாறு” என்கிறார்.


அந்தக் குறளைப் பார்ப்போம்.


நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று

பன்பின் தலைப்பிரியாச் சொல்.” --- குறள் 97; அதிகாரம் – இனியவை கூறல்


பயன் ஈன்று பன்பின் தலைப் பிரியாச் சொல் = பயனைத் தந்து இனிமையான பண்பிலிருந்து விலகாமல் சொல்லும் சொல்; நயன் ஈன்று நன்றி பயக்கும் = இனிமையை அளித்து நன்மையையும் உண்டாக்கும்.


பயனைத் தந்து இனிமையான பண்பிலிருந்து விலகாமல் சொல்லும் சொல் இனிமையை அளித்து நன்மையையும் உண்டாக்கும்.


பரிமேலழகப் பெருமானின் உரை: ஒருவனுக்கு இம்மைக்கு நீதியையும் உண்டாக்கி மறுமைக்கு அறத்தையும் பயக்கும்; பொருளால் பிறர்க்கு நன்மையைக் கொடுத்து இனிமைப் பண்பின் நீங்காத சொல்.


அஃதாவது, இன்சொல் இம்மை, மறுமைப் பலன்களை அளிக்கும் என்கிறார்.

சுருக்கமாக: இன்சொல்லால் ஏகப்பட்ட இலாபம் கிடைக்குமாம்.


ஆகையினால், பயன் தரும் இன்சொல் வஞ்சனை இல்லாமல் நாளும் பேசுவோம்!


மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.




Post: Blog2_Post
bottom of page